இதென்ன… நீராவியடியானுக்கு வந்த சோதனை!

Tigaon Vidhan Sabha seat in Haryana
Tigaon Vidhan Sabha seat in Haryana

அந்தப் பரந்த வெளியில் தூரம் தூரமாக ஐந்தாறு மரங்களைத் தவிர, வேறெதுமில்லை. வெயில் நெருப்பாய்ச் சுடுகிறது. உயிரைக் கையில் பிடித்தபடி நீண்ட நேர ஓட்டம் – தாக மிகுதியால் நா வறள்கிறது. மெல்ல அந்த அரச மரத்தின் கீழே நண்பனுடன் தஞ்சமானேன். தண்ணீர் தேடி அலையும் நிலையில் இருவருமே இல்லை. அப்படியே அந்தப் பெரிய மரத்தின் கீழே விழுந்தோம்.

எப்படி உறங்கினேன் எனத் தெரியாது, விழித்துப் பார்த்தபோது, ஒரு பெரிய உருவம் வேகமாக ஓடி வருகிறது. அந்த உருவத்தைப் பார்த்ததும் அச்சம் மேலோங்கியது. மீண்டும் யானை துரத்த ஆரம்பித்து விட்டதா அசைந்து அசைந்து ஓடி வரும்  அதன் வேகம் முன்னரை விட வேகமாகத் தெரிகிறது. “தொலைந்தேன்… பிள்ளையாரப்பா… காப்பாற்று…” –  என்று என் வாய் ஓலமிட்டது – ஓட எத்தனித்தேன். ஆனால், சிறு சந்தேகம் எழுந்து தடுத்து விட்டது. 

யானை வருவது, கறுப்பாக சிறுகுன்றுபோலல்லவா இருந்தது. ஆனால், ஓடி வரும் உருவமோ ஆள் போலிருக்கிறது. உருவம் பெரிதுதான், ஆனாலும் உடைகளும் கண்ணைப் பறிக்கும் தங்க நகைகளும் தெரிகிறதே. நான்கு கால்களுக்குப் பதிலாக நான்கு கைகளலல்லவா தெரிகிறது…! இப்படி நீண்டது அந்த சந்தேகம். அச்சமயம் வேகமாக ஓடி வந்த அந்த உருவம் என்னை மிக வேகமாகத் தாண்டியது. ஓடுவது யாரென்று தெரிந்ததும் எனக்குள்ளும் ஒரு வேகம் எழுந்தது. “பிள்ளையாரப்பனே நில்லுங்கள்… விநாயகக் கடவுளே நில்லுங்கள்…” என்று கத்தினேன்.

ஓடியவர் என்னை நோக்கித் திரும்பினார்.  அதேவேகத்தில் நான் நிற்கும் இடம் நாடி  வந்தார்.

“பிள்ளையாரே… ஆபத்து என்றால் உன்னை நோக்கித்தானே நாங்கள் ஓடி வருவோம். நீ காப்பாற்றுவாய் என்று… இப்போது நீங்களே படுவேகமாக எங்கே ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்…! எனக் கேட்டேன்.

சிறுமுறுவல் அவர் முகத்தில், “அதை ஏனப்பா கேட்கிறாய்…” – என்றவரின் குரல் அவரின் அதிகளைப்பை எனக்கு உணர்த்தியது. உடனேயே “இறைவா ஓய்வாக அமர்ந்து கூறுங்களேன்…” என்றேன்.

அவரோ அமராமல் சுற்றுமுற்றும் பார்த்தார். இறைவன் உயரமான இடத்தில்தானே இருப்பார். அதனால்தான், தரையில் இருக்க சங்கடப்பட்டு கல் அல்லது மரக்குற்றி ஏதாவது தேடுகிறராக்கும் என எண்ணிக் கொண்டே கேட்டேன், “பிள்ளையாரப்பனே என்ன தேடுகிறீர்கள்…”

அவர், என்னைத் திரும்பிப் பாராதபோதும், “ஆலமரத்தை…” – என்று ஒற்றைச்சொல்லில் பதில் வந்தது. 

“நீங்கள் விரும்பி அமரும் அரச மர நிழலில்தானே நின்று கொண்டிருக்கிறோம். இங்கேயே அமருங்களேன் பெருமானே” என்றேன்.

சடுதியாகப் பின்வாங்கினார் விநாயகப் பெருமான், “என்னது… மறுபடியும் அரச மரமா….!” – என்ற அவரின் கேள்வி அச்சம் மேலோங்கி நின்றது. 

“சனீஸ்வரன் என்னை விடாது பிடித்து விட்டான் போலத்தான் இருக்கிறது. நான் நிம்மதியாக ஓரிடத்தில் இருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லைப் போலும், அதுதான் என்னை அரச மரம் இருக்கும் இடமாகப் பார்த்துத் துரத்துகிறான் பாவி… ” என்றார்.

அவரின் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் எனக்கு எதையோ உணர்த்தியது போல இருந்தாலும், அது சரியா தவறா என்று புரியாத குழப்பம். குழப்பத்தை அவரிடமே தீர்த்து விடுவோம் என நினைத்து, அவரிடம் கேட்பதற்கு வாய் திறக்க முன்னர், அதோ வெள்ளெருக்கு அங்கேயே போவோம் வா” என்றார்.

அடிக்கும் வெயில் நம்மை சுட்டெரித்து விடுமே என நான் கேட்க, பதிலேதும் கூறாமலே அவர் அந்தச் செடியின் கீழே அமர்ந்து விட்டார். வேறு வழி? நானும் அவ்விடம் சென்றேன். ஆனால், அந்த இடம் குளிர்மையாக இருந்தது. எங்கிருந்து அந்தக் குளிர்மை வருகிறது எனத் தெரியவில்லை. வந்திருப்பது இறைவனல்லவா. எல்லாம் அவரின் மகிமை என்றெண்ணி,  பெருமானைப் பார்த்தேன். உட்கார் என்றார். அவர் காட்டிய இடத்திலேயே அமர்ந்தேன்.

“என்ன கேட்டாய்… ஏன் ஓடி வருகிறேன் என்றா…?” என்று பதில் கேள்வி எழுப்பியவருக்கு ஆமாம் என்று தலையை ஆட்டினேன்.

“நான்தான் செம்மலை நீராவியடியில் வீற்றிருக்கும் பிள்ளையார்”

நான் அவரைப் பார்த்தேன். அதன் அர்த்தம் புரிந்தவராய் முறுவலித்தபடியே சொன்னார். “ஏன் ஓடுகிறேனா…! எல்லாம் என் விதி…!” – என்றார்.

“விதி என்பது மனிதர்களுக்குத்தானே உங்களுக்கேது”, என்று நான் கூற, “இல்லையில்லை எங்களுக்கும் அது பொருந்தும்”- என்றார் அவசரமாக.

ஒரு கணத்தில் புராண சம்பவங்கள் என் மூளையில் மின்னின. விநாயகர் சொல்வது சரிதான் என்று தோன்றியது. நான் வாயை மூடிக் கொண்டேன். பிள்ளையார் தொடர்ந்தார். முக்கண் முதல்வனே தொடர்ந்தார், “ஈழப் போரில் என் மக்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள். ஊர் விட்டு ஊர் துரத்தப்பட்டார்கள். கை, கால், கண்களை, உறவுகளை இழந்து நடைபிணமானார்கள். ஆனால், எப்போதும் அவர்கள் என்னைக் கைவிட்டதில்லை. நானோ கைவிட்டு விட்டேன். 

இடம்பெயர்ந்து ஊர் ஊராய் ஓடியபோதும் எனது சிலைகளைக் தாங்கள் போகுமிடமெங்கும் கொண்டு சென்று வைத்துப் பூசித்தார்கள். நீராவியடியில் கோவில் கொண்டிருந்த எனக்கோ எங்கும் செல்ல விருப்பமில்லை. அந்த அரச மரமும், நாயாற்றின் நன்னீரும் மறுபக்கம் கடல் கொள் தரையும் உயர் குன்றும் எந்நிலை வந்தாலும் அகல்வதில்லை என்ற பிடியோடு இருந்தேன். கடும் யுத்தம், ஷெல்கள் மழையாய் பொழிந்தன. துப்பாக்கிச் சன்னங்கள் காற்றைக் கிழித்துப் எத்திசையும் பாய்ந்தன. விமானங்கள் குண்டுகளைத் தள்ளின. அருகிருக்கும் நாயாற்று வெள்ளத்துக்கு நிகராக இரத்தாறும் ஓடியது. வகைதொகையின்றிப் பிணங்கள் வீழ்ந்தன. நான் அசரவுமில்லை – அசையவுமில்லை. பிடித்து வைத்தாற்போலவே இருந்தேன். ஒரு கட்டத்தில் எல்லாம் முடிந்தது.

அமைதி நிலவியது. என்னருகே இராணுவ முகாமும் மலர்ந்தது. சாதாரண மானிடன் போல நானும் எண்ணினேன். இனி எனக்கும் வி.ஐ.பி. பாதுகாப்புத்தான் என்று. போகப் போகத்தான் புரிந்தது பாதுகாப்பு எனக்கல்ல, அருகில் கட்டப்படும் விகாரைக்கும் அங்கு குடியேறப் போகும் புத்தனுக்கும் என்று. கோபம் வந்தது. என்ன செய்வது அல்லது என்னதான் செய்து விட முடியும் என்னால். என் மக்கள், என் காவலர்கள் கொல்லப்பட்டபோது பார்த்துக் கொண்டிருந்தவன் அல்லவா நான். ஆனாலும், நான் மக்களைக் கைவிட்ட போதும், என்னை நம்பிய மக்கள் என்னைக் கைவிடவில்லை. சொந்த இடத்திற்கு மீண்டும் வந்தார்கள். நான்தான் காப்பாற்றினேன் என்று நம்பினார்கள். என்னைப் பழையபடி ஆராதித்தனர். நானும் நடந்தவைகளை மறந்துவிட்டேன். 

மறுபடியும் பூசை, புனஸ்காரம், நைவேத்தியம், பொங்கல் என்று கோவிலும் களைகட்டியது. புத்தன் வந்தது ஒருவிதத்தில் எனக்கும் நல்லதாய் போயிற்று, அதனால்தான் தினமும் என்னிடம் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள் என்று எனக்குத் தோன்றிற்று. அங்குதான் வினையே ஆரம்பித்தது. புத்தனின் ஆட்கள் மெல்ல மெல்ல நானிருந்த இடத்தை விழுங்கத் தொடங்கினார்கள். எனது இடத்தையே சுடுகாடாய் மாற்றத் துடித்தார்கள். எனக்காக என் மக்கள் போராடினார்கள். அடிவாங்கினார்கள் – நீதிமன்றம் போனார்கள். இவ்வளவுக்கும் நான் உதவும் நிலையை இழந்து விட்டேன்.

எனக்கு முன்னரே புத்தர் அங்கு குடியிருக்கிறார் என்றார்கள் தொல்பொருள் திணைக்களத்தினர். அவர்கள் கூறியதைப் பார்க்க இது உண்மையாக இருக்குமோ என்று ஆதிமூலமான எனக்கே ஆச்சரியமாக இருந்தது. ஆனால், எனக்கு முன்னால்தானே தெற்கில் இருந்து பழங்காலப் பொருட்களும், ஆதாரங்களும் கொண்டுவரப்பட்டன. இதைச் சொல்லலாம் என்றால், பேச முடியவில்லை. மீறிப் பேசினாலும் யார்தான் கேட்பர். ஏழை பேச்சு அம்பலம் ஏறாது என்பதை அறிந்ததால் நான் ஊமையாகவே இருந்துவிட்டேன்”, என்றுரைத்தார் என்பிரான்.

எல்லாம் புரிந்தது எனக்கு. ஆனாலும், “சிறு சந்தேகம் இறைவா…”, என்றதும் என்னைப் பார்த்தார். “உங்களைத்தான் சிங்கள -பௌத்தர்களும் கும்பிடுகிறார்களே நீங்கள் அங்கேயே இருந்திருக்கலாம்தானே” என்று கேட்டேன்.

“இல்லையில்லை அவர்கள் கும்பிடுவது கணபதி தெய்யோ” என்றார்.

எனக்கோ ஒரே குழப்பம் என்ன இறைவா இது. சிங்களத்தில் உங்களை அழைக்கும் பெயர்தானே என்றேன் எதுவும் புரியாத அப்பாவியாக. புரிந்தவராக சொன்னார், “அவர்கள் கும்பிடுவது கணபதி தெய்யோ, நான் கணபதி தெய்வம்” என்றார்.

எனக்குப் புரிந்து. என்னதான் அவர்கள் பிள்ளையாரை வணங்கினாலும், ஒரே கடவுள்தான் என்றாலும், அவர்கள் கும்பிடுவது கணபதி தெய்யோ, நாம் கும்பிடுவது கணபதியை. ஒரே கடவுளே ஆனாலும் தமிழ்க் கடவுள் வேறு சிங்களக் கடவுள் வேறு என்பது எனக்குப் புரிந்தது.

அது சரி கடவுளே இப்போது நீங்கள் எங்கே கிளம்பி விட்டீர்கள் எனக் கேட்டேன்.

“என்னை அகற்ற வேண்டும். என்னிடத்தை சுடுகாடாக மாற்ற வேண்டும் என்று யார் ஆசைப்பட்டார்களோ. அவர்கள் பக்கம் இப்போது காற்று அடிக்க ஆரம்பித்து விட்டது. புதிது புதிதாக புத்தர் சிலைகளும் வர ஆரம்பித்து விட்டன. அது புதிதாக இருந்தாலும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே கண்டெடுத்த சிலைகள் என்பார்கள். இனி அங்கிருப்பது உசிதமல்ல என்று அங்கிருந்து ஓட ஆரம்பித்தேன்”, என்றார் விநாயகப் பெருமான்.

“சரி, இப்படியே எங்கே போகிறீர்கள்”, என்ற என் கேள்விக்கு “யாழ்ப்பாணப் பக்கம் போகிறேன். எனக்கு ஓரிடம் அவர்கள் தருவார்கள்”, என்றார் நம்பிக்கையுடன் கடவுள். 

இப்போது நான் சிரிக்கத் தொடங்கினேன். இதைப் பார்த்த பிள்ளையாரப்பனுக்கு கோபம் ஏறத் தொடங்கியது. என் தவறை உணர்ந்தவனாக சொன்னேன். இப்போது அங்கும் இதுதான் நிலைமைதான். மாவிட்டபுரத்திலும், நயினாதீவிலும், நாவற்குழியிலும் இருக்கும் தமிழ்க் கடவுள்கள் எல்லாம் ஓடும் நிலைதான்”, என்றேன்.

இப்போது பிள்ளையாரைப் பார்த்தேன். அதிர்ச்சியடைந்தால் போல இருந்தது. அப்படியே கல்லாய் சமைந்துபோனார் எம் பெருமான்.

“டேய்… டேய்… இதோ பக்கத்திலேயே தண்ணீ கிடக்கடா…” என்ற குரல் என்னை அறைந்தது திடுக்கிட்டுப் பார்த்தேன். நாம் படுத்திருந்த பற்றையின் மறைவுக்கு அப்பால் சில அடி  தூரத்தில், வெள்ளெருக்கு. அதன் கீழே பிள்ளையார் சிலை. அதனருகே குளிர்மை தரும் சிறு பொக்கணை. மீண்டும் அந்தப் பிள்ளையார் சிலையில் கண்கள் நிலைத்தன. சோகம் ததும்பும் முகத்துடன் பிள்ளையார். அப்படியானால் நான் கண்டது கனவில்லையா என்னை நானே கேட்டேன். விடை தெரியவில்லை குழப்பமும் மர்மமும் நிறைந்தவனாக பிள்ளையார் சிலையைப் பார்த்தேன். நான் கண்ட அதே முகம்தான். மீண்டும் பார்த்தேன். ஆனால், என் கண்ணுக்குப் பிள்ளையார் தெரியவில்லை. தமிழ் மக்களின் முகமே சோகமாகத் தெரிந்தது.