ஏன் விக்னேஸ்வரன் (மற்றவர்களை விடவும்) முக்கியமானவர்?

20191215 074412 1
20191215 074412 1

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலின் முடிவு சிங்களவர்களின் மனோநிலையை தெளிவாக படம்பிடித்துக் காட்டியிருக்கின்றது. சிங்களப் பெரும்பாண்மை தங்களுக்கான தலைவரை காண்பித்திருக்கின்றது. எவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இனிவரப் போகும் ஐந்து வருடங்களுக்கு கோட்டபாயதான் இலங்கையின் ஜனாதிபதி. அவரது அரசியல் நகர்வுகளைத்தான் தமிழர் தரப்பு எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. கோட்டபாய முன்னைய கோட்டபாயவாகத்தான் நடந்து கொள்வாரா அல்லது முற்றிலும் வித்தியாசமான ஒரு தலைவராக நடந்து கொள்வாரா? இந்தக் கேள்விக்கு ஆம் என்றோ இல்லை என்றோ இப்போதைக்கு எதனையும் கூற முடியாது. ஏனெனில் அரசியலில் ஒருவர் எப்படி தன்னை வெளிப்படுத்துவார் என்பது அவர் எதிர்கொள்ளப் போகும் சவால்களும், அந்தச் சவால்களை அவர் எவ்வாறு வெற்றிகொள்கின்றார் என்பதிலும் தங்கியிருக்கின்றது. அதனை ஒரு புறமாக வைத்துவிடுவோம்.

இலங்கை அடுத்ததாக நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுன – சிறிலங்கா சுதந்திரக் கட்சி கூட்டு மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை எடுக்க முயற்சிக்கும். கோட்டபாய அவ்வாறானதொரு ஆணையை சிங்கள மக்களிடம் நிச்சயம் கேட்பார். தன்னை தலைவராக ஏற்றுக் கொண்டது போன்று, தனக்கு மூன்றில் இரண்டு பெரும்பாண்மையையும் தாருங்கள் என்று அவர் கேட்பார். நாட்டில் சில மாற்றங்களை ஏற்படுத்த விரும்புகின்றேன். நீங்கள் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை தந்தால்தான் என்னால் அதனைச் செய்ய முடியும். எவ்வாறு சிறுபாண்மை மக்களின் ஆதரவின்றி கோட்டபாய வெற்றிபெற்றாரோ, அவ்வாறானதொரு நிலைமையை நாடாளுமன்ற தேர்தலிலும் ஏற்படுத்த வேண்டும் என்று சிங்களவர்கள் பெரும்பாண்மையாக எண்ணினால் அவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை பெறுவதற்கு சாத்தியமுண்டு. எனவே ராஜபக்சேக்களின் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை பெறுவதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றன.

தென்னிலங்கையில் இவ்வாறானதொரு அரசியல் நிலைமை இருக்கின்ற போது, தமிழர் தேசத்தின் அரசியல் நிலைமை எவ்வாறு இருக்கின்றது? ஆரோக்கியமாக இருக்கின்றதா? கடந்த ஐந்து வருடங்களாக ரணில்-மைத்திரி கூட்டரசாங்கத்துடன், முக்கியமாக ரணிலுடன் தேனிலவில் இருந்த கூட்டமைப்பு இப்போதுதான் நித்திரையால் எழுந்தவர்கள் போல், மீண்டும் அரசியல் பலம் – ஒற்றுமை – 22 ஆசனங்கள் என்று கதைகளைச் சொல்லிவருகின்றனர். கோட்டபாயவை காட்டி, மீண்டும் தங்களின் கதிரைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான காய்களை நகர்த்திவருகின்றனர். கடந்த ஐந்து வருடங்களாக தாங்கள் கூறிவந்த விடயங்கள் எதிலுமே வெற்றிபெறாத தமிழரசுக் கட்சி தலைமையிலான கூட்டமைப்பு, மீண்டும் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்குவது சரியான ஒன்றா? அதற்கான தகுதி அவர்களுக்கிருக்கின்றதா? அந்த ஆணையை அவர்களுக்கு கொடுக்கலாமா? இந்தக் கேள்விகளுக்கான பதிலை தேட வேண்டிய பொறுப்பு வடக்கு கிழக்கில் வாழும் ஒவ்வொரு தமிழ் மகனுக்கும், மகளுக்கும் உண்டு. இந்த இடத்தில் விக்னேஸ்வரன் தலைமையிலான அரசியல் பாதையொன்று தொடர்பில் சிந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகின்றது. நான் இவ்வாறு கூறுகின்ற போது, ஒரு கேள்வி எழலாம் – மற்றவர்களை விடவும் விக்னேஸ்வரன் எந்த வகையில் முக்கியமானவர்? மற்றவர்களால் முடியாத விடயங்களை விக்னேஸ்வரன் எவ்வாறு வெற்றிகொள்ளப் போகின்றார்?

இந்தக் கேள்விகள் நியாயமான கேள்விகள்தான். நிச்சயம் கேட்கப்பட வேண்டிய கேள்விகளும்தான். விக்கினேஸ்வரன் தேர்தல் அரசியலுக்கு புதியவர் என்றாலும் கூட, தனது கொள்கைப் பற்றாலும், அரசியல் உறுதிப்பாட்டாலும் மிகக் குறுகிய காலத்தில் தமிழ்த் தேசிய அரசியலில் தனக்கென்று ஒரு இடத்தை எடுத்துக் கொண்டவர். விக்கினேஸ்வரன் இதுவரை தமிழர் அரசியல் சார்ந்து முடிவெடுக்கும் எந்தவொரு பதவிநிலையிலும் இருக்கவில்லை. அனைத்து முடிவுகளையும் சம்பந்தன் – சுமந்திரனே மேற்கொண்டனர். விக்னேஸ்வரன் முன்வைத்த எந்தவொரு ஆலோசனைகளையும் சம்பந்தன் தரப்பு பொருட்படுத்தவுமில்லை. இவ்வாறான சூழலில்தான் விக்னேஸ்வரன், தன்னிடம் இருந்த பதவியை பயன்படுத்தி சில விடயங்களை பேச முற்பட்டார். வடக்கு மாகாண சபைக்குள் இனப்படுகொலை தீர்மானத்தை கொண்டு வந்தார். போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கான சுயாதீன விசாரணை தொடர்பில் பேசினார். அரசியல் தீர்வு தொடர்பில் உறுதியாகவும் ஆணித்தரமாகவும் பேசினார்.

இது சம்பந்தன் – சுமந்திரன் தரப்பிற்கு பெரும் நெருக்கடியாக மாறியது. கூட்டமைப்போடு மட்டுமே பேசிக் கொண்டிருந்த ராஜதந்திர சமூகத்தினர் விக்னேஸ்வரனையும் செவிமடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனை சம்பந்தனால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் சம்பந்தன் தனக்கு நிகராக பிறிதொரு குரல் கூட்டமைப்புக்குள் இருப்பதை விரும்பவில்லை. வடக்கு மாகாண சபையில் இருந்த சுமந்திரனின் தொண்டர்களின் ஊடாக விக்னேஸ்வரனுக்கு தொடர்ச்சியாக நெருக்கடிகளை கொடுத்தனர். ஆனால் விக்னேஸ்வரனின் அரசியல் உறுதிப்பாட்டை குலைக்க முடியவில்லை. இறுதியில் அவரை வடக்கு மாகாண சபையிலிருந்து வெறியேற்றுவதற்கான சூழ்ச்சியிலும் ஈடுபட்டனர்.

இவ்வாறனதொரு பின்னணியில்தான் விக்னேஸ்வரன் தனிக் கட்சி ஒன்றை அறிவித்தார். அதிலும் அவர் ஒரு நேர்மையைக் கடைப்பிடித்தார். அவர் கூட்டமைப்பின் முதலமைச்சராக இருக்கின்ற வரையில், தனக்கான கட்சியை அறிவிக்கவில்லை. தனது பதவிக் காலம் முடிந்த பின்னர்தான் தனது கட்சியை பகிரங்கப்படுத்தினார். தான் எந்தக் கொள்கைகளுக்காக குரல் கொடுத்து வந்தாரோ, அந்தக் கொள்கைகளை பாதுகாத்து புதிய தலைமுறையிடம் ஒப்படைக்க முற்பட்டார். அவர் நம்பிய கூட்டமைப்பு, அதன் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டிருக்கின்ற நிலையில், அதனை பாதுகாக்க வேண்டிய பெறுப்பை தன் தோள் மீது போட்டுக் கொண்டார்.

இன்றிருக்கும் அரசியல் தலைவர்களில் தற்போதுள்ள ஆட்சியாளர்களை நிமிர்ந்து எதிர்கொள்ளக் கூடிய ஒரேயொரு தலைவராக விக்னேஸ்வரன் ஒருவரே இருக்கின்றார். ஏன் அப்படியென்று நீங்கள் கேட்கலாம். இன்றிருக்கும் அரசியல் தலைவர்கள் அனைவருமே கடந்த காலத்தில் ஏதோவொரு வகையில் தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு கடன்பட்டவர்கள்தான். பல்வேறு காலகட்டங்களில் சிங்கள தலைவர்களுடன் கூடிக் குலவியவர்கள்தான். உண்மையில் இன்று கூட்டமைப்பில் இருக்கும் கட்சிகளும் சரி, கூட்டமைப்பிற்கு வெளியில் இருக்கும் கட்சிகளும் சரி, தென்னிலங்கையின் முக்கியமாக கோட்டபாய மற்றும் மகிந்தவிற்கு முன்னால் நிமிர்ந்து அரசியல் தீர்வு தொடர்பில் பேசும் வல்லமையுடன் இல்லை. ஏனெனில் இவர்கள் எவருமே அந்த அரசியல் தீர்வை கோரும் தகுதியுடைவர்கள் அல்லர் என்பது மகிந்தவிற்கும் கோட்டாவிற்கும் தெரியும். எனவே இவர்கள் பேசுவதை அவர்கள் பெரிதாக எடுக்கப் போவதுமில்லை. 

இவ்வாறானதொரு பின்னணியில்தான் விக்னேஸ்வரன் தலைமையிலான ஒரு அரசியல் தமிழ் மக்களுக்கு தேவைப்படுகின்றது. எவ்வாறு சிங்கள மக்கள் தங்களுக்கு உறுதியாகவும் துணிவாகவும் பேசக் கூடிய, செயலாற்றக் கூடிய ஒருவர் தங்களுக்கு தேவையென்று எண்ணினார்களோ, அவ்வாறனதொரு சிந்தனை தமிழ் மக்களுக்கும் தேவை. அவ்வாறு சிந்தித்தால், தமிழ் மக்களுக்கு முன்னால் விக்னேஸ்வரன் ஒருவரே ஒரேயொரு தெரிவாக இருக்கின்றார். அவரது உச்ச நீதிமன்ற நீதியரசர் என்னும் தகுதிநிலை தமிழர் அரசியலுக்கு பலம்சேர்க்கக் கூடிய ஒன்று. அவ்வாறான ஒருவர் தமிழ் மக்களின் அரசியலுக்கு தலைமை தாங்கிச் செல்கின்ற போது, நிச்சயம் அது கூடுதல் கவனத்தோடுதான் பார்க்கப்படும். ஆனால் இதுவரை அந்த வாய்ப்பு அவருக்கு இருக்கவில்லை. ஒருவருக்கான வாய்ப்பை கொடுக்காமல் நாமாகவே முடிவுகளை எடுக்க முடியாதல்லவா! முதலில் விக்னேஸ்வரனிடம் ஒரு முறை தலைமையை கொடுத்துப் பார்க்க வேண்டும் அதன் பின்னர்தான், அவர் தொடர்பில் நாம் ஒரு முடிவுக்கு வர முடியும். ஆனால் ஒரு விடயம் முற்றிலும் உண்மை. இன்றைய சூழலில் தமிழ் மக்கள் சார்ந்து உறுதியாக குரல் கொடுக்கவல்ல ஒரு தலைமை நிச்சயம் தேவை. தென்னிலங்கையில் கோட்டபாய போன்ற ஒருவர் ஜனாதிபதி கதிரையில் இருக்கின்ற போது, அவரை உறுதியாகவும் துணிவாகவும் எதிர்கொள்ளக் கூடிய தலைமையொன்று தமிழர் பக்கத்தில் நிச்சயம் இருக்க வேண்டும். அதனை கூட்டமைப்பால் நிச்சயம் செய்ய முடியாது. ஆனால் விக்னேஸ்வரனால் முடியும். ஏனெனில் விக்னேஸ்வரன் தனிப்பட்ட ரீதியில் தென்னிலங்கைக்கு கடன்பட்டிருக்கும் ஒருவரல்ல. ஒருவர் அதிகார பீடங்களை நிமிர்ந்து எதிர்கொள்ள வேண்டுமாயின், அதற்குரிய தகுதியுள்ளவராக அவர் இருக்க வேண்டும். இன்றைய நிலையில், அப்படியான தகுதியுள்ள ஒருவராக விக்னேஸ்வரன் மட்டுமே இருக்கின்றார். அவர் தீர்வை கொண்டு வருவாரா என்று கேள்வி பொருத்தமற்ற ஒன்று. ஏனெனில் தீர்வை அடைவதற்கு முதலில் தீர்வு தேவை என்று கூறக் கூடிய நிலையில் தமிழ் மக்கள் இருக்க வேண்டும். அவ்வாறு தமிழ் மக்கள் இருக்க வேண்டுமாயின், அவ்வாறானதொரு விழிப்புணர்வை வழங்கிக்கொண்டிருப்பதற்கான தலைமை இருக்க வேண்டும். தமிழரசு கட்சி தலைமையிலான கூட்டமைப்பு, அதற்கான தகுதியுள்ள அமைப்பு அல்ல என்பதை ஏலவே நிரூபித்துவிட்டது. இதன் பின்னர் கூட்டமைப்பு மட்டும் போதுமானது என்று எவ்வாறு சிந்திக்க முடியும்? 

-கரிகாலன்

( பொறுப்பு திறத்தல்: இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது.
-ஆசிரியர்பீடம் )