அனைத்துலக மனித உரிமை தினம் அர்த்தம் பெறுமா?

ddddddddddddddddd 2
ddddddddddddddddd 2

 
இன்று அனைத்துலக அனித உரிமைகள் தினமாகும். ஒரு மனிதனின் அடிப்படை உரிமை என்ன? தான் பிறந்த மண்ணில் தனக்கான உரிமைகளுடன் வாழ்தலே அடிப்படை உரிமையாகும். ஒரு மனிதன் வாழும் உரிமையைப் பெறுவதும் மற்றவரை வாழ விடும் வகையில் நடப்பதுதான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரகடனத்தின் அடிப்படை அம்சம் ஆகும். அப்படிப் பார்க்கையில், நாம் நமக்கான வாழ்வைத்தான் வாழ்கிறோமா என்ற கேள்வியே எழுகின்றது.
 
இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய கால கட்டத்தில், உலக மக்களை பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. அத்துடன் சமாதானமான அமைதியானதொரு வாழ்வை அனைத்து மக்களுக்கும் உறுதிப்படுத்துவதும் உலக நாடுகளின் கூட்டிணைவாக ஐக்கிய நாடுகள் உருவாக்கம் நிகழ்ந்தது. எனினும் போரும் மனித உரிமை மீறல்களும் மக்களின் அவல வாழ்வும் கடந்த அறுபது வருடங்களுக்கும் மேலாக உலகின் பல்வேறு நாடுகளில் நடந்தபடியே இருக்கின்றது.
 
நாமும் ஆண்டு தேரும் டிசம்பர் 10ஆம் திகதி மனித உரிமை தினத்தை அனுஷ்டிக்கின்றோம். உண்மையில் இந்த தினம் காகிதத்தில் நினைவுகூறப்படும் ஒரு தினமானத்தான் இந்த உலகில் காணப்படுகிறதா என்பதை அனைத்துலக மக்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்? இந்த யுகத்தில்கூட போர் நடந்து கொண்டே இருக்கின்றது. அண்மையில்கூட குர்திஸ்தான் மக்கள் போர் நெருக்கடிகளை எதிர்கொண்டார்கள். உலகில் இன்னமும் போரின் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கின்றது. குண்டுகளின் வெடிப்பும் காதுகளை நிறைத்துக் கொண்டே இருக்கின்றது.
 
உலகின் அனைத்துப் பகுதிகளிலும் தேசிய இனங்களை அடக்கி, ஒடுக்கும் போக்குகளும் அடிமைப்படுத்தல்களும் நடந்து கொண்டே இருக்கின்றது. சாதாரணமாக ஒரு மனிதனின் அடிப்படை உரிமையை மதிப்பதைப் பற்றி ஐ.நாவின் மனித உரிமை சாசனம் மிகவும் கண்டிப்பான அவதானமான கருத்தை கொண்டிருக்கின்றது. எல்லா மனிதர்களும் சுதந்திரமானவர்கள் என்பதையும் உரிமையிலும் கண்ணியத்திலும் ஒருவருக்கு ஒருவர் சமமானவர்கள் என்பதையும் ஐ.நாவின் மனித உரிமைப் பிரகடனம் குறிப்பிடுகிறது. இது நடைமுறையில் எப்படி இருக்கின்றது?
 
ஒவ்வொரு மனிதனுக்குமான வாழ்தலை வலியுறுத்தும் இந்த நாள் இனம், மதம், நாடு, மொழி, பால், சாதி போன்ற ஏற்றத்தாழ்வுகளற்ற ரீதியில் மனிதர்கள் அவர்களுரிய சம உரிமையை உடையவர்கள் என்றும் ஐ.நாவின் சாசனம் மேலும் குறிப்பிடுகிறது. இன்றைய நாளில் ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் இனத்தின் உரிமைகளுக்கு என்ன இடம் வழங்கப்பட்டது என்பதைக் குறித்து ஆராய்வது உபயோகம் மிக்கது. ஒரு மனிதனின் உரிமை பற்றி பேசுகின்ற சாசனங்கள், ஒரு இனத்தின் ஒரு சமூகத்தின் உரிமைக்கு எந்த இடத்தை வழங்குகின்றது என்பதையும் பார்க்க வேண்டும்.
 
உலகில் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளானவர்களில் ஈழத் தமிழ் மக்கள் சமூகமும் ஒன்று. அதேவேளை, உலக மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதிலும், அவர்கள் ஒடுக்கப்படுகின்றபோது குரல் கொடுப்பதிலும் ஈழத் தமிழ் மக்கள் முன்னிலையானவர்கள். ஆனால் ஈழத் தமிழ் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்ட காலத்தில், உலகின் அணுகுமுறைகள் மனித உரிமையை நிலைநாட்டும் விதமாக அமையவில்லை. உலகின் அமைதி விதிகளும் பாதுகாப்பு அவதானங்களும் சமாதான நோக்கங்களும் தோற்றுவிட்டது என்றே சொல்லலாம்.
 
இலங்கை தீவின் அமைதிக்கும் எதிர்கால குழந்தைகளின் சிறப்பான வாழ்வுக்கும் இந்த தீவு மனிதர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். அனைவரும் ஒருவருக்கு ஒருவர் சமமானவர் என்ற சூழல் ஏற்பட வேண்டும். ஒவ்வொருவரதும் மொழி, சமயம், பண்பாட்டு அடையாளங்கள் பேணப்படவேண்டும். மனித உரிமைகளை மதிக்கின்ற போக்கு கொண்ட சமூகங்களே முன்னேற முடியும். மற்றவர்களின் உரிமைகளை மதிக்கின்ற பண்பு பெரியதொரு மாண்பு ஆகும்.
 
அதிகம் அதிகம், பலிகளும் இடர்பாடுகளும் நிகழ்ந்த இலங்கைத் தீவிலிருந்து ஒரு பொதுசன ஊடகத்தின் மிகுந்த ஏக்கமுமாய் இருப்பது மனித உரிமைகளையும் அவர்களின் பொது சுதந்திரத்தையும் மதிக்க வேண்டும் என்ற வேண்டுதலும் விருப்புமாகும். பழைய காலங்கள் மீளாதிருப்பதற்கும், இழப்புக்களை எமதினங்கள் மீண்டும் சந்திக்காதிருப்பதற்கும் அவரவர் உரிமைகளை பகிருகின்ற, உணர்கின்ற, ஏற்றுக்கொள்ளுகின்ற ஆரோக்கியமான சூழல் உருவாகுவது அவசியமானதாகும். அனைவரது வேண்டுதலாக மாத்திரமின்றி நடைமுறைச் செயலுமாக இதனை கைக் கொண்டு இந்த நாளுக்கு உண்மையான அர்த்தத்தை மெய்பிப்போம்.  
 
ஆசிரியர் பீடம்,
தமிழ்குரல்.
10.12.2019