தமிழரசு கட்சியின் உண்மையான பலமும் தட்டேந்தும் பங்காளிக் கட்சிகளும்!

Chinema 2
Chinema 2

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரால் எதற்காக உருவாக்கப்பட்டது என்பது பற்றி ஏராளமான எழுத்துக்கள் உண்டு. எனவே அது பற்றி தொடர்ந்தும் பேசுவதில் பயனில்லை. 2001இலிருந்து 2009 வரையான காலப்பகுதி வரையில் கூட்டமைப்புக்கென்றுஇ கூட்டமைப்புக்குள் ஒரு தலைமை இருந்திருக்கவில்லை. இந்தக் காலத்தில் கூட்டமைப்பின் தலைவராக  தலைவர் பிரபாகரனே இருந்தார். பிரபாகரன் எதை நினைக்கின்றாரோ அதை வழிமொழியும் ஒரு அரசியல் கட்சியாகவே கூட்டமைப்பு இருந்தது. இதனை சம்பந்தன் மறுக்கலாம் ஆனால் உண்மை இதுதான். இதற்கு ஆதாரமாக ஒரு விடத்தைக் குறிப்பிட முடியும். ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) 2006இல் வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்தது.

அதனடிப்படையில் வடக்கு கிழக்கு இணைக்கப்பட்ட முறைமை தவறானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த பின்புலத்தில் 2008இல் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றது. இந்தத் தேர்தலை கூட்டமைப்பு புறக்கணித்தது. ஆனால் அதே கூட்டமைப்பு 2012இல் இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டது. 2008இல் இருந்த மாகாண சபைதான் 2012இலும் இருந்தது. இடையில் என்ன நடந்தது? விடயம் என்னவென்றால்இ 2008இல் விடயங்களை விடுதலைப் புலிகளே தீர்மானித்தனர். தேர்தலில் போட்டியிடுவதற்கு விடுதலைப்புலிகள் பச்சைக்கொடி காட்டவில்லை. ஏனெனில் அப்போது கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனல்ல. ஆனால் 2012இல் தீர்மானிக்கக் கூடிய இடத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பு இல்லை. 2009இற்கு முன்னர் கூட்டமைப்பு எவ்வாறு இயங்கியது என்பதற்கு இதைவிடவும் ஆதாரம் தேவையில்லை. இதற்கு சம்பந்தனால் பதிலளிக்க முடியுமா? மாவையினால் பதிலளிக்க முடியுமா?

2009இற்கு பின்னர்தான் கூட்டமைப்பு என்பது சம்பந்தனின் தலைமையின் கீழ் வந்தது. சம்பந்தன் தலைமைப் பொறுப்பை எடுத்ததும் விடுதலைப்புலிகளால் அறிமுக்கப்படுத்தப்பட்டவர்களுக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்புக்களை மறுத்தமைதான் அவர் செய்த முதல் வேலை, சம்பந்தன் செய்த அடுத்த வேலை, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அனைத்தும் தமிழரசு கட்சியின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதற்கான சூழலை உருவாக்கியமை. 2009இற்கு முன்னர் கூட்டமைப்பு எவ்வாறு விடுதலைப் புலிகளின் முழுமையான ஆளுகைக்குள் இருந்ததோ, அதே போன்று 2009இற்கு பின்னரான சூழலில் பங்காளிக் கட்சிகளை தமிழரசு கட்சியின் ஆளுகைக்குள் இருக்குமாறு சம்பந்தன் உத்தரவிட்டார். இது தொடர்பில் பங்காளிக் கட்சிகளான தமிழீழ விடுதலைக் கழகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியவை முணுமுணுத்துக் கொண்டாலும் தமிழரசு கட்சியின் ஆதிக்கத்தை உடைக்கமுடியவில்லை.

இவ்வாறான சூழலில்தான் 2011இல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளும் கூட்டமைப்புடன் இணைத்துக்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் நான்கு கட்சிகளும் விரும்பியோ விருப்பாமலோ தமிழரசு கட்சியின் பின்னால் இழுபட்டுச் செல்லும் கட்சிகளாகவே இருந்தன. இது தொடர்பில் கூட்டமைப்புக்குள் ஓரளவு சண்டையிட்ட ஒருவரென்றால் அது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் மட்டும்தான்.

2015இல் சுரேஸ் கூட்டமைப்பிலிருந்து முற்றிலுமாக வெளியேறினார். இன்று கூட்டமைப்பு என்னும் பெயரில் தமிழரசு கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகியவையே இருக்கின்றன. உண்மையில் கூட்டமைப்பில் மூன்று கட்சிகள் என்று கூறிக்கொண்டாலும் கூட,  கூட்டமைப்பு என்னும் பெயரில் இலங்கை தமிழரசு கட்சிதான் இயங்கிவருகின்றது. பெயரளவில்தான் கூட்டமைப்பு இருக்கின்றது. ஏன் இந்த நிலைமையை பங்காளிக் கட்சிகளால் சரிசெய்ய முடியவில்லை. கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்ய வேண்டுமென்னும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போது, அதனை தமிழரசு கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் பங்காளிக் கட்சிகளால் தமிழரசு கட்சியை கட்டுப்படுத்தி அதனை சாத்தியப்படுத்த முடியவில்லை.

இன்று தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய அனைத்துமே நீண்ட காலமாக அரசியலில் இருக்கும் கட்சிகள். போராட்ட பின்புலத்திலிருந்து ஜனநாயக அரசியலுக்குள் வந்தவை. பல்லாயிரக்கணக்கான அங்கத்தவர்களை கொண்டிருந்தவர்கள்.

ஒரு குறிப்பிட்ட காலத்தில் அனைவருமே அரசாங்கங்களுடன் இணைந்திருந்தவர்கள். இதன் மூலமாக பெருமளவு வளங்களையும் வைத்திருந்தவர்கள். இவர்களோடு ஒப்பிட்டால் தமிழரசு கட்சிக்கென்று எந்தவொரு வலுவான கட்டமைப்புக்களும் இருந்திருக்கவில்லை. முக்கியமாக ஒரு குறிப்பிட்ட காலம் வரை தமிழரசு கட்சி அரசியல் அரங்கிலேயே இருக்கவில்லை. முற்றிலுமாக செயலிழந்திருந்திருந்தது. ஆனாலும் 2009இற்கு பின்னர் கிடைத்த வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொண்டு, கூட்டமைப்பிலுள்ள அனைத்து கட்சிகளையும் தனது காலடியில் விழவைத்திருக்கின்றது.

ஏன் ஏனைய கட்சிகளால் – தங்களை வளர்த்துக்கொள்ள முடியவில்லை? தங்களது சொந்நதக் காலில் நிற்க முடியவில்லை? விடுதலைப் போராட்ட பின்புலத்திலிருந்து ஜனநாயக அரசியலுக்குள் இறங்கிய அனைத்து கட்சிகளுமே மிகவும் பலவீனமான கட்சிகளாகவே இருக்கின்றன. ஒன்றில் சம்பந்தனது காலடியில் வீழந்துகிடக்கின்றன இல்லாவிட்டால் காலில் விழுவதற்காக புதியவர்களை தேடிக்கொண்டிருக்கின்றன!

முக்கியமாக கூட்டமைப்பிற்குள் அங்கத்துவம் வகித்து, பின்னர் வெளியேறிய கடசிகளான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளாலும் சரி, இப்போதும் தமிழரசு கட்சியின் காலடியில் வீழ்ந்து கிடக்கும் கட்சிகளான, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கமும் சரி தங்களுக்கென்று வடக்கு கிழக்கில் வலுவானதொரு அரசியல் அடித்தளத்தை போட முடியாதவர்களாகவே இருக்கின்றனர். ஒவ்வொரு தேர்தல்களின் போதும் சித்தாத்தனும் அடைக்கலநாதனும்  மாவை சேனாதியின் வீட்டு வாசலிலும் சம்பந்தனின் திருகோணமலை வீட்டு வாசலிலும், ஆசனங்களுக்காக யாசகம் சென்கின்றனர். தமிழரசு கட்சியும் சரி தட்டில் போடுவதை எடுத்துக் கொண்டு செல்லுங்கள் என்னும் மனோநிலையிலேயே இவர்களை நடத்துகின்றது. கடந்த ஐந்து வருடகாலமாக அரசியலில் கோலோச்சும் சுமந்திரனிடம் போய் கெஞ்ச வேண்டிய நிலையில் இருப்பதானதுஇ இவர்களது கட்சியின் வரலாற்றிற்கே இழுக்கு.

இவர்களது கட்சிகளின் ஆகக் கூடிய இலக்கு எப்படியாவது அக்கட்சியின் தலைவர்கள் நாடாளுமன்றம் சென்றுவிட வேண்டும். இதற்காக புதிய குதிரையோட்டத்தை ஆரம்பிப்பதைவிடவும் ஏற்கனவே ஓடுகின்ற குதிரையொன்றில் ஏறிக்கொண்டு, அதன்பாட்டில் போய் ஏதோ ஒரு ஆசனத்தையாவது பெற்றுக்கொள்வோம். பங்காளிக் கட்சிகளின் இந்த மனோநிலையை நன்றாக விளங்கிக் கொண்டிருப்பதன் விளைவுதான் தமிழரசு கட்சியினரும் இவர்களை மிகவும் இழக்காரமாக பார்க்கின்றனர். இழக்காரமாக நடத்துகின்றனர். கடந்த உள்ளுராட்சித் தேர்தலின் போது தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு சில இடங்களில் எந்தவொரு இடங்களும் வழங்கவில்லை. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை பேச்சுவார்த்தைக்கு வருமாறு கூறிவிட்டு, இவர்கள் அங்கு செல்லும் முன்னே வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டனர். தமிழீழ மக்கள் விடுதலை இயக்கத்தினர் அவமானத்துடன் திரும்பிச் சென்றனர். இத்தனைக்கும் பிறகும் தமிழரசு கட்சியின் ஆசீர்வாதத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கடந்த பத்து வருடங்களாக நாடாளுமன்றத்தில் ஆசனங்களை வைத்திருந்தும். மாகாண சபையில் உறுப்பினர்களை வைத்திருந்தும் கூட, தங்களது கட்சியை வளர்க்கவில்லை. தங்களுக்கான கட்சிக் கட்டமைப்புக்களை ஏற்படுத்தவில்லை. பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை பொறுத்தவரையில் எப்படியாவது தாங்கள் நாடாளுமன்றம் சென்றுவிட வேண்டும். இதனை சம்பந்தன் – சுமந்திரன் தரப்பு நன்றாக புரிந்து வைத்திருக்கின்றது. இவர்கள் ஒரு போதும் தங்களை விட்டுவிட்டுச் செல்லப் போவதில்லை என்பதை தெரிந்து கொண்டு, தேர்தல் வரையில் இவர்களுக்கு மதிப்புக் கொடுப்பது போல் காண்பித்துவிட்டு, தேர்தல் நெருங்கியதும் இவ்வளவுதான் உங்களுக்கு – விரும்பினால் இருங்கள் இல்லாவிட்டால் வெளியில் செல்லுங்கள் என்றவாறு இவர்களை மிரட்டுகின்றனர். தேர்தலில் தனித்து நிற்கும் ஆற்றல் இவர்களுக்கு இல்லாமையால் தமிழரசு கட்சி சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டுவிடுவர்.

இதுதான் கடந்த பத்துவருடங்களாக கூட்டமைப்பு என்னும் பெயரில் தமிழரசு கட்சி ஆடிய சடுகுடு ஆட்டம். அடுத்த ஆண்டு இடம்பெறப் போகும் பொதுத் தேர்தலின் போதும் இதுதான் நடக்கப் போகின்றது. ஆனால் இம்முறை உள்ளுக்குள் வைத்துக் கொண்டே   செல்வம் அடைக்கலநாதனையும் பசித்தார்த்தனையும் தோற்கடிப்பதற்கான வியூகமொன்றையும் சுமந்திரன் தரப்பு வகுக்கலாம் ஏனெனில் சுமந்திரனை பொறுத்தவரையில் கூட்டமைப்பை தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு ஏதோவொரு வகையில் சித்தார்த்தனும் செல்வமும் தடையாகத்தான் இருப்பார்கள் ஏனெனில் அவர்கள் அரசியலில் நீண்ட அனுபவத்தையும் வரலாற்றையும் கொண்டவர்கள். அப்படியான எவருமே இல்லாமல் போனால்தான் சுமந்திரனின் ராஜ்யத்தை இலகுவாக கட்டியெழுப்பலாம்.

இந்த உண்மை சித்தருக்கும் செல்வத்திற்கும் தெரியாமல் இல்லை. ஆனாலும் தங்களால் தனித்து பயணிக்க முடியாமையால் தமிழரசு கட்சியிடமே மீண்டும் மீண்டும், தட்டை நீட்டிக் கொண்டிருக்கின்றனர். தமிழரசு கட்சிக்கென்று எந்தவொரு பலமும் இல்லை. ஏனைய கட்சிகள் தங்களை வளர்க்கவில்லை என்பது மட்டும்தான் அவர்களது ஒரேயொரு பலம். இப்போதும் கூட, அதற்கான எந்தவொரு முயற்சியையும் இவர்கள் செய்யவில்லை. உண்மையில் இவர்கள் இந்தக் கட்சிகளை வைத்துக் கொண்டிருப்பதை விடவும், அவற்றை கலைத்துவிட்டு. ஒன்றில் தமிழரசு கட்சியோடு இணையலாம் அல்லது அரசியலை கைவிடலாம். தங்களது கட்சிகளை வளர்க்க முடியாத இவர்களால் எவ்வாறு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும்? பின்னர் எதற்காக இவர்களுக்கு ஒரு கட்சி? தாங்கள் நாடாளுமன்றம் செல்வதற்காகவா கட்சிகளை நடத்துகின்றனர்?      

-கரிகாலன்

( இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. -ஆசிரியர்பீடம் )