சாத்தான் ஓதும் வேதமும் சுமந்திரனின் ஒற்றுமைக்கான அழைப்பும்

Election risult 3
Election risult 3

சில தினங்களுக்கு முன்னர் சுமந்திரன் கட்சிகளைநோக்கி அழைப்புவிடுத்திருந்தார். ஏன் வெளியில் நிற்கின்றீர்கள். நாங்கள் யாரையும் வெளியில் போகச் சொல்லவில்லை. அதேபோன்று உள்ளுக்குள் வருவதையும் நாங்கள் எதிர்க்கவில்லை. இலங்கை தமிழரசுக் கட்சியுடன் அரசியல் ரீதியில் முரண்பட்டு, வெளியேறிய கட்சிகளை நோக்கித்தான் சுமந்திரன் இவ்வாறு அழைப்பு விடுத்திருந்தார்.

முன்னைநாள் வடக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான க.வி.விக்கினேஸ்வரனை மையப்படுத்தி மாற்று தலைமையொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில்தான், சுமந்திரன் இவ்வாறானதொரு அழைப்பை விடுத்திருக்கின்றார். சுமந்திரன் தனது பேச்சில் ஒருவிடயத்தை அழுத்திக் குறிப்பிட்டிருக்கின்றார். அதாவது, மாற்று அணி ஒன்றை உருவாக்கக் கூடாது. அதற்கான தருணம் இதுவல்ல. இதிலிருந்து சுமந்திரனின் உள் நோக்கத்தை ஒருவர் தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும்.

இதுவரை இறுமாப்பாக பேசிவந்த சுமந்திரனின் பேச்சில் ஏன் இந்த திடீர்மாற்றம்? அனைத்துக்கும் கோட்டபாயவின் வெற்றிதான் காரணம். கோட்டபாயவின் வெற்றியைத் தொடர்ந்து 2015இல் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ராஜபக்சேக்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வந்துவிட்டனர். தற்போதுள்ள நிலையில் இனி அதிகாரத்தில் இருக்கப் போபவர்கள் அவர்கள்தான்.

இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் சுமந்திரன் புதிய உக்திகளை கையாள முற்படுகின்றார். அடுத்த ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் இம்பெறவுள்ள நிலையில் அதில் மீளவும் கூட்டமைப்பின் கதிரைகளை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு சுமந்திரன் – சம்பந்தன் தரப்பிற்கு ஒரு ஒற்றுமை நாடகம் தேவைப்படுகின்றது. ஓற்றுமை தொடர்பில் மக்கள் மத்தியில் இயல்பானதொரு கரிசனை இருப்பதை தங்களுக்கு சாதமாக்கிக் கொண்டு, விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாகவுள்ள மாற்றுத் தலைமையை முளையிலேயே களைந்துவிடவேண்டுமென்பதே சுமந்திரனின் திட்டம். இதற்கு ஒரு காரணமுண்டு.

அதாவது, சம்பந்தன் – சுமந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட கூட்டமைப்பின் அனைத்து அரசியல் நகர்வுகளும் படுதோல்வியடைந்துவிட்டன. அந்தவகையில் பார்த்தால் சம்பந்தனும் சுமந்திரனும் அவமானகரமான தோல்வியை சந்தித்த அரசியல்வாதிகளாகவே காட்சியளிக்கின்றனர். தங்களது படுமோசமான தோல்விக்கான பொறுப்பை அவர்கள் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக மொட்டைக் காரணங்களை கூறிவருகின்றனர்.

ஒருவேளை அரசியல் தீர்வு முயற்சிகள் வெற்றிபெற்றிருந்தால் அதற்கான பொறுப்பை இவர்களே எடுத்திருப்பார்கள். அந்தப் பொறுப்பில் பங்காளிக் கட்சிகளுக்கு கூட இடமிருந்திருந்திருக்காது. ஒருமுறை கனடிய தமிழ் ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இதனை சுமந்திரன் மிகவும் இறுமாப்புடன் குறிப்பிட்டிருந்தார். அரசியல் தீர்வு ஒன்றை காண்பதற்கான பொறுப்பே எனக்கு தரப்பட்டுள்ளது. அதற்காகவே நான் அரசியலில் இருக்கின்றேன். அந்த முயற்சி வெற்றி பெற்றால் அது முற்றிலுமாக என்னையே சாரும். அது தோல்வியடைந்தாலும் என்னையேசாரும். அரசியல் தீர்வில் வெற்றிபெற்றாலும் தோல்வியடைந்தாலும் அரசியலில் இருந்து ஒதுங்கும் எண்ணத்தில் இருக்கின்றேன். இன்று படுமோசமான தோல்வியை சந்தித்த பின்னரும் ஏன் சுமந்திரன் அரசியலிலிருந்து ஒதுங்கவில்லை. ஏன் தோல்விக்கு பொறுப்பேற்கவில்லை.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தீண்ட முடியாது– 13வதை தாண்டி நாங்கள் வேறு எங்கோ சென்றுவிட்டோம் என்று கூறிய சம்பந்தனும் சுமந்திரனும் ஏன் இன்று மீண்டும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அமுலாக்கம் பற்றி பேசுகின்றனர்? 13வது தொடர்பில் மோடி பேசியதை ஏன் வரவேற்கின்றனர்? உண்மையில் சுமந்திரனிடம் ஆகக் குறைந்தளவாவது அரசியல் நேர்மை இருக்குமாயின் பதவி சுகபோகங்களை விட்டுவிட்டு ஒதுங்கியல்லவா இருக்கவேண்டும். ஆனால் கோட்டபாயவின் வெற்றியின் பின்னர் சாத்தான் வேதம் ஓதுவதுபோல் ஒற்றுமை பற்றி மற்றவர்களுக்கு வகுப்பெடுக்க முயற்சிக்கின்றார்.

இன்று அரசியல்வாதிகளாக வலம் வரும் பலரும் தமிழ் மக்களை மறதிநோயால் பாதிப்பட்டவர்களாகவே கருத்திக் கொள்கின்றனர் போலும். இன்று ஒற்றுமை பற்றிபேசும் சுமந்திரன் எதனையோ சந்தர்ப்பங்களில் ஒற்றுமையை தன் காலில் போட்டு மிதித்திருக்கின்றார். ஒற்றுமைக்காக குரல் கொடுத்தவர்களை எள்ளிநகையாடியிருக்கின்றார். உண்மையிலேயே ஒற்றுமை முக்கியம் என்று சம்பந்தன் – சுமந்திரன் – மாவை சேனாதிராஜா ஆகியோர் கருதியிருந்தால் இன்று கூட்டமைப்பைவிட்டு சுரேஸ் பிரேமச்சந்திரன் வெளியேற நேர்ந்திருக்காது. ஆனந்தசங்கரி வெளியேற நேர்ந்திருக்காது. விக்கினேஸ்வரன் ஒரு தனியானகட்சியை ஆரம்பிக்கவேண்டிய தேவை உருவாக்கியிருக்காது. இவை அனைத்துக்கும் சுமந்திரனே பிரதானகாரணம்.

சுமந்திரனை தட்டிக் கேட்கும் திராணியற்று, வெறும் கதிரைபோதையில் தன்னை மறந்துகிடந்த இரா.சம்பந்தன் இவை அனைத்துக்குமான முழுமுதல் காரணம். தனக்குசவால் விடுக்கக் கூடியவர்கள் எவருமே கூட்டமைப்புக்குள் இருக்கக் கூடாது என்பதற்காக திட்டமிட்டு நயவஞ்சகமாக சூழ்சிகள் புரிந்து பலரும் வெளியேறக் கூடிய சூழலை உருவாக்கிய சுமந்திரன்தான், இன்று ஒற்றுமைபற்றி வேதம் ஓதுகின்றார். சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டமைப்புக்குள் இருந்தால் தான் நினைத்தவாறு பேசமுடியாது என்பதை தெரிந்துகொண்டு, திட்டமிட்டு சுரேஸ் பிரேமச்சந்திரனை வெளியேற்றினார்கள்.

உண்மையில் சுரேஸ்பிரேமச்சந்திரனை உள்ளுக்குள் வைத்திருக்க விரும்பியிருந்தால், தேசியபட்டியல் மூலம் சுரேஸை உள்ளுக்குள்ளேயே வைத்திருந்திருக்கலாம். ஆனால் சுரேஸை நிராகரித்துவிட்டு ஒன்றுக்கும் உதவாத இரண்டு பேருக்கு தேசியபட்டியல் ஆசனங்களை கொடுத்தனர். தாங்கள் வலிந்து அரசியலுக்கு கொண்டுவந்த விக்கினேஸ்வரன் தங்களுடன் ஒத்தோடவில்லை என்பதற்காக அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்தனர். இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் ஒற்றுமைய கொலை செய்தவர்கள் இன்று கண்கெட்டபின்னர் சூரியநமஸ்காரம் என்கின்றனர். மாற்றுத் தலைமை உருவாகக் கூடாது என்கின்றனர்.

உண்மையில் தற்போதுள்ள நிலையில் தமிழரசு கட்சி வடக்குகிழக்கில் பலவீனமாக இருக்கின்றது. தேர்தலில் முன்னைய ஆசனங்களை இவர்களால் வெற்றிபெற முடியாது. நிச்சயமாக சில ஆசனங்களை இவர்கள் இழக்கநேரிடும். இதனை தெரிந்து கொண்டுதான் நாங்கள் ஒற்றுமையாக இருந்தால் 20 ஆசனங்களை பெறமுடியுமென்றும் புதிய ஏமாற்று பிரச்சாரம் ஒன்றை செய்கின்றனர். கடந்த ஆட்சியில் ரணிலில் செல்லப்பிள்ளையாக சுமந்திரன் இருந்தார்.

அவர் அமைச்சுப் பொறுப்புக்கள் எதனையும் வெளிப்படையாக வகிக்காவிட்டாலும் கூட, ரணிலின் அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களைவிடவும் அதிகாரமுள்ளவராக இருந்தார். கூட்டமைப்பிடம் 14 பாராளுமன்ற ஆசனங்கள் இருந்தன. ரணிலுக்கு நெருக்கடிகள் ஏற்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அவரை காப்பாற்றுவதற்காக, கட்டியிருந்த வேட்டி கழன்று விழுவதையும் மறந்து இரவு பகலாக பாடுபட்டனர். ஆனால் வாக்களித்த தமிழ் மக்களுக்கு என்ன கிடைத்தது? அன்று 14 ஆசனங்களை வைத்திருந்து, ரணிலுக்கு நெருக்கமாக இருந்து செய்ய முடியாதவைகளை, இனி எவ்வாறு செய்யப் போகின்றனர்?

இவர்களிடம் 20 ஆசனங்கள் அல்ல, 200 ஆசனங்கள் இருந்தாலும் இவர்களால் எந்தவொரு நன்மையும் தமிழ் மக்களுக்கு கிடைக்காது.
ஏனெனில் சுமந்திரனுக்குதமிழ் மக்கள் தொடர்பில் எந்தவொரு கரிசனையும் இல்லை. அவரது கரிசனை ஒன்றே ஒன்றுதான். தான் கொழும்பில் செல்வாக்குள்ள ஒரு நபராக வலம்வரவேண்டும். தன்னை சுற்றி தமிழ் அரசியல் இருக்கவேண்டும். அவ்வாறு நடக்கவேண்டுமாயின் தமிழரசுகட்சிதொடர்ந்தும் அதிக ஆசனங்களை கொண்டிருக்கும் கட்சியாக இருக்கவேண்டும். தான் கூட்டமைப்பின் பேச்சாளராக இருக்கவேண்டும். அவ்வாறிருந்தால் முன்னர் ரணிலுடன் நெருக்கமாக இருந்தது போன்று இனி கோட்டாவுடன் நெருக்கமாக இருக்கலாம்.

இவை எல்லாம் நடக்கவேண்டுமாயின், தங்களது ஒற்றுமை நாடகத்தில் விக்கினேஸ்வரன் சுரேஸ் தேவைப்பட்டால் கஜேந்திரகுமார் அனைவரும் நடிக்கவேண்டும். ஆனால் கதை வசனங்களை சுமந்திரனே வழங்குவார். அதனை எப்படி கதைக்கவேண்டும் என்பதையும் அவரேசொல்லிக் கொடுப்பார். அனைவரும் சுமந்திரனின் நாடகத்தில் நடிக்க இணங்கினால் அதுதான் தமிழ் மக்களுக்கான ஒற்றுமை.இதுதான் ஒற்றுமைக்கான சுமந்திரனின் விளக்கம். இவ்வாறானதொரு ஒற்றுமையா இன்று தமிழ் மக்களுக்குத் தேவை?

– கரிகாலன் –

( பொறுப்பு திறத்தல்: இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம் )