பொறுப்புக்கூறலிருந்து இலங்கை முழுமையாக விலகிக்கொள்ளும்!

7 d
7 d

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் பிரகாரமான பொறுப்புக்கூறல் கடப்பாட்டிலிருந்து இலங்கை முழுமையாக விலகிக்கொள்ளுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ்  தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் எதிர்வரும் மார்ச்  கூட்டத் தொடரில் அரசாங்கத்தின் நிலைப்பாடு முழுமையாக இதுவாகவே காணப்படும் எனவும் அவர்  கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவையின் அடுத்த அமர்வு தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே ஜி.எல்.பீரிஸ்  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய தேசிய கட்சியை 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு உதவி புரிந்த சர்வதேச அமைப்புக்கள், மேற்குலக நாடுகளை திருப்திப்படுத்தும் விதமாகவே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டு வரப்பட்டது.

இப்பிரேரணைகளுக்கு கடந்த அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நாடாளுமன்றத்திற்கும் அறிவிக்காமல் பொறுப்பு கூறல் விடயத்திற்கு தான் தோன்றித்தனமாக இணக்கம் தெரிவித்தனர்.

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கம் பொறுப்பு கூறலை முன்னெடுக்க வேண்டிய தேவை கிடையாது. ஏனெனில் நிறைவேற்றப்பட்ட பிரேணைகள் சர்வதேசத்தில் எமது நாட்டு இறையாண்மையினை காட்டிக் கொடுப்பதாகவே கருதப்படும்.எமது நாட்டுக்கு முற்றிலும் மாறுப்பட்ட விதமாகவே பிரேரணையின் உள்ளடக்கங்கள் காணப்படுகின்றது.

பொறுப்பு கூறல் விடயத்திற்கு  தமிழ் தேசிய கூட்டமைப்பு  எவ்வகையில் அழுத்தங்களை சர்வதேச மட்டத்தில் இருந்து பிரயோகித்தாலும் அது பயனளிக்காது. எந்த உடன்படிக்கைகளுக்கு இணக்கம் தெரிவித்தும் புதிய அரசாங்கம் தோற்றுவிக்கப்படவில்லை. என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

அந்தவகையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளில் இருந்து விலகிக் கொள்ளும்  நிலைப்பாட்டிலே அரசாங்கம் உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.