ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்ட நடவடிக்கை !

Gotabaya Rajapaksa
Gotabaya Rajapaksa

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் மின்சக்தி, சக்திவலு அமைச்சுக்கும் மற்றும் அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

நாட்டில் மின்சக்தி தேவையை பூர்த்தி செய்தல் மற்றும் அதற்கான அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் வெளிநாடுகளைத் தெளிவுபடுத்தி புதிய செயற்திட்டங்களுக்கான முதலீடுகளை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி கோட்டாபய கவனம் மேற்கொண்டுள்ளார்.

இந்த சந்திப்பில், இலங்கை மின்சார சபை, இலங்கை பேண்தகு சக்திவலு அதிகார சபை உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அத்துடன், அந்நிறுவனங்களில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான துரித தீர்வுகள் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

மின் உற்பத்தி துறையில் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கும் புதிய செயற்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றை ஆரம்பிப்பதற்கு முன்னர் உரிய சாத்திய வள அறிக்கைகளை பெற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி இதன்போது தெளிவுபடுத்தி கூறினார் .

மேலும் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மின் உற்பத்தி துறைசார்ந்த முன்மொழிவுகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்நிலையில் ஜனாதிபதியின் இந்த முன்மொழிவுகளுக்கு மின்சக்தி அமைச்சின் அதிகாரிகள் பூரண இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

அதேவேளை கடந்த சில வருடங்களில் மின்உற்பத்தி துறை தொடர்பாக வெளிநாடுகளுடன் பல புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ள போதிலும், அவற்றுள் பெரும் பாலானவை தனியார் நிறு வனங்களுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களாகவே காணப்படுகின்றது அரசாங்கங்களுக்கிடையிலான ஒப்பந்தமாக அமையாதவகையிலேயே காணப்படுகின்றது.

இதன் காரணமாக அச்செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய கற்கைகளை மேற் கொண்டு நாட்டிற்கு நன்மை பயக்கும் வகையில் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும் இச்சந்திப்பில் மின்சக்தி மற்றும் சக்திவலு அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர, மின்சக்தி மற்றும் சக்திவலு அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.