மாவீரத்தின் பெருமையை வரும் தலைமுறையும் அறியட்டும்

nov.27 ...
nov.27 ...

இது கார்த்திகை 27,

வானம் மட்டுமல்ல தமிழர் நெஞ்சமும் கனக்கும் நாள். உறவுகள் – சொந்தங்கள் மட்டுமல்ல மேகமும் கண்ணீர் சிந்தும் நாள். தமிழன் தன்னைத் தானே ஆள்வதற்காகவும் – உரிமைகளுடன் வாழ்வதற்காகவும் நம் அண்ணன்களும் – அக்காக்களும் செங்குருதியை பூமிக்கு தாரை வார்த்து, மண்ணுக்கு விதையானமையை நினைவுகூரும் நாள்.

ஆம் இன்று மாவீரர் நாள்…

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் நினைவுகூரும் தினம்.

தாயக விடுதலைக்காக தங்களை ஆகுதியாக்கியர்களை நாம் நினைவுகொள்ளும் புனிதநாள். உலக நாடுகளையே வியப்பிலும் ஆச்சரியத்திலும் தள்ளி வீரச்செயல்களைப் புரிந்த சாதனை மனிதர்களை நினைவில் கொள்ளும் நாள். இனமானம் ஒன்றே வாழ்வு எனக் கொண்டு சுடுகலன் சுமந்து செங்களம் புகுந்தவர்களை நெஞ்சில் தரிக்கும் வீரத் திருநாள்.

புத்தகமூடை சுமந்த தோள்களில் கந்தகச் சட்டை தரித்து தற்கொடையாகி தியாகத்தின் எல்லைகளைக் கடந்த புனிதர்களை நினைவில் கொள்ளும் புண்ணிய நாள். எதிரியின் கோட்டைக்குள் அவரறியாமலே புகுந்து வேவு திரட்டி ஊன், உறக்கம் தொலைத்து விடுதலைக்கு தீ மூட்டியவர்களை ஒரு கணம் நினைவுக்குக் கொண்டுவரும் நன்நாள்.

எதிரியிடம் உயிருடன் பிடிபட்டு இனம் வீழக் காரணமாகி விடக்கூடாது என்பதற்காக நஞ்சுண்டு வீழ்ந்த ஈகையர்களை போற்றித் துதிக்கும் நாள். தமிழரின் நெஞ்சத்தில் இப்படிப் பல தியாகங்களையும், கொடைகளையும் தாங்கி நிற்கிறது இன்றைய நாளான நவம்பர் 27.

தமிழரின் போராட்ட வரலாறு நீண்டு விரிந்தது. மூன்று தசாப்தத்துக்கும் மேலாக நீண்ட போரில், தமிழ் மக்கள் தன்னாட்சியும் – உரிமைகளும் பெற்று வாழ தங்களையே ஆகுதியாக்கியவர்கள் மாவீரர்கள். வரித்துக் கொண்ட கொள்கைகளுக்காக மட்டும் கழுத்தில் நஞ்சு மாலை சுமக்கவில்லை – கைகளில் ஆயுதம் தூக்கவில்லை. தன்னினம் காக்கவும், உரிமைகள் பெற்று வாழவும் – தனது விதியை தானே எழுதவுமே ஆயுதம் ஏந்தினார்கள். கந்தகக் குண்டுகளை சுமந்து எதிரிகளின் பாசறைகளில் போய் விழுந்து சாவரசனையே அதிர வைத்தார்கள்.

தமிழரின் போராட்டம் எல்லையற்ற தியாகங்களை சந்தித்தது. சுமார் 50 ஆயிரத்துக்கும் மேலாக நீளும் மாவீரர் பட்டியலில் ஒவ்வொருவருக்குப் பின்னாலும் பெரும் சரித்திரம் மறைந்து கிடக்கின்றது. அவர்களின் தியாகங்கள் வெவ்வேறுபட்டவை. அவர்களின் பிறப்புக் கதைகளும் – வாழ்ந்த வாழ்வும் – குணங்களும் – வசதி வாய்ப்புகளும் ஒருவருடன் ஒருவர் ஒத்துப்போவதில்லை.

எப்போது அவர்கள் புலியானார்களோ – என்று தமது போராட்டப் பயணத்தை தொடங்கினார்களோ அன்றிலிருந்து கொள்கையாலும் – ஒழுக்கத்தாலும் – தியாகத்தாலும் – ஒன்றுபடுகிறார்கள். ஒவ்வொரு மாவீரரின் மரணத்துக்குப் பின்னாலும் கூட ஒவ்வொரு கதை உண்டு. அந்தக் கதைகள் ஆளுக்காள் வேறுபடும். ஆனால், அவர்கள் தம் சாவுக்காக வரித்துக் கொண்ட இலட்சியமும் – அடையும் இலக்கும் எப்போதும் ஒன்றாகவே இருந்தன. அது இனவிடுதலை என்ற பெரும் இலட்சியம் மட்டுமே.

தாயக விடுதலைக்கு முதல் வித்தாகிப் போன லெப்டினன்ட் சங்கர் வீரமரணமடைந்த நாளான 1982 நவம்பர் 27 ஆம் நாளே மாவீரர் நாள். சங்கரின் பின்னாக ஆயிரம் ஆயிரம் வேங்கைகள் வீரச்சாவை அணைத்துக் கொண்டார்கள். இந்த ஈகியர்களின் ஈகமும் – தியாகிகளின் தியாகமும் – புரிந்த மாவீரமும் வார்த்தைகளில் வடிக்க முடியாதவை. சொற்களில் அடக்க முடியாதவை. இத்தனை ஆயிரம் மாவீரர்களையும் நினைவுகூருவதற்கான அடையாள நாளாகவே இன்றைய நாள் உள்ளது.

இந்நாளில் தமிழினமே உணர்ச்சிப் பெருக்கால் பேச்சடங்கி – மூச்சடங்கி நிற்கும். தங்களின் உரிமைகளைப் பெற தொடர்ந்து போராடவும் – இலட்சியத்தை அடைவதற்கான சக்தியையும் – ஆன்ம பலத்தையும் தருமாறு வீரத் தெய்வங்களான மாவீரர்களை வணங்கும். இப்போதும் இப்படித்தான்.

இன்று தான் – தன்னினம் சந்தித்து நிற்கும் பெரும் சோதனையில் – இக்கட்டில் – தடைகளில் இருந்து மீள வழி தெரியாது – செய்வதறியாது திகைத்து நிற்கிறது. வழிநடத்திச் செல்ல தலைவன் இல்லை – படை நடத்திச் செல்ல தளபதிகள் இல்லை – அணிவகுத்துச் செல்ல புலி வீரர்கள் இல்லை – ஆனாலும், நம் விடுதலை வேட்கையும் உரிமைக் கோஷமும் இன்னமும் சாகவில்லை. தனது வேட்கையை – வேணாவாவை நிறைவேற்றத் தேவையான சக்தியையும் – ஆன்ம பலத்தையும் தருமாறு மாவீரர்களை தமிழினம் வேண்டி நிற்கிறது.

ஒரு தசாப்த காலத்தை இருளுக்குள் கழித்தாலும் – வழிநடத்த தலைவன் இல்லையென்றாலும் படை நடத்தத் தளபதிகள் இல்லையென்றாலும் அணிவகுக்க ஆயிரம் ஆயிரமாயிரமாய் தமிழ் மக்கள் திரண்டுள்ளார்கள். தங்களின் உரிமைகளைப் பெறவும் – இலட்சியத்தை அடையவும் சாத்தியமான வழிகள் அனைத்தையும் முயன்று கொண்டிருக்கிறார்கள்.

இதனால்தான்.தடைகள் ஆயிரம் எழுந்தாலும் அவற்றைத் தகர்த்து – தங்களுக்காக வீழ்ந்தவர்களை என்றும் நினைவில் கொண்டு – மாவீரர்களை நினைவேந்துவதை கடமையாக நினைத்து – அவர்களை நெஞ்சிருத்தி தங்கள் உரிமைகளை வேறு வடிவங்களில் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள் தமிழ் மக்கள்.

நாம் இல்லாவிடினும் என் மக்கள் உரிமைகள் பெற்று கௌரவமான இனமாக வாழ வேண்டும் என்ற கனவுடன் சாவினைத் தழுவிய அந்த வீரமறவர்கள் என்றும் வானுயர் தெய்வங்களாக தமிழ் மக்களை வழிநடத்திச் செல்வார்கள். இந்த ஆன்ம வழிகாட்டல் தமிழினம் உரிமைகள் பெற்ற இனமாக வாழ வழிவகுக்கும். அதேநேரம், நாம் நினைவில் கொள்ளும் – நினைவேந்தும மாவீரர்களின் கதைகளை அடுத்த தலைமுறைக்கும் கடத்திச் செல்ல வேண்டும்.

அடுத்த தலைமுறையும் அறியட்டும் நாம் சிந்தியது வெறுமனே இரத்தம் மட்டுமல்ல; வீரக் குருதியும் பெரும் பங்கு கலந்திருக்கிறது என்று, நாம் விதைத்தது வெறுமனே உடல்களை அல்ல; விதைகளை என்று நாளைய வரலாறு சொல்லட்டும் நாம் வீழ்ந்தது போரினால் மட்டுமல்ல; பெரும் துரோகங்களினாலும் தானென்று. நாம் பெற்ற பெருவெற்றிகளும் – படைத்த சாதனைகளும் – சிந்திய குருதியும் – வழங்கிய உயிர்க்கொடைகளும் – நம்மினத்திற்கு விடுதலையைப் பெற்றுத் தரும்.

அதுவரை, நம்மினத்தின் தியாகங்கள், ஈகங்கள் – சாதனைகள் – வெற்றிகள், தலைமுறைகளை கடந்தும் வாழும் – காலம் அதைச் சொல்லிக் கொண்டே இருக்கும் – விடுதலைக்கான வடிவங்கள் மாறிக் கொண்டே இருக்கும் – நாம் விதைத்த உயிர் விதைகள் உறங்காது காத்திருக்கும் முளைப்பிற்காக… நம் விடுதலைக்காக…!

-செவ்வேள்-