அரசியல் கைதிகள் விடுதலையும் ஊடகங்களின் அதி மேதாவித்தனமும்

ulloor arasiyal
ulloor arasiyal

“தமிழ் அரசியல் கைதிகள் ஏழு பேர் சத்தமின்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்”, என்றொரு செய்தி இணைய ஊடகங்களில் வெளியாகியது. இந்தச் செய்தி வெளியானமை அரசியல் கைதிகளின் – அவர்களின் உறவுகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. அதிமுக்கியமாக சிறைகளில் இருக்கும் அரசியல் கைதிகளும் – அவர்களின் உறவுகளும் மேலும் அச்சத்துக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தேர்தல் பரப்புரைக்காக யாழ்ப்பாணம் வந்திருந்தார். அப்போது “அரசியல் கைதிகளை விடுவிப்பேன்”, என உறுதியளித்திருந்தார். ஆனால், அவர் தமிழ் மக்களுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்ற வேணவா தமிழ் மக்களிடம் இருந்தது. இப்போது அது சாத்தியமாகி உள்ளதாகத் தெரிகிறது. 7 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என செய்திகள் கசிந்துள்ளன. அந்தச் செய்திகள் வெறுமனே அரசியல் கைதிகள் விடுதலை என்று மட்டுமே அறிக்கையிட்டுள்ளன. ஆனால், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்காலம் கிட்டத்தட்ட முடிவுறும் நிலையில் இருந்தவர்களே விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

விடுதலையானவர்கள் ஓரிரு வருடங்கள் முற்கூட்டியே விடுதலை பெற்றிருக்கிறார்களே தவிர, அவர்கள் விசாரணைகள் ஏதுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களோ அல்லது குறுகிய தண்டனைக்காலத்தை முடித்து தண்டனை முடிவதற்கு நீண்டகாலம் இருப்பவர்களோ விடுதலை செய்யப்படவில்லை. அல்லது பிள்ளைகள் அநாதைகளாக நிற்க சிறையிருக்கும் தந்தையர்களோ விடுதலை செய்யப்படவில்லை. இன்னும் சற்று ஆழமாகப் பார்த்தால் விடுவிக்கப்பட்டவர்கள் தண்டனைக் காலத்தையும் விட அதிக காலம் சிறையிலிருந்தவர்களே விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

அரசியல் கைதிகளின் விடுவிப்பு என்பது நீண்டகாலமாக தமிழ் மக்களின் கோரிக்கைகளில் ஒன்றாக இருக்கிறது. பொதுத் தேர்தல் ஒன்று நெருங்கி வரும் நிலையில் அரசியல் கைதிகளை சம்பிரதாயபூர்வமாக விடுவித்து வாக்கு வங்கியை அதிகரிக்கச் செய்ய ஆட்சிப் பீடத்தில் இருப்பவர்களால் முடியும். தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் இவ்விடயத்தில் எதைச் செய்தாலும் தென்னிலங்கையில் கேள்வி கேட்பதற்கு எவரும் இல்லை என்ற நிலைப்பாடு உள்ளது. ஆனால், தற்போது தென்னிலங்கை அரசியல் களநிலவரம் அப்படியல்ல.

தொடர் தோல்விகளால் தலைமைத்துவ மாற்றத்தை சந்திக்கும் மிக முக்கியமான கட்டத்தில் நிற்கிறது ஐக்கிய தேசியக் கட்சி. ஆரம்பத்தில் தமிழர்களுக்கு எதிரான இனவாதத்தை பற்றவைத்துக் குளிர்காய்ந்த கட்சியே இந்தக் கட்சிதான். முதன்முதலில் தமிழர் பிரதேசத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை திருகோணமலை, அம்பாறை, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்படுத்தியவர்களே இந்தக் கட்சியினர்தான். இவற்றுக்குப் பிறகே ஆட்சியைப் பிடிப்பதற்கும் அதைத் தக்கவைக்கவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இப்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்ற கட்சிகள் இனவாதத்தை கையில் எடுத்தன. இந்நிலையில் ஐ.தே.கவின் தலைவராக ரணில் விக்ரமசிங்க வந்தபின், ஓரளவு சமதான அணுகுமுறை தமிழர்களுடன் கையாளப்பட்டது. ஆனால், இனவாத குரோதத்தில் மூழ்கியுள்ள தென்னிலங்கை தரப்புகளால் இதைப் பொறுக்க முடியவில்லை. இதனால்தான், நிலையான ஆட்சியையோ – ஜனாதிபதி பதவியையோ கால் நூற்றாண்டு காலத்தில் பெற அக்கட்சியால் முடியவில்லை.

கிட்டத்தட்ட தனது அரசியல் அந்திம காலத்தில் நிற்கும் ரணில் விக்ரமசிங்கவுக்குப் பிறகு, ஐ.தே.கவின் தலைமைத்துவத்தில் பெரும் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது. மற்றைய கட்சிகளை விட இனவாதத்தில் தாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்குமாற்போல் வேலைத்திட்டங்கள், பிரசார உத்திகள் கட்டமைக்கப்படவுள்ளன. இவ்வாறான நிலையில், இந்தச் சாதாரண விடயத்தைப் பெரிதாக்கி ஆபத்தை விலைக்கு வாங்க வேண்டாம் என்ற எண்ணத்தில் ஆளும் கட்சி தணடனைக்காலம் முடிவுற சற்று முன்னராக 7 அரசியல்கைதிகளை விடுவித்தது. இதைப் புரிந்து கொள்ளாதவர்களாக ஊடகங்கள் – முக்கியமாக இணைய ஊடகங்கள் “எக்ஸ்குளூசிவ்” செய்தி அறிக்கையிடுகிறோம் என்ற பெயரில் இதனை அம்பலப்படுத்தி மீதமிருக்கும் அரசியல்கைதிகள் – அவர்களின் உறவுகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

அரசியல் கைதிகளின் விடுதலையை அரசு தமக்கான பெரும் தேர்தல் உத்தியாகப் பயன்படுத்தியிருக்க முடியும். அதுவும் தண்டனைக் காலம் முடிவடைய குறுகிய காலம் இருப்பவர்களை விடுவிப்பதால் அவர்களுக்கு ஒரு பாதகமும் ஏற்படப்போவதில்லை. மாறாக நன்மைகளையே அதிகளவில் பெறமுடியும். ஆனால், அவர்கள் இதைச் செய்யாத நிலையில் ஊடகங்களின் அறிக்கையிடல் ஆபத்தில் முடிய வாய்ப்புள்ளது.

அரசியல் கைதிகளாக இருந்த ஜே.வி.பியினரை அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா விடுதலை செய்தபோது, சிங்கள, ஆங்கில ஊடகங்கள் பலத்த மௌனம் காத்தன. காரணம், அரசியல் கைதிகளின் விடுதலையை அவை வரவேற்றன – அவசியம் எனக் கருதின. எனவே அவை சமூகப் பொறுப்புணர்வுடன் செயற்பட்டன. ஆனால், தமிழ் ஊடகங்களோ தமக்கான பொறுப்புணர்வை மறந்து – முழுமையான அறிக்கையிடல் இன்றி முந்திக் கொடுக்கிறோம் – எக்ஸ்குளூசிவாகக் கொடுக்கிறோம் என்ற பெயரில் சிறு தொகை வாசகரை அதிகரிக்கும் நோக்கில் பொறுப்பற்று செயற்படுகின்றன.

இனியாவது இந்த விடயத்தில், பொறுப்புணர்ந்து – எதிக்ஸ் ஒவ் ஜேர்னலிஸத்தைப் பின்பற்ற வேண்டும். ஊடகங்கள் தங்களின் கையில் தமிழ் சமுதாயத்தின் நன்மை இருக்கிறது என்பதைப் பொறுப்புணர்தல் அவசியம்.

தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டதால், இனி இவ்வாறான விடயங்களில் கவனமுடன் – பொறுப்புடன் ஊடகங்கள் செயற்பட வேண்டும் எனக் கருதியே இந்தப் பதிவு.