சுமந்திரனை நோக்கிப் பாயும் கேள்விகள்…!

Sumanthiran 2
Sumanthiran 2

தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒன்றிணைவு அவசியம் என வலியுறுத்தப்படும் சூழ்நிலையில், தமிழ்க் கட்சிகளின் இணைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எம்.பி. அவரின், இந்த அழைப்பு பொதுவானதே என்றபோதும், இந்த அழைப்பு தமிழ்க் கட்சிகளுக்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்குக்கூட சந்தேகத்தை – நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரமளிக்கப்படாத தலைவர் சுமந்திரன் எம்.பிதான். அவரது முடிவே – அவர் ஏற்கும் முடிவே கட்சியின் முடிவு. என்பதுதான் 2010 ஆம் ஆண்டின் பின்னரான நிலை. தமிழரின் பலமாக – தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டாக இருக்க வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுண்டு – பிரிந்துபோய் நிற்கிறது என்றால், அதற்கு அதன் தலைவர் சம்பந்தனின் ஆளுமையின்மையும் – சுமந்திரனின் அரவணைக்காப் போக்கும், தான்தோன்றித்தனமான போக்குமே காரணம். இருவரதும் இலங்கைத் தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய போக்கும் மிக முக்கிய காரணியாகும். இந்நிலையில், சுமந்திரனின் அறிவிப்பை தமிழ்க் கட்சிகளும் – தமிழ் மக்களும் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதில் தவறில்லையே…!

ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு கால அவகாசம் கொடுக்கும் முடிவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியது. நல்லாட்சி அரசின் காலத்திற்குள் தீர்வு என்றும் அதற்காக புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் என்றும் கூறியது. ஆனால், நான்கு ஆண்டுகளைக் கடந்தும் அவர்களால் நகல் வடிவத்தைக்கூட எட்ட முடியவில்லை. அதற்கான சாத்தியப்பாடு இனி இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்த நிலையிலும் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளக் கூட்டமைப்புத் தயாராகவில்லை. ஜனாதிபதி தேர்தலில்கூட தமிழ் மக்களின் விருப்பை – முடிவை அறிந்து கொண்டே சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவை வெளிப்படுத்தியது. தமிழ் மக்களால் வெற்றி வருமாயின் அந்த முடிவை தமக்கு சாதகமாக்கிக் கொள்வதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எண்ணமாக இருந்தது. இதனால் முந்திக் கொண்டே ஆதரவைத் தெரிவித்தது. இந்த ஆதரவை முக்கியமாக வைத்தே ராஜபக்சக்கள் சிங்கள – பௌத்த தீவிர பிரசாரத்தை முன்னெடுத்தனர்.

இந்த மூன்று விடயங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோல்வியைப் பகிரங்கமாக ஏற்றிருக்க வேண்டும். ஆனால், அதை அவர்கள் மறைத்து – மறந்தபோன்று ஒன்றிணைவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் நிலைத்தவரை நேர் வழியில் – கூட்டாகப் பயணித்தவர்களால். அந்த ஆயுத பலம் செயலிழந்த பின்னர், கூட்டாகப் பயணிக்க முடியவில்லை – விரும்பவில்லை. கூட்டுக்குள் தமிழரசுக் கட்சியின் செல்வாக்கு அதிகரித்தது. 2010 இல் அரசியலுக்கு நேரடியாக அறிமுகமானார் சுமந்திரன். இவர் கூட்டுக்குள் வரும்போதே, குழப்பங்களும் தொடங்கிவிட்டன. புலிகளால் அரசியலுக்கு அறிமுகப்படுத்தியவர்களை வெளியேற்றுகிறோம் என்ற பெயரில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் வெளியேறக் காரணமானது இலங்கைத் தமிழரசுக் கட்சி.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியாகப் பதியப்பட வேண்டும் எனக் கூட்டுக்குள் கோரிக்கை வலுவாக எழுந்தபோது அதுபற்றி கூட்டமைப்பு – தமிழரசுக் கட்சித் தலைமைகள் அலட்டிக்கொள்ளவில்லை. பின்னாளில் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிக்கும் இவர்களுக்குள்ளும் விரிசல்கள் ஏற்பட்டன. இந்த விரிசலில் பங்காளிக் கட்சிகளின் சார்பில் தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்களை தமிழரசுக் கட்சிக்குள் உள்வாங்கிக் கொண்டமையும் முக்கிய காரணியானது. ஒற்றுமையை வலியுறுத்தும் கூட்டமைப்பு அன்று விட்டுக்கொடுப்புக்களை செய்ய முன்வரவில்லை என்பதைத் தாண்டி இலங்கைத் தமிழரசுக் கட்சியை முன்னிலைப்படுத்துவதை ஏற்க விரும்பாதவர்கள் வெளியேறட்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தது. இதனால் புலிகளால் கூட்டுக்குள் கொண்டு வரப்பட்ட இரு கட்சிகள் கூட்டமைப்பை விட்டு வெளியேறின.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருந்தியதாகத் தெரியவில்லை. 2013 இல் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனை அரசியலுக்குள் அழைத்து வந்தது. வடக்கு மாகாண சபை தேர்தலில் அவரை முதலைமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி வாக்குகளை சேகரித்தது. வழக்கத்துக்கு மாறாக இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் பேராதரவு வழங்கினர். 30 ஆசனங்களைப் பெற்றது கூட்டமைப்பு. 2015 இல் ஆட்சி மாற்றத்துக்கு காரணமானவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பங்கு இருந்தது. மத்திய அரசுடன் இணைந்து பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தன. ஆனால், வடக்கு மாகாண சபையின் அதிகாரங்களை மத்திய அரசு மூலமாக மட்டுப்படுத்த கூட்டமைப்பே பின்னின்றது. இதன் உச்சபட்சமாகவே இரவோடிரவாக முதலமைச்சராக இருந்த க.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்து மூக்குடைபட்டார்கள்.

தொடர்ந்தும், வடக்கு மாகாண சபையின் ஆயுள் முடியும் வரை மத்திய அரசுடன் கூட்டமைப்பு இணங்கிச் செயற்பட்டபோதும்கூட வடக்கு மாகாண அரசை சுயமாக செயற்பட அரசு விடவில்லை. இந்நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூட கூட்டமைப்பு முயலவில்லை என்பது தமிழ் மக்களின் அவலமே. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நிலவிய உச்சபட்ச முரண்பாடும் – வெறுப்புணர்வுமே வடக்கு மாகாண சபையின் ஆயுள் முடிவடைந்த மறுநாளே க.வி.விக்னேஸ்வரனால் தனிக் கட்சியை அறிவிக்க வழிகோலியது. பிரிவினைகளுக்கு தூபம் போட்ட – தனிக்கட்சியை வளர்ப்பதை நோக்காகக் கொண்ட – கூட்டணி தர்மத்தை மீறிய – உள்கட்சிக்குள்ளேயே குழி பறித்த இலங்கைத் தமிழரசுக் கட்சி இப்போது கூட்டணிக்கு அழைப்பு விடுகிறது என்றால் சந்தேகப்படாது இருக்க முடியுமா?

இறுதியாக யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் அழைப்பின் பேரில் உருவான “திருநெல்வேலி ஒப்பந்தம்” தோற்கடிக்கப்பட்டதில் – நீர்த்துப்போகச் செய்த பெருமை தமிழரசுக் கட்சிக்கு – குறிப்பாக சுமந்திரனுக்கே உண்டு. ஏற்கனவே இவர்கள் எடுத்த முடிவுக்கு உடன்படச் செய்யவே இவ்வாறு கட்சிகள் அழைக்கப்பட்டன. சுமந்திரனின் இந்த அரசியல் சித்து விளையாட்டை மற்றைய கட்சிகள் நன்றாகவே புரிந்துகொண்டன. இதனால் அவை தங்களுக்கு சரியெனப்பட்ட நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த முன்வரவில்லை. இதனால், ஒரு வாரத்துக்குள்ளாகவே திருநெல்வேலி ஒப்பந்தம் தோற்றுப்போனது. முடிவு ஒன்றை எடுத்து விட்டு அதை மற்றவர்களையும் ஏற்கச் செய்யும் சுமந்திரன் எம்.பியின் போக்கு எல்லோராலும் – பங்குக் கட்சிகளால் ஏற்கமுடியாததாகவே இருக்கும். அதற்காக, சுமந்திரனின் முடிவுகள் தவறு என்று எழுந்தமானதாகவும் சாடிவிட முடியாது. ஆனால், அந்த முடிவு குறித்துப் பங்காளிக் கட்சிகளுக்கு தனது விளக்கத்தை அளித்து – அவர்களின் கருத்தை அறிந்து சந்தேகங்களை தீர்த்தால் அவர்களும் ஆதரிப்பார்கள்.

ஆனால், சுமந்திரன் எம்.பியோ அதைச் செய்வதாக இல்லை. தனது முடிவை மட்டுமே செயற்படுத்த முனைகிறார். சுருங்கச் சொல்லின் சர்வாதிகாரப் போக்கில் கட்சியை கொண்டு செல்ல முற்படுகிறார். இதுவே அவரது தோல்விகளுக்கும் – அவர் குறித்த விமர்சனங்களுக்கும் காரணமாகி விடுகிறது. எது எப்படி இருப்பினும், இப்போதுள்ள அரசியல் வறிது – தமிழ்க் கட்சிகளின் ஒன்றிணைவின் அவசியம் – தமிழ் மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு கூட்டமைப்பின் – சுமந்திரனின் இந்த அழைப்பை ஏற்க வேண்டிய தேவையும் உள்ளது.

ஆனால், இப்போது கேள்வி என்னவென்றால்…! ஏற்படுத்தப்படவுள்ள கூட்டணிக்கு உட்கட்சி ஜனநாயக தலைமையை உருவாக்கவும், தலைமைக் குழுவின் பெரும்பான்மை அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்பட வேண்டும். தனிக்கட்சிப் போக்கை கைவிட்டு கூட்டணி தர்மத்தைப் பின்பற்றுவோம் என்ற உறுதிப்பாட்டை வழங்க வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக தேர்தல் கூட்டணியாக அமையாமல் தொடர்ந்தும் – பலமாக – ஓரணியாக இருப்பதற்காக அதைப் பதிவு செய்யவும் – தொடர்ச்சியான இருப்பைப் பேணுவதற்கான வழிமுறைகள் – செயல்முறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய தமிழரசுக்கட்சியும் – சம்பந்தனும் சுமந்திரனும் தயாரா?

-செவ்வேள்

( பொறுப்பு திறத்தல்: இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம் )