வடக்கு ஆளுநராக வித்தியாதரன்? கூட்டமைப்புக்கு மஹிந்த வழங்கும் பரிசு!

images
images

வடக்கு ஆளுநர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தெரிவாகவும் மஹிந்தவுக்கு நெருக்கமானவராகவும் இருப்பார் என முன்பே தெரிவித்திருந்தோம். நேற்றைய தினம் அது உறுதியாகியுள்ளது. மூத்த பத்திரிகையாளரும், உதயன், சுடர்ஒளி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரும் காலைக்கதிர் பத்திரிகையின் ஆசிரியருமான நடேசபிள்ளை வித்தியாதரன் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு பெருமளவு உள்ளது.

வடக்கு ஆளுநர் விடயம் தொடர்பில், நேற்றையதினம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை வித்தியாதரன் சந்தித்துப் பேசியிருக்கிறார் என்கின்றன உள்வீட்டுத் தகவல்கள். இந்தச் சந்திப்பு மஹிந்த ராஜபக்சவின் அழைப்பின் பேரிலேயே இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது. சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த சந்திப்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும் சந்தித்தாகவும் தகவல். இத்தகவலை உறுதிப்படுத்த முடியாதபோதிலும், விரைவில் இது குறித்த அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு ஆளுநர் பதவிக்குப் பலர் போட்டியிடும் நிலையில் வித்தியாதரனுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு பலரிடத்திலும் உண்டு.

வடக்கு ஆளுநர் பதவி, தன்னைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிக்கு பிரதமர் மஹிந்த கொடுத்த பரிசு என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். ஆனால், இது ஒரு விவகாரமான பரிசு. கூட்டமைப்புக்கு இந்தப் பரிசு வழங்கப்பட சில காரணங்கள் உண்டு. ஒன்று வரும் தேர்தல் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற முடியாமல் போனால் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்று அரசியலமைப்பில் – முக்கியமாக 19 ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த ஆதரவு கோருவதற்கான வாய்ப்பு.

மற்றையது, கூட்டமைப்பு எதற்கும் மசியாத பட்சத்தில், அவர்களின் சிபாரிசில் வந்தவரை எதையும் செய்ய விடாது தடுத்து, தமிழ் மக்கள் முன்னிலையில் தோற்றவர்களாகக் காட்டி அவர்கள் மீது நம்பிக்கையீனத்தை உருவாக்குவது – பழிவாங்குவது.

இதைப் புரிந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தங்களுக்கு விசுவாசமான – மஹிந்தவின் நட்பு வட்டாரத்தில் இருப்பவருமான ஒருவரைத் தேடியது. அப்போது சிக்கியதுதான் மூத்த பத்திரிகையாளர் ந.வித்தியாதரனின் பெயர். அவர் மஹிந்த – அவரது குடும்பத்தின் நட்பு வட்டத்தில் உள்ளவர் மட்டுமல்ல சுமந்திரன் எம்.பியின் நண்பரும்கூட. அதுமட்டுமின்றி சட்டம் பற்றிய விரிவான அறிவும் பார்வையும் கொண்டவர். யாரிடம் எப்படிப் பேசி காரியம் சாதிக்க வேண்டும் எனத் தெரிந்தவர். அதனால், மஹிந்தவிடம் காரியம் சாதிக்கக்கூடியவரையே கூட்டமைப்பு சிபாரிசு செய்தது.

இவரின் தெரிவை பிரதமர் மஹிந்த தட்டமுடியாது என்றாலும்கூட, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இவர் மீது நம்பிக்கை கிடையாது. இதனால், அந்த வாய்ப்பு நழுவிக் கொண்டேயிருந்தது. இந்நிலையில் பிரதமர் மஹிந்த – வித்தியாதரன் சந்திப்பு வடக்கு ஆளுநருக்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது. எனினும் நாளை எதுவும் நடக்கலாம்…! பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.