கிழக்கு மாகாண கரையோரங்களை அழித்தொழிக்கும் மணல் அகழ்வு

vaharai
vaharai

மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் வாகரை,வெருகல் எனும் இரண்டு பிரதேச செயலகப் பிரதேசத்திற்கு உரித்தான கிழக்குமாகாண கரையோரப் பிரதேசத்தின் மாங்கேணி முதல் இலங்கைத்துறை வரையான பகுதியில் மணல் அகழ்வு செயற்திட்டமொன்றை ஆரம்பிக்க Al-Chemy heavy metal(Pvt)LTD எனும் தனியார் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

கரையோரப் பிரதேசங்களில் ஒன்று சேர்ந்துள்ள இல்மனைட், ரூடய்ல், காணட் மற்றும் சர்கோன் எனும் கணிமங்களை அகழ்வு செய்து ஏற்றுமதி செய்ய இச் செயற்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. முதலீட்டுச் சபையால் அனுமதிக்கப்படாத ஒரு நிறுவனமான Al-Chemy heavy metal(Pvt)LTD கம்பனியானது Emmar எனும் டுபாயை மையமாக கொண்டியங்கும் கண்ணாடியிலான வானளாவிய உயரமான கட்டிடங்களை ஒப்பந்த அடிப்படையில் அமைக்கும் ஒரு தாய்க்கம்பனியின் கிளையாகும்.

இப்பன்னாட்டுக் கம்பனியின் மூலம் 10,000 மில்லியன் ஆரம்பத்தொகையாக முதலீடு செய்து நாளொன்றுக்கு 600 தொன்(ஒரு பார ஊர்தி 4தொன்) வீதம் 30 வருடங்களுக்கு கனிய மணல் அகழ்வு மற்றும் ஏற்றுமதிச் செயற்திட்டத்தை ஆரம்பிக்க ஆயத்தமாகி வருகிறது.

கடந்த காலம் முழுவதும் அம்பாந்தோட்டை, மாகம கிரிந்த கரையோரப் பகுதிகளில் இந்த அகழ்வு நடவடிக்கைகளுக்காக ஒரு இந்திய நிறுவனம் பெருமுயற்சி எடுத்து வருவதோடு பாதிப்பை ஏற்படுத்தும் இச் செயற்திட்டத்தை இடை நிறுத்த பிரதேச மக்கள் பாரிய போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர்.

மாங்கேணி முதல் இலங்கைத்துறை முகத்துவாரம் வரையான கரையோர பிரதேசங்களில் இருந்து அகழ்ந்து எடுக்கப்படும் கனியமணல் சுத்திகரிப்புக்கான நீர்த்தேவையை பூர்த்தி செய்ய மகாவலி கங்கையினுள் நிர்மானிக்கப்படவிருக்கும் ஆழ்துளைக்கிணறுகள் மூலம் நீரைப்பெறும் திட்டத்தின் மூலம் வெருகல் பிரதேசத்தின் ஆற்றின் இரு மருங்கிலும் அண்டி சேனைப்பயிர் செய்யும் சுமார் 267 குடும்பங்கள் பாதிப்படைவார்கள்.

அத்துடன் மகாவலிகங்கையின் நீரேற்றுப்பிரதேசங்களில் மழைவீழ்ச்சி குன்றும் காலங்களில் கடலை நோக்கிய நீரோட்டம் குறைவடைவதால் கடற்பெருக்கின் மூலம் கடல்நீர் ஆற்று வாயினுள் நுழைந்து நன்னீர் உப்பு நீராக மாறும். இவ் ஆழ்துளைக்கிணறுகள் மூலம் இந்நிலைமை மேலும் மோசமடையும்.இதனால் மக்களின் அன்றாட குடிநீர் மோசமாக பாதிப்படைவதுடன் வன விலங்குகள், ஜீவராசிகளின் குடிநீர்த்தேவையும் கேள்விக்குறியே.

மேலும் நீர் வழங்கல் வடிகால் அமைச்சின் மூலம் நீரைப்பெறும் வெருகல் பிரதேச கிராமங்களான வெருகல் ,மாவடிச்சேனை, வட்டவான், ஈச்சிலம்பற்று, பூநகர், பூமரத்தடிச்சேனை, விநாயகபுரம், கறுக்காமுனை, ஆலங்குளம், இலங்கைத்துறை, ஆனைத்தீவு, முத்துச்சேனை, சூரநகர்,வாழைத்தோட்டம், இலங்கைத்துறைமுகத்துவாரம்(லங்காபட்டணம்) ஆகிய 11 கிராமசேவை பிரிவிலுள்ள கிராமங்களுக்கான நீர் விநியோகம் வெருகல் ஆற்றிலிருந்தே பெறப்படுகின்றது. இவ் ஆழ்துளைக்கிணற்றின் தாக்கத்தினால் ஏற்படும் உப்பு வெள்ளம் என்றழைக்கப்படும் கடல்நீர் உட்புகுத்தப்படும் செயற்பாட்டால் 4216 குடும்பங்களைச் சேர்ந்த 14627 மக்களின் உயிர்த்தேவைகளின் ஒன்றான குடிநீர் வினியோகமானது முற்றாக பாதிப்படையும்.

இந்த கனிய மணல் சேர்வு உள்ள ஆழமற்ற கடல் பகுதியில் கொரல் பாரை, கல்பாரை மற்றும் மணல் பாரை கட்டமைப்புக்கள் அமைந்துள்ளதோடு இப் பிரதேசம் மீன்கள் அதிகளவில் பெருகும் விஷேட வலயமாகும்.

இதற்கு அடுத்தபடியாக இத்தொழிற்சாலை அமையவுள்ள வெருகல் முகத்துவாரத்தை அண்டிய கரையோர வனப்பிரதேசம் கடல் ஆமைகள் முட்டை இடும் பிரதேசமாகும். இவ் கனிய மணல் அகழ்வு செயற்திட்டம் காரணமாக முழு கரையோரப் பிரதேசமும் மீனவர்களுக்கு மட்டுமன்றி அருகி வரும் இனம் என்று செந்தரவுப்புத்தகத்தில் (REDBOOK)இடம்பிடித்த கடல்ஆமை இனங்களும் அழிவை எதிர்நோக்கும்.

இக் கரையோரப் பிரதேசத்தில் வாழும் மீனவ மக்கள் மட்டுமன்றி கரையோரப் பகுதியில் அமைந்துள்ள அனைத்து பயிர் நிலங்களும், நீர்த் தேவையை பூர்த்தி செய்வது பூமி அடியில் உள்ள நீராகும். அல்லது கிணற்று நீர் மூலமாகும். இந்த கரையோரப் பிரதேசத்திற்கு அண்மையாக அமைந்துள்ள பயிர் நிலங்களில் மிளகாய், கத்தரி, சோளம், நிலக்கடலை ,கௌபி, பயறு, உளுந்து, வெள்ளரி, பொன்னாங்காணி , கங்குன் போன்ற பயிர் வகைகள் பயிரிடப்படுகிறது. இப்பிரதேசத்தில் சிறுபோகம், பெரும்போகம் இரண்டு போகங்களும் பயிர் செய்யப்படுவதோடு கனியப் பொருள் அகழ்வு காரணமாக இவையனைத்தும் நேரடியாகவே தாக்கங்களுக்கு உட்படுகின்றது.

கரையோரப் பிரதேசங்களில் இயந்திர உபகரணங்களின் மூலம் கனிய மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதன் காரணமாக கரையோர வலயத்தின் நிலப் பிரதேச மண்கட்டமைப்பு பாதிப்புக்குள்ளாகின்றது. இதன் காரணமாக மண்ணரிப்பு அதிகமாவதோடு, இயற்கையின் வடிகட்டல் பொறிமுறை பாதிப்படைகிறது இதனால் நிலத்தடி நீருடன் கடல்நீர் சேர்வதன் காரணமாக. குடிநீர் மட்டுமன்றி பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்தப்படும் நீரும் முழுமையாகவே உவர் நீராக மாறுகிறது.

இதன் பெறு பேறாக மீனவக் கிராமங்களில் வாழும் மக்கள் குடி நீர் தட்டுப்பாடு காரணமாகவும், பயிர் நிலங்களுக்கு சுத்தமான தண்ணீர் கிடைக்காமை காரணமாகவும் பிரதேச கிராமிய மக்களின் வாழ்வு முழுமையாகவே தாக்கங்களுக்கு உள்ளாவதுடன், கனரக வாகனங்களின் அதிர்வு காரணமாக மீனினங்கள் கரையை விட்டு ஆழ்கடலை நோக்கி நகரும் இதனால் கரையோர மீன்பிடி நேரடியாக பாதிப்படைவதோடு மீனினப்பெருக்கமும் குன்றும்.இதனால் இப்பிரதேசங்களின் மீனவர் குடும்பங்கள் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்குவர்.

கரையோர பாதுகாப்பு மற்றும் கடற்கரை வள முகாமைத்துவ சட்டம், சுரங்க மற்றும் கனிம வளச் சட்டம் மற்றும் தொல்பொருள் சட்டம் எனும் சட்டங்களுக்கமைய உரிய அனுமதியின்றி இச் செயற்திட்டத்தை செயற்படுத்த முடியாது. இதற்காக அமைச்சரவை அனுமதி மட்டுமன்றி மாவட்ட காணி பாவனைக் கமிட்டி, மாவட்ட தொடர்பு கமிட்டி என்பவற்றின் அனுமதியுடன் கிழக்கு மாகாண சபையின் அனுமதியையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமன்றி இப்பிரதேச மீனவ, விவசாய மக்களின் அபிப்பிராயங்களையும் பெற்றுக்கொள்வது அவசியமாகும். எனினும் இச்செயற்திட்டத்தை ஆரம்பிக்க முன் பிரதேச மக்களின் அபிப்பிராயங்களை பெற்றுக் கொள்ளவில்லை. உரிய சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு செயற்பாட்டின் அடிப்படையில் அனுமதி பெற்றுக் கொள்ளவும் இல்லை. இது மிக முக்கியமான பிரச்சினைக்குரிய நிலமையாகும்.

இச் செயற்திட்டம் கரையோர வலயத்தில் செயற்படுத்தப்படுவதாயின் முக்கியமாக கடற்கரைப் பாதுகாப்பு மற்றும் கடற்கரை வலய முகாமைத்துவ திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

கடந்த வருடம் 2018 ஐப்பசி மாதம் 12ம் திகதி கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத் திணைக்களத்தினூடாக இச் செயற்திட்டத்திற்கு அடிப்படை சுற்றாடல் ஆய்வு அறிக்கை ஏதுமின்றி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற பாரிய அளவிலான அகழ்வு செயற்திட்டத்திற்கு இது எவ்வகையிலும் போதுமானதாக இல்லை.

உரிய சுற்றாடல் அழிவுகள் பற்றிய ஒரு மதிப்பீடு இந்த அறிக்கையின் மூலம் மேற்கொள்ளப்படவில்லை. அடிப்படை சுற்றாடல் ஆய்வு அறிக்கை ஒன்றை இச்செயற்திட்டத்திற்காக தயார் செய்தல் காரணமாக மக்கள் அபிப்பிராயங்கள் பெற்றுக் கொள்ளப்படவும் இல்லை.

தனது விருப்பப்படி வழி நடாத்த கம்பனிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாது நல்லாட்சி எனும் கொள்ளை அரச இயந்திரத்தினுள் நிலை நிறுத்த இன்றைய அரசு இது தொடர்பாக முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.

இயற்கையை பாதுகாக்கும் பகுதியில் கடலரிப்பு போன்ற பல்வேறு விபத்துக்களை குறைப்பதற்கான ஒரு நிகழ்ச்சி செயற்படுத்தப்படும் என்றும், தொழிலின்மையை இல்லாதொழிக்கும் தொழிசாலைகள், மற்றும் சேவைகள் எனும் பகுதியில் கனிய வளங்களில் இருந்து அதிக பயனைப் பெற்றுக்கொள்வதற்காக நாட்டுக்குப் பொருத்தமான தேசிய மற்றும் வெளிநாட்டு முதலீட்டை பெற்றுக் கொள்ள உரிய உபாய மார்க்கச் சட்டங்களை வகுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

எனினும் இந்த பாரிய அளவிலான கனிய அகழ்வு செயற்திட்டம் காரணமாக கடலரிப்பு மேலும் அதிகமாவது மட்டுமன்றி இந்த கனிய வளங்களில் இருந்து ஆகக்கூடிய பயனைப் பெற்றுக்கொள்வதற்குப் பதிலாக கடலரிப்பு மேலும் அதிகமாவதோடு பூமி அடியில் உள்ள நீர் உவர் நீராக மாறிய ஒரு பூமியும், மீன்பிடித் தொழில் மற்றும் பயிர்ச் செய்கையை இழந்து இடம் பெயர்ந்து வாழும் மக்கள் தொகை அதிகரிப்பதுமாகும்.

ஆகவே கிழக்கு மாகாண பிரதேச கரையோரப் பகுதி மக்களின் வாழ்க்கையை மற்றும் உயிர் வளங்களை மட்டுமன்றி கனிய வளங்கள் அனைத்தையும் அழிவை நோக்கி இட்டுச் செல்லும் இந்த கனிய அகழ்வு செயல்திட்டத்தை இடை நிறுத்த உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அது மட்டுமன்றி இது போன்ற எதிர்காலத்திலும் நடைபெறவுள்ள பாதகமான கனிய வளக் கொள்ளையடிப்பை தடுத்து நிறுத்துவதற்காகவும் இலங்கையில் கனிய அகழ்வு நடவடிக்கையை நிலைபேறான மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காகவும் கனியவள ஆய்வு மற்றும் அகழ்வு தொடர்பாக ஒரு தேசிய கொள்கை வகுக்கப்பட வேண்டும்.

கனிய வளங்களின் உரிமை கம்பனிகளுக்கு வழங்கக் கூடாது. அதுமட்டுமன்றி அரசியல் தேவையின் அடிப்படையில் சட்ட விரோதமான முறையில் கிராமிய மக்களின் வாழ்வை அழித்தொழித்து, மக்களை இடம்பெயர வைத்து மேற்கொள்ளப்படும் அனைத்து அபிவிருத்தி திட்டங்கள் மட்டுமன்றி இது போன்ற அகழ்வுச் செயற்திட்டங்களை செயற்படுத்தாதிருக்கும் ஒரு நிலமை நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டும்.