சற்று முன்
Home / தேசத்தின்குரல் / உள்வீட்டு அரசியல் / கோட்டாவின் அரசியல் விஜயத்தைப் பார்த்து தமிழ் மக்கள் பயந்தது நியாயமானதா?

கோட்டாவின் அரசியல் விஜயத்தைப் பார்த்து தமிழ் மக்கள் பயந்தது நியாயமானதா?

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றதுமே தமிழ் மக்கள் அச்சம் கொள்ளத் தொடங்கி விட்டனர். அவர்கள் எதற்காக அஞ்சினார்களோ – பீதியாகினரோ அந்தச் செயல்கள் எல்லாம் மெல்ல மெல்ல அரங்கேற ஆரம்பித்து விட்டன.

நிறைவேற்று அதிகாரம் எங்குவரை பாயும் என்பது நமக்குத் தெரிந்ததுதான். இப்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மூலமாகவும் அது வெளிப்பட்டுள்ளது. இது கடந்த ஜனாதிபதியின் காலத்திலேயே தொடங்கியதுதான் என்றபோதிலும், இப்போதுதான் அது சட்டமாகப் பாய்ந்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் கு.குருபரன் மீது அடக்குமுறை கடந்த ஆட்சிக் காலத்திலேயே கட்டவிழ்த்து விடப்பட்டு விட்டது. இதற்குக் காரணம் அவரின் சட்ட அறிவும் – ஆற்றலும்தான். கடந்த ஆட்சிக் காலத்தில் சுயாதீனமான நீதித்துறை வலுப்பெற்றது. இதனால், இராணுவத்திற்கு எதிரான வழக்குகள் முக்கியத்துவம் பெற்றன. இதில் ஒன்றுதான், நாவற்குழி இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கும். இந்த வழக்கில் 3 பேர் தொடர்பான வழக்கை குருபரனே வாதிட்டு வருகிறார். இந்த வழக்கு மிக முக்கியமான – இறுக்கமான நிலையை எட்டியிருந்தது. இதைச் சமாளிக்க முடியாத அரசாங்கம் குருபரன் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டது.

திருநெல்வேலியில் அமைந்துள்ள அவரின் “அடையாளம்” நிறுவனத்துக்குள் கடந்த ஆடசிக்காலத்தில் சி.ஐ.டியினரை அனுப்பி விசாரணைகளையும் – தொல்லைகளையும் கொடுத்தனர். மறைமுகமாகக் கொடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கையை குருபரன் கண்டுகொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக தொல்லைகள் கொடுகப்பட்டு வந்தன. இதனால், அந்த நிறுவனத்தை இழுத்து மூடும் நிலைக்கு வந்திருந்தார். புதிய ஜனாதிபதியின் பதவியேற்புடன் அந்த நிறுவனத்தை அவர் காலவரையறையின்றி மூடியே விட்டார்.

இந்நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் மூலம் அவருக்குக் குடைச்சல்களைக் கொடுத்து நாவற்குழி இளைஞர்கள் வழக்கில் இருந்து விலக நிர்ப்பந்திக்கப்பட்டது. அது குறித்தும் குருபரன் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் போதானசிரியர்களாக இருப்பவர்கள் நீதிமன்றத்தில் வழக்காட முடியாது என்ற கட்டுப்பாட்டை ஏற்படுத்த முயன்றனர். ஆனால், இந்த விடயம் வெளியே கசிந்து யாழ். பல்கலைக்கழகத்துக்குள்ளேயும் வெளியேயும் கடும் எதிர்ப்புகள் கிளம்ப அந்த முயற்சியும் கைவிடப்பட்டது.

இப்போது, துணைவேந்தர் ஒருவர் இல்லாத சூழ்நிலையில் – எதிர்ப்புகள் கிளம்பாத வகையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மூலமாக பல்கலைக்கழக போதானாசிரியர்கள் நீதிமன்றில் வழக்காட முடியாது என்ற விதியை உருவாக்கி அமுல்படுத்தியுள்ளனர். இது இராணுவத்தைக் காப்பாற்ற நிறைவேற்று அதிகாரம் எடுத்துள்ள பாய்ச்சல்தான். பார்ப்போம் தமிழருக்கான அடுத்த கட்ட நீதி எப்படி அமையப்போகிறது என்று…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

15 பேருக்கு பரிசோதனை: தொற்று இல்லையென அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் 15 பேரின் மாதிரிகள் ஆய்வுகூட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் எவருக்கும் கோரோனா ...