சீனாவுக்குக் கடன் கொடுப்பதை நிறுத்துமாறு உத்தரவு!

3 wd
3 wd

சீனாவுக்குக் கடன் கொடுப்பதை நிறுத்துமாறு உலக வங்கிக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தும் சீனாவுக்குக் கடன் வழங்க உலக வங்கி நேற்று முன்தினம் முடிவெடுத்தது.

சீனாவுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் வரை  குறைந்த வட்டிக்குக் கடன் வழங்க உலக வங்கி முடிவு செய்தது.

“சீனாவுக்கு உலக வங்கி ஏன் கடன் கொடுக்கிறது? இது எப்படி சாத்தியமாகும்? சீனாவிடம் நிறைய பணம் இருக்கிறது. அப்படி இல்லாவிட்டால் பணத்தை அவர்கள் தயாரிப்பார்கள். கடன் கொடுப்பதை நிறுத்துங்கள்,” என்று அதிபர் டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டார்.

“சீனாவுக்கு உலக வங்கி கடன் கொடுப்பது வெகுவாகக் குறைந்துள்ளது.

“அமெரிக்கா போன்ற எங்களது பங்குதாரர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சீனாவுக்குக் கொடுக்கப்படும் கடன் குறைந்துள்ளது.

“நாடுகள் பணக்கார நாடுகளானதும் அவற்றுக்குக் கடன் கொடுப்பதை நாங்கள் நிறுத்திக்கொள்கிறோம்,” என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் மின்னஞ்சல் மூலம் உலக வங்கி தெரிவித்தது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.