ஊடக அரசியல் பசிக்குத் தீனியாக்கப்படும் சம்பந்தன்!

Election risult 4
Election risult 4

இலங்கையில் இப்போது அரசியல் கட்சிகளின் பசியும் ஊடகங்களின் பசியும் பெரிய வினைகளை உருவாக்குகின்றன. தமிழ் மக்கள் பெரும் ஒடுக்குமுறைகளையும் பெரும் பின்னடைவுகளையும் சந்தித்து வருகின்ற காலத்தில் தனிப்பட்ட நலன்கள் கருதிய இப் பசிகள் ‘பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த’ கதையாய் ஈழத் தமிழ் இனத்தை வேட்டை ஆடுகின்றது. அறிவாலும் போராட வேண்டிய ஒரு இனமாக இருப்பதனால் இது குறித்து சிந்திக்கவும் உரையாடவும் இடித்துரைக்கவும் தலைப்பட்டுள்ளோம்.

நேற்றைய தினம் இலங்கை தமிழரசுக் கட்சியின் எழுபதாவது ஆண்டு நிறைவு விழா யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனது பேச்சானது, ஒரு சில ஊடகங்களால் ‘வெட்டிக் கொத்தி’ தமது ஊடக அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்துவதை அவதானிக்க முடிகின்றது. அத்துடன் சிலர் அதனை தமது கட்சி நோக்கங்களுக்காகவும் திரிவுபடுத்தி பயன்படுத்துவதுகூட அபத்தத்தின் பாற்பட்டதே.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில செயற்பாடுகளின்மீதும் இரா. சம்பந்தனது சில கருத்துக்களில் கூட விமர்சனங்கள் உள்ளன. தமிழ்க்குரல் கூட அதனை சுட்டிக்காட்டப் பின்நிற்கவில்லை. ஆனால் ஒன்றை வேறொன்றாக திரிப்பது மிகவும் தவறான செயற்பாடாகும். தகவல் தொடர்பாடல் மிகவும் உச்சம் கண்டிருக்கக்கூடிய காலகட்டத்தில்கூட இத்தகைய குறுக்கு வழிகளை பயன்படுத்த ஊடகங்கள் முனைவது மிகவும் பின்னுதாரணமானது.

குறித்த உரையில் இரா. சம்பந்தன், பல்வேறு விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்ட பின்னரான சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உரையாக அதனை கருத்தில் கொள்ளவே வாய்ப்புக்கள் உள்ளன. இலங்கை ஜனாதிபதி அண்மையில் கருத்து கூறிய போது அதிகாரப் பகிர்வு சாத்தியமற்றது என்றும் அதனை பெரும்பான்மையின மக்கள் எதிர்ப்பதாகவும் கூறினார்.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக மாத்திரமின்றி, உலக நோக்கு நிலையில் இருந்து தமிழர்களின் பிரச்சினைகளுக்கு உலகம் முன்வைக்க முயன்ற தீர்வுகளை வலியுறுத்தும் விதமாகவுமே அப் பேச்சு அமைந்தது. இலங்கை அரசைப் பொறுத்தவரையிலும் இந்தியாவைப் பொறுத்தவரையிலும் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டது நல்லதாக இருக்கலாம். ஆனால் தமிழர்களின் பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை என்பது தான் அவர் வலியுறுத்தும் விடயம்.

அத்துடன் விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு அரசியல் தீர்வை நடைமுறைப்படுத்த போகிறோம் என்று இந்தியாவுக்கு அன்றைக்கு மகிந்த ரதஜபக்ச வாக்குறுதி அளித்துவிட்டே போரை நடாத்தினார். இன்று போர் முடிக்கப்பட்டு பத்து வருடங்களைக் கடந்தும் தீர்வு முயற்சிகள் ஏதும் இடம்பெறவில்லை. அத்துடன் அண்மையில் இலங்கை வந்து புதிய ஜனாதிபதியை சந்தித்த இந்திய வெளியுறவுச் செயலாளர் கூறிய வார்த்தைகளையும் சம்பந்தன் நினைவுபடுத்தியுள்ளார்.

தமிழர்களுக்கு சமத்துவமான தீர்வை வழங்க வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தியதையும் இந்தியா சென்ற கோட்டாபய ராஜபக்சவுக்கு இந்தியப் பிரதமர் மோடி நேரில் வலியுறுத்திய விடயங்களையும் நினைவுபடுத்தியே அவ்வாறு சம்பந்தன் பேசியுள்ளார். அது மாத்திரமல்ல, எவரையும் தாம் பகைக்கவில்லை என்றும் ஆனாலும் தமிழ் மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் ஐ.நாவின் கோட்பாட்டின்படி உள்ளக சுயநிர்ணய உரிமை தமிழர்களுக்கு உண்டு என்றும் அதனை வழங்க மறுத்தால் வெளியக சுயநிர்ணய உரிமையை கோரும் உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு என்றும் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளற்ற இன்றைய சூழ்நிலையில் சர்வதேச நாடுகளுக்கு இலங்கை அரசு அன்று அளித்த வாக்குறுதிகளையாவது இன்று நிறைவேற்ற வேண்டும். அதனை வலியுறுத்துவதே சம்பந்தனது பேச்சின் சாரம். இதனை திசை திருப்புகின்ற செயற்பாடுகளில் சில இணையங்கள் மாத்திரமல்ல, சர்வதேச புகழ்பெற்ற பாரம்பரிய ஊடங்கள் கூட ஈடுபட்டிருப்பது ஈழ மக்களையும் அவர்களின் போராட்டத்தையும்தான் பாதிக்கும்.

உண்மையில் ‘முன்பின்னாக வெட்டி’ ஊடக பரபரப்பிற்காக உருவாக்கப்படும் இந்தச் செய்திகள், விடுதலைப் புலிகளுக்கும் அவர்களின் கனவுகளுக்கும் அவர்கள் சார்ந்த மக்களுக்கும் எதிரானதாகவே அமையும் என்பதை நினைவிற் கொள்ளுங்கள். 2009இற்குப் பின்னரான இந்த கால கட்டத்தில் தமிழ் சூழல் இத்தகைய செயற்பாடுகளால்தான் துண்டுது ண்டுகளாக சிதைக்கப்பட்டு வருகின்றன என்பதனை மறவாதீர்கள்.

விமர்சனங்களுக்கு அப்பால் தமிழ் சூழலில் ஒரு இனமாக பேசுகின்ற ஆளுமையை கொண்டிருப்பவர் இரா. சம்பந்தன் மாத்திரமே. அவரை விடுத்தால் ஏனைய தலைவர்கள் பலரும் செய்தி சொல்லும் தலைவர்களாகவும் தமது பதவிகளை தக்க வைக்கவும் தம்மை அடுத்த இடங்களுக்கு நகர்த்தும் பதவிநிலை அரசியல்வாதிகளாகவுமே உள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளேயே இவ்வாறு கட்சி நோக்கம் கருதிய திரிவுபடுத்தல்களும் திசை திருப்பல்களும் இடம்பெறுவதாகவே சொல்லப்படுகின்றது.

எப்படி இருப்பினும் ஈழப் போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே தனிப்பட்ட நலன்கள் சார்ந்த பிளவுகளால்தான் போராட்டம் பெரும் பின்னடைவை சந்தித்தது. ஆனாலும் அதனைக் கடந்து எமக்கொரு அடையாளம் இருந்தது. தற்போதைய சூழலிலும் இவ்வாறு இனத்தை சிதைக்கும் வேலைகள் பல நோக்குநிலைகளில் இருந்து பலரால் செய்யப்படுகின்றன. அதனை ஊடகங்களும் செய்வது அநாகரிகமானது. ஊடங்கள் கொண்டிருக்க வேண்டிய கருத்து சுதந்திர மற்றும் ஜனநாயக விழுமியப் பண்புகளுக்கு எதிரான செயல்களாகும்.

எனவே, கட்சிகள், தலைவர்கள்மீதான விமர்சனங்களை மக்களின் குரலின் அடிப்படையில் முன்வைப்போம். முக்கியத்துவமாக தருணங்களின் ஒரு இனத்தின் அரசியல் செயற்பாடுகளை பலவீனப்படுத்தாத வகையில் ஒரு இனத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தாத வகையில் தமது செய்தி உருவாக்காகங்களையும் அறிக்கையிடல்களையும் செய்வோம். குறிப்பாக அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து ஊடகங்கள் தம்மை விலக்கிக்கொண்டால், கட்சி மற்றும் ஊடக  வியாபாரப் பசிகளை தவிர்த்து  ஊடக விழுமியங்களின் அடிப்படையில் இயங்க முடியும்.

 – தமிழ்க்குரல்  ஆசிரியர் பீடம்

 (19.12.2019)