மலேசியாவின் அமைதியைக் குலைப்போருக்கு எதிராக நடவடிக்கை

uu
uu

மலேசியாவில் நிலவி வரும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கெடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுவோருக்கு எதிராக உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்று நேற்று உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் எச்சரிக்கை விடுத்தார்.

அண்மைய சம்பவங்களைச் சுட்டிக் காட்டிய அமைச்சர், “மலேசிய மக்களின் உணர்ச்சிகளைப் பாதிக்கும் சொற்களைக் கூறுவது அல்லது செயல்களில் ஈடுபடுவது தவிர்க்கப்படவேண்டும்,” என்று அனைத்துக் கட்சிகளுக்கும் வலியுறுத்தினார். ஜாலோர் கெமிலாங், நெகாராகூ போன்ற அண்மைய நிகழ்வுகளைக் குறிப்பாகச் சுட்டிய அமைச்சர், அவை பொறுப்பற்றவை, நாட்டுப்பற்று அற்றவை என்று சாடினார்.

நாட்டில் மீண்டும் கம்யூனிஸ்ட் கொள்கையை நினைவூட்டும் அல்லது தூண்டும் செயல்கள் நடக்கக்கூடாது. அவை உடனே நிறுத்தப்பட வேண்டும் என்று திரு முகைதின் கூறினார். தவறான தேசிய கொடியைப் பயன்படுத்தியது, ஒரு கம்யூனிஸ்ட் தலைவரின் சாம்பலை நாட்டுக்குள் கொண்டு வருவது, தேசிய கீதத்தை மொழிபெயர்ப்பது போன்ற நிகழ்வுகள் தொடர்பில் திரு முகைதின் இவ்வாறு கடுமையாகப் பேசியிருந்தார்.

“இந்தப் போக்கைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். நாட்டை சீர்குலைப்பதற்காக ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் இவை. சம்பவங்கள் குறித்து போலிசார் விசாரணை தொடங்கியுள்ளனர். பொது அமைதியை வேண்டுமென்றே கெடுக்கும் முயற்சியில் ஈடுபடுவோருக்கு எதிராகச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்”, என்றார் அமைச்சர்.