வடக்கு ஆளுநர் விவகாரம்: இருதலை கொள்ளியாக மஹிந்த!

mahinda gota
mahinda gota

வடக்கு – கிழக்கு மாகாண சபைகளுக்கான ஆளுநர் நியமனங்கள் இழுபறியாகவே உள்ளன. ஆளுநர்கள் ஜனாதிபதியின் நேரடிப் பிரதிநிதிகள். தேவைப்படின் மாகாணத்தின் ஆட்சி அதிகாரத்தையே கையில் எடுத்துக் கொள்ளக்கூடிய தற்றுணிவு அதிகாரம் அவர்களுக்கு உண்டு. எனவே ஜனாதிபதிக்கு மிக வேண்டிய, விசுவாசமான – நெருக்கமானவர்களே ஆளுநர்களாக நியமிக்கப்படுவது வழமை.

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் ஆளுநர் நியமனம் என்பது ஏனைய மாகாணங்களைப் போன்றது அல்ல. அவர்களுக்கும் ஜனாதிபதிக்குமான நெருக்கம் இன்னும் சற்று அதிகமாகவே இருக்கும். இது ஏன் என்று சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. பதவியைப் பொறுப்பேற்ற கையுடனேயே தென்னிலங்கையின் 6 மாகாணங்களுக்கு உடனடியாக ஆளுநர்களை நியமித்து விட்டார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. ஆனால், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஆளுநர் நியமனத்தில் இழுபறி ஏற்படுகிறது.

ஆட்சி மாற்றத்துக்கு முன்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரங்களை எடுக்க வல்லவர், அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்காக இப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் தூது சென்றார். அப்படி அவர் சென்றது, ஆட்சி மாற்றம் உடனடியாக வேண்டாம் என்பதற்குத்தானாம். ஆனால், அதை ஏற்கும் மனநிலையில் மஹிந்த ராஜபக்ச இல்லை. அதேவேளை, தூதாகச் சென்றவரை வெறும் கையுடன் அனுப்பவும் விருப்பமில்லை. இதனால், மஹிந்த அவருக்கு ஒரு பரிசு ஒன்றை வழங்கினார். அந்தப் பரிசுதான் இப்போது அவரின் இந்த நிலைக்குக் காரணமாகியுள்ளது.

இந்தப் பரிசு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கருதப்படக்கூடியது என்றாலும்கூட, தமிழர்களின் வாக்குகளால் வந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனகூட இத்தகைய பரிசை வழங்கவில்லை. மாறாக “வில்லங்கங்களையே” கொடுத்தார். இப்போது மஹிந்த கொடுத்த பரிசு வடக்கு மாகாணத்தின் ஆளுநர் பதவிதான். “வடக்கு ஆளுநரை நீங்கள் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) சிபாரிசு செய்யுங்கள், அவரையே நியமிக்க நடவடிக்கை எடுக்கிறேன்” என்று தன்னைச் சந்தித்த கூட்டமைப்பின் பிரமுகரிடம் உறுதி கொடுத்தார் மஹிந்த.

அரசியல் ஆழத்தை அளந்த அந்தப் பிரமுகருக்கும் இந்த அரசியல் சூட்சுமம் நன்கு தெரியும். சரி எனத் தலையாட்டி விட்டு வந்துவிட்டார். இப்போது அவரின் யோசனை எல்லாம், தங்களுக்கு விசுவாசமான – அதேநேரம் ராஜபக்சக்களுக்கு நெருக்கமான – அவர்களிடம் பேசி காரியம் சாதிக்கக்கூடிய ஒருவரை தேடுவதுதான். ஏனெனில் கூட்டமைப்பின் சிபாரிசில்தான் ஆளுநரை நியமித்தோம், அவர் எதனையும் செய்யவில்லை என நாளை ராஜபக்சக்கள் கூறி விடுவார்கள். ஆனால், அதேநேரம் ராஜபக்சக்களுக்கு நெருக்கமானவர் – பேசிக் காரியம் சாதிக்கக்கூடியவர் என்றால் அவருக்கு ஆளுநராகத் தொடர்வதிலோ, காரியங்களை ஆற்றுவதிலோ சிக்கல் இராது என்பதுதான்.

கூட்டமைப்பின் மிக முக்கியமானவர்கள் கூடி இந்த விடயத்தை ஆராய்ந்து, உரியவரையும் தெரிவு செய்துவிட்டார்கள். ஆனால், இப்போது தயக்கம் ராஜபக்ச சகோதரர்களிடம் இருந்துதானாம். காரணம், கூட்டமைப்பின் சிந்தனையில் இருந்தததெல்லாம் தங்களுக்கு விசுவாசமான மஹிந்தவுக்கு நெருக்கமான – காரியம் சாதிக்க வல்ல ஒருவரைத்தான். ஆனால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவரை எப்படிப் பார்க்கிறார் என்பதை மறந்துவிட்டார்கள்.

கூட்டமைப்பு சிபாரிசு செய்த நபர், மஹிந்த ராஜபக்சவுக்கு மட்டுமல்ல அவரது குடும்பத்துக்கும் நெருக்கமானவர்தான். ஆனால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவோ அவரை ஒரு “புலி”யாகவே பார்த்து வருகிறாராம். அது மட்டுமின்றி, கோட்டாபய ராஜபக்சவுக்காக தேர்தலில் இறங்கி வேலை செய்த சிலரும் அந்தப் பதவிக்கு குறிவைத்துள்ளார்களாம். முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே, ஈ.பி.டி.பியின் தவராசா, முன்னாள் ஆளுனரான சுரேன் ராகவன் இவர்களில் ஒருவருக்கு அல்லது வேறு ஒரு புதியவருக்கு சந்தர்ப்பம் வழங்குவதுதான் ஜனாதிபதியின் முடிவாக இருக்கிறதாம்.

இவர்கள் எல்லோரையும் விட தனக்காகப் பேசி வரும் – பௌத்த, சிங்களத்தை ஏற்றுள்ள – தன்னினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பேரழிவுகளையே நியாப்படுத்தும் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனை நியமிப்பதையே ஜனாதிபதியான கோட்டாபய விரும்புகிறாராம். ஆனால், அவரோ வடக்கு ஆளுநர் பதவியைப் பெற விரும்பவில்லை. அதற்கான காரணம் என்னவென்று தெரியாதபோதும் வடக்குக்கு வருவது தனக்கு சாத்தியமில்லை என்றே கருதுகிறாராம். வடக்கில் இடம்பெற்ற அழிவுகளை நியாப்படுத்தி தான் பேசிய பேச்சுக்களால் அவமானங்களை சந்திக்க நேரிடும் என்று கருதுகிறரோ என்னவோ தெரியவில்லை.

அது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியான பின்னர் அவரிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அண்ணன் மஹிந்த ராஜபக்ச கவலையில் ஆழ்ந்துள்ளார். எல்லாம் தன் கைக்குள்ளேயே இருக்கும் எனக் கனவு கண்டவருக்கு எல்லாமே கையை மீறி எப்போதோ சென்று விட்டது என்பது இப்போதுதான் புரிகிறதாம்.

பல விடயங்களில் அண்ணனின் முடிவுக்கு மாறாகவே தம்பியின் செயற்பாடுகள் இருக்கிறதாம். இந்நிலையில் வடக்கு ஆளுநர் விடயத்தில், கூட்டமைப்புக்கு தான் கொடுத்த வாக்குறுதியை சமாளித்து விடலாம் என எண்ணினாலும், கூட்டமைப்பின் தெரிவான தனது நண்பரை தவிர்க்க முடியாதவராகத் தவித்து வருகிறாராம். தேவையின்றி வாக்குக் கொடுத்து விட்டோமோ என்று இரு தலை கொள்ளி எறும்பின் நிலையில் உள்ளாராம் பிரதமர். இந்த விடயத்தில் கூட்டமைப்பின் “செக் மேற்” பிரமுகர் கில்லாடிதான்.

இதனிடையே, ஜனாதிபதி தனது இந்தியப் பயணத்திற்கு முன்பாக வடக்கு ஆளுநரை அறிவித்து அவரையும் கூடவே அழைத்துச் செல்வதுதான் திட்டமாக இருந்ததாம். இப்போது, இந்த விவகாரம் சிக்கலைத் தரவே, இந்தியப் பயணம் முடிந்ததும் அறிவிக்கலாம் என இந்த விவகாரத்தைக் கிடப்பில் போட்டு விட்டாராம். எனினும் திடுதிப்பென முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்றும் ஒரு தகவல் அடிபடுகிறது.