விக்கினேஸ்வரனை மீளவும் கூட்டமைப்புடன் இணைக்கும் முயற்சிகள் வெற்றியளிக்குமா?

Election risult 1
Election risult 1

– கரிகாலன் –

விக்கினேஸ்வரன் தலைமையில் ஒருமாற்றுத் தலைமையை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றன. இவ்வாறான கலந்துரையாடல்கள் கடந்த ஒரு வருடமாகவே இடம்பெற்றுவருகின்றது ஆனாலும், இன்னும் ஒரு உறுதியான முடிவு எட்டப்படவில்லை. இதற்கிடையில் விக்கினேஸ்வரனை மீளவும் கூட்டமைப்புடன் இணைப்பதற்கான முயற்சிகளிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கோட்டபாய ராஜபக்ச வெற்றிபெற்றிருக்கின்ற சூழலிலும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சேக்களின் கட்சியான சிறிலங்காபொதுஜனபெரமுரன அதி கூடிய ஆசனங்களைபெற்று, ஆட்சியமைக்கக்கூடியநிலைமை காணப்படுவதாலும், யாழ்ப்பாணத்திலுள்ள சில சிவில் சமூக பிரமுகர்கள், இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. இதில் ஈடுபடும் சிலர் ஏற்கனவே தமிழ் மக்கள் பேரவையின் சுயாதீனக் குழுவில் இடம்பெற்ற பிரமுகர்களாவர்.

அண்மையில் இலங்கை தமிழரசுகட்சியின் தீர்மானிக்கும் தலைவரான, எம்.ஏ.சுமந்திரன், அனைவரையும் கூட்டமைப்புடன் வந்து இணையுமாறு அழைப்பு விடுத்திருந்தார். மாற்று அணிஎன்று ஒன்றை உருவாக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தார். சுமந்திரனின் அரசியல் கபடம் விளங்குகிறது. சுமந்திரன் சமீபநாட்களாக அதாவது கோட்டபாயவின் வெற்றிக்கு பின்னராக, நாங்கள் மகிந்ததரப்பை மூன்றில் இரண்டு ஆசனங்களை எடுக்கவிடக் கூடாது. எனவே நாங்கள் 20 ஆசனங்களை வெற்றி பெற்றால்தான்; அதனை எங்களால் தடுக்கமுடியும், என்றவாறு கூறிவருகிறார். உண்மையில் இது ஒரு சிறு பிள்ளைத்தனமான கதை. ஏனெனில் மகிந்த தரப்பு மூன்றில் இரண்டு எடுப்பதும் எக்காமல் விடுவதும் சிங்களவர்களின் கையில்தான் இருக்கின்றது. இதற்கும் தமிழ் மக்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஒருவேளை கூட்டமைப்பு 20 ஆசனங்களை பெற்றால் கூட, அது மகிந்ததரப்பை எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை.

இது தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மத்திலேயே ஒரு சந்தேகம் நிலவுகின்றது. உண்மையிலேயே சுமந்திரன் கோட்டபாய தரப்பு மூன்றில் இரண்டை பெறுவதற்காகத்தான் இவ்வாறு கூறிகின்றாரா? ஏனெனில் இவ்வாறு ஒரு தமிழர் கூறும் போது அதனால் சிங்கள தேசியவாதிகள் அதிருப்தியடைவர். நீங்கள் யார்,மூன்றில் இரண்டை தீர்மானிக்க, இதோ நாங்கள் கொடுக்கின்றோம் என்று சிங்களமக்கள் சிந்தித்துவிட்டால், கோட்டா மூன்றில் இரண்டை இலகுவாகப் பெற்றுவிடுவார். ஒருவேளை இதற்காகத்தான் சுமந்திரன் இதுபற்றி பேசுகின்றாரா? இந்த சந்தேகத்தையும் நாம் இலகுவாக நிராகரித்துவிட முடியாதுதான்.

இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் கூட்டமைப்புக்கு மாற்றான தலைமையாக கருதப்படும் விக்கினேஸ்வரனை, மீளவும் கூட்டமைப்புடன் அதாவது சமபந்தன் – சுமந்திரன் தரப்புடன் இணைப்பதன் ஊடாக அதிக ஆசனங்களை பெறலாம் என்றவாறான ஒருகருத்தை சிலர் விதைக்க முற்படுகின்றனர். அவர்கள் எண்ணுவதுபோல் ஒருவேளை அவ்வாறு அனைவரும் ஓரணியில் நின்றால் அதிக ஆசனங்களை பெறக்கூடியதாக இருக்கும் ஆனால், அதுயாருக்கான ஆசனங்களாக இருக்கும் என்பதுதான் இங்கு கேட்கவேண்டிய கேள்வி.

நிச்சயமாக தற்போது வீழ்ந்து கிடக்கும் தமிழரசுகட்சி மீளவும் அதிக ஆசனங்களை பெற்றுக்கொண்டு தாங்களே பிரதானகட்சி, தாங்கள் கூறுவதையே அனைவரும் கேட்கவேண்டும் என்று கூறும். இதற்கான ஒரு தந்திரோபாயமாகவே சுமந்திரன் தற்போது ஒற்றுமைபற்றி பேசுகின்றார். உண்மையில் விக்கினேஸ்வரனை கூட்டமைப்புடன் இணைக்கும் முயற்சியானது உண்மையில் விக்கினேஸ்வரனை தோற்கடிப்பதற்கான முயற்சிதான். சுரேஸ் பிரேமச்சந்திரனை ஒரு சவாலாக சுமந்திரன் தரப்பு நோக்கவில்லை. ஆனால் விக்கினேஸ்வரன் அப்படியல்ல. இன்றைய நிலையில் விக்கினேஸ்வரன் நாடாளுமன்றம் செல்வாராக இருந்தால், அது சுமந்திரனுக்கு பெரும் சவாலாக அமையும்.

ஏனெனில் விக்கினேஸ்வரனா அல்லது, சுமந்திரனா என்று வந்தால் விக்கினேஸ்வரன்தான், முன்னுக்குத் தெரிவார். அவரை நோக்கியே அனைவரது பார்வையும் திரும்பும். இதன் காரணமாக, எப்பாடுபட்டேனும் விக்கினேஸ்வரன் நாடாளுமன்றம் வந்துவிடக்கூடாது என்பதில்தான், சுமந்திரனும் தமிழரசுகட்சியும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றது ஆனாலும் அதனை தடுக்கும் உபாயமற்றிருக்கிறது. இவ்வாறானதொரு சூழலில்தான் ராஜபக்சேக்கள் மீளவும் ஆட்சியை கைப்பற்றியிருக்கின்ற நிலையில், இதனை ஒரு சாட்டாக வைத்துக் கொண்டு, அனைவரும் ஓரணியில் நிற்கவேண்டிய காலத்தில் நாங்கள் தனித்தனியாக நிற்கக்கூடாது, என்றவாறான கருத்தை மக்கள் மத்தியில் விதைக்க சுமந்திரன் முற்படுகின்றார். அதற்கு செயல்வடிவம் கொடுக்கவே சில புத்திஜீவிகளும் இப்போது முயற்சித்து வருகின்றனர். இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடும் ஒருஅரசியல் ஆய்வாளருக்கு தேசியபட்டியல் ஆசனம் ஒன்றை தருவதாக சுமந்திரன் கூறியிருப்பதாகவும் ஒருதகவல் யாழில் உலவுகிறது.

விக்கினேஸ்வரன் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டார் என்றே அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் விக்கி தெரிந்தே நச்சுவட்டமொன்றிக்குள் செல்லமாட்டார் என்றே அவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் விக்கினேஸ்வரனுக்கு எதிரான அனைத்து விடயங்களையும் திரைமறைவில் இருந்து மேற்கொண்டவர் சுமந்திரன் என்பது விக்கினேஸ்வரன் அறியாத ஒன்றல்ல, எனவே அவ்வாறான ஒருவரை நம்பி விக்கினேஸ்வரன் ஒருபோதும் செல்ல வாய்ப்பில்லை என்றே கூறப்படுகின்றது. அதனையும் மீறி விக்கினேஸ்வரன், கூட்டமைப்புக்குள் செல்வரானால், அவர் நிச்சயம் அவருக்கு அவமானகரமான தோல்வியையே பரிசளிக்கும்.

உண்மையில் சுமந்திரன் எத்தகையதொரு நிகழ்சி நிரலில் பணியாற்றுகின்றார் என்பதை எவராலுமே விளங்கிக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் நேற்றுவரை ரணிலின் செல்லப்பிள்ளையாக இருந்த சுமந்திரன், இப்போது வடக்கு ஆளுனராக மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரனை நியமிக்குமாறு மகிந்த ராஜபக்சவிற்கு சிபார்சு செய்திருப்பதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன. எந்த அடிப்படையில் மகிந்த ராஜபக்சவிடம் கூட்டமைப்பு உதவி கோருகின்றது? ஆனாலும், இது தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் எதனையும் அறிந்திருக்கவில்லை ஆனால் கூட்டமைப்பின் நிலைப்பாடாகவே சுமந்திரன் இதனை மகிந்தவிடம் கூறியிருக்கின்றாராம்.

அதேவேளை இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் சம்பந்தன் மற்றும் மாவைசேனாதிக்கு ஆசனங்களை வழங்காமல் விடுவோம் -அவர்களுக்கு வயது கூடிவிட்டது இனி எதற்கு அவர்களுக்கு பதவி-என்று சுமந்திரன், கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனிடம் கூறியிருக்கிறார். இதனை அறிந்த மாவை, தற்போது கடும் அதிருப்தியில் இருக்கிறாராம். இவ்வாறு தங்களுக்குள் இருக்கின்றவர்களையே எப்படி களற்றிவிடலாம் என்று எண்ணுபவர்கள் எவ்வாறு விக்கினேஸ்வரனையும் சுரேஸ் பிரேமச்சந்திரனையும் அரவணைப்பார்கள்? எவ்வாறு அவர்களின் வெற்றியை அனுமதிப்பார்கள்?

எனவே விக்கினேஸ்வரனை, மீண்டும் கூட்டமைப்புக்குள் கொண்டுசெல்ல முற்படுவர்களின் இலக்கு மிகவும் தெளிவானது. அதாவது, விக்கினேஸ்வரன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மாற்றுத் தலைமைக்கான முயற்சிகளை தடுத்து அதனை இல்லாமலாக்குவது. அதேவேளை விக்கினேஸ்வரனை தேர்தலில் தோற்கடிப்பதன் ஊடாக, அவரை அரசியல் அரங்கிலிருந்து முற்றிலுமாக வெளியேற்றுவது.

இதற்காகவே அவரை கூட்டமைப்புக்குள் கொண்டு செல்ல எத்தணிக்கின்றனர். விக்கினேஸ்வரன் கூட்டமைப்புக்குள் செல்லும் போதே, அவர் இதுவரை கூட்டமைப்பு தொடர்பில் முன்வைத்துவந்த விமர்சனங்கள் அனைத்தும் தவறானவைஎன்றே மக்கள் புரிந்துகொள்வர். விக்கினேஸ்வரன் பதவிக்காகத்தான் இதுவரை பேசிவந்திருக்கின்றார். இவரும் பத்தோடு பதினொன்றுதான் என்றே புரிந்துகொள்ளப்படுவார். இது விக்கினேஸ்வரன் என்னும் தனிமனிதரையும் பெருமளவிற்கு பாதிக்கும்.

ஒருவேளை உண்மையிலேயே அனைவரும் ஓரணியில் நிற்கவேண்டிய இக்கட்டானதொரு நிலைமை ஏற்படுமாக இருந்தால், கூட்டமைப்புக்குள் கொள்கை சார்ந்தும் கட்டமைப்பு சார்ந்தும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய பின்னர்தான் அதுபற்றி சிந்திக்கவேண்டும். கூட்டமைப்புக்குள் தமிழரசுகட்சியின் ஆதிக்கம் இருக்கும்வரையில் அது எப்போதுமே சாத்தியமான ஒன்றல்ல. இந்த நிலைமை கூட்டமைப்புக்குள் இருக்கின்றபோது, கூட்டமைப்புடன் இணைவது என்பது விக்கினேஸ்வரனின் அரசியல் தற்கொலையாகவே முடியும். அரசியல் தற்கொலை ஒன்றில் ஈடுபடும் எண்ணம் விக்கினேஸ்வரனுக்கு இருக்காது என்றே நம்பப்படுகிறது.

( பொறுப்பு திறத்தல்: இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம் )