2020 : தமிழினத்திற்கு விடியலைத் தரும் ஆண்டா?

Theacher paarvai
Theacher paarvai

2019ஆம் ஆண்டு நிறைவுற்று புதிய ஆண்டு பிறக்கின்ற தருணத்திலும் கிளிநொச்சியில் கண்ணீரோடு ஒரு போராட்டம் நடந்தது. எங்கள் நகரங்கள் எப்போதும் கண்ணீராலும் துயரத்தாலும்தான் நனைந்து கொண்டிருக்கின்றன. எங்கள் காலங்களும் அப்பிடியேதான். போருக்கு பிந்தைய பத்தாண்டுகள் முடிவடைந்த சூழலில் எமது மக்களின் கண்ணீரைதான் வரலாறாகவும் காலமாகவும் சேமித்து வைத்திருக்கிறோம்.

உண்மையில் இப் பத்தியின் நோக்கமானது, 2019ஆம் ஆண்டை மாத்திரம் ஆராய்வதல்ல. 2009இற்கும் 2019இற்கும் இடையிலான பத்தாண்டுகளில் ஈழத் தமிழினத்தின் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் உருவாகியுள்ளன, இதற்காக மக்கள் பிரதிநிதிகள் எதனை சாதித்துள்ளார்கள்? போன்ற விசயங்களைப் பற்றி மக்களின் பார்வையில் நின்று கேள்விகளை முன்வைப்பதுதான் இவ் ஆசிரியப் பார்வையின் நோக்கமாகும்.

போர் முடிவடைந்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இந்தக் காலத்தில் போரில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து நீதியைப் பெறுவதில், அதனை பெற்று காயம்பட்ட மக்களின் வாழ்வை மீளமைப்பதில் ஒரு வீத அடைவைக்கூட எட்டவில்லை. மாறாக மக்களை பின்னோக்கியே தள்ளியுள்ளனர். அவர்களின் காயங்கள் பெருப்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கான முயற்சிகளை செய்யக்கூடிய சர்வதேச வாய்ப்புக்கள் வந்தபோது, எமது தலைமைகள்  குற்றமிழைத்தவர்களைப் பாதுகாக்கின்ற, அவற்றுக்கு வெள்ளையடிக்கின்ற வேலையை செய்ததுதான் இக் கால கட்டத்தின் இருண்ட பக்கங்கள் ஆகும். அவற்றை அரசியல் இராஜதந்திரம் என அன்று கூறி நியாயம் செய்த நிலையில், அவை எத்தகைய முட்டாள்தனமான, பின்னடைவை நோக்கிய செயல்கள் என இன்று தெளிவாக்கப்பட்டுள்ளன.  

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ந்தும் கண்ணீரும் கம்பலையுமாக போராடுகின்றனர். அவர்களின் வீடு தெருக் கரையோரங்கள்தான். பிள்ளைகள் இல்லாத வீடுகளை விடுத்து தெருக்களில் இருந்து பிள்ளைகளை கோரிக் கொண்டிருக்கிறார்கள். எமது பிரதிநிதிகளும் ஒவ்வொரு போராட்டத்திற்கும் தவறாமல் சென்று ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதுடன் கடமையை முடிக்கின்றனர்.

அப்படிப் பார்த்தால், 2009இற்குப் பின்னான காலங்களில் காயம்பட்ட மக்களின் காயங்களை ஆற்றுகின்ற, கண்ணீரை துடைக்கின்ற வேலைகளை மக்கள் தெரிவு செய்த பிரதிநிதிகள் செய்யவில்லை எனலாம். தேர்தல்களையும் பதவிகளையும் ஆசனப் பகிர்வுகளையும் மாத்திரம் இலக்காக கொண்ட அரசியல் சூழல்தான் ஈழத்தில் நிலவுகின்றது என்பதுதான் இத்தகைய போராட்டத்தை நடத்திய இனத்தின் இன்றைய நிலை.

ஒரு இனத்தின் விடுதலைக்காக பல்லாயிரம் பேரை மண்ணில் விதைத்து, லட்சம் பேரை கண்ணீரோடு அலைய வைத்திருக்கும் சூழலில் எமது அரசியல் செயற்பாடுகள், தீரமாகவும் வினைதிறனாகவும் அமைய வேண்டும் அல்லவா? வெறுமனே ஊடக நடிகர்களாக தலைவர்கள் மாறிவிட்ட சூழலில் மக்கள் இன்னும் எக் கொடுமைகளையெல்லாம் அறுவடை செய்ய வேண்டும் என்பதுதான் அதிர்ச்சியாக இருக்கின்றது.

அரசியல் தீர்வு தொடர்பான முயற்சிகள், புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படும் அதில் தமிழருக்கு தீர்வு முன்வைக்கப்படும் என்ற பேச்சுக்கள் அத்தனையும் கானல் நீராகிவிட்டது. நல்லாட்சியை நம்பிக் கெட்ட காலமாகிவிட்டது. இப்போது பார்த்தால், தமிழர்களுக்கு தீர்வென்று எதனையும் வழங்க மாட்டோம் என்ற இறுமாப்பு சூழலுக்கும் ஈழத் தமிழ் இனம் தள்ளப்பட்டுள்ளது.

அந்த சூழலில்தான் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்த கருத்தொன்று அதிமுக்கியத்துவம் பெறுகின்றது. ஐ.நா சாசனத்தின் பிரகாரம், உள்ளக சுயநிர்ணய உரிமை கோரும் உரிமை தமிழர்களுக்கு உண்டு என்றும் அது மறுக்கப்பட்டால் வெளியக சுயநிர்ணய உரிமை கோரும் உரிமை உண்டு என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலைப்பாட்டையும் நியாயத்தையும் தமிழ் தலைமைகள் தொடர்ந்தும் மறக்காது நினைவிலும் செயலிலும் கொள்ள வேண்டும் என்பதையும் அனைத்து தலைவர்களும் இதனை உணர்ந்து உரைத்து நடக்க வேண்டும் என்பதையும் மக்களின் குரலாக வலியுறுத்த விளைகிறோம். அது மாத்திரமின்றி இந்த ஆண்டு தெரிவிக்கப்பட்ட மற்றொரு முக்கிய கருத்தையும் இப் பத்தி சுட்டிக்காட்ட விரும்புகின்றது.

அண்மையில் வடக்கின் முன்னாள் முதல்வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான விக்னேஸ்வரன், இலங்கையின் பூர்வீகம் என்ன? ஈழத் தமிழ் மக்கள் விரும்பும் பன்மைத்துவ அரசியலின் அடிப்படை என்ன? வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் சுயாட்சியின் நியாயம் என்ன என்பன குறித்து தென்னிலங்கை தலைவர்களும் அறிவுஜீகளும் வியக்கும் வகையில் குறிப்பிட்ட கருத்துக்களை தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் தமிழ் புலமையாளர்களும் வரலாற்றாசிரியர்களும் ஆராய்ந்து வலியுறுத்துவது கால அவசியமாகும்.

கன்னியா வெந்நீரூற்று சுவாமிகள்மீது வெந்நீர் ஊற்றி தாக்கப்பட்டமை, முல்லைத்தீவு செம்மலை நீராவியடி ஆலய வளாகத்தில் அதன் புனிதத்துவதற்கிற்கு கேடாக தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டமை போன்ற கசப்பான நிகழ்வுகளும் இந்த ஆண்டில் இடம்பெற்றுள்ளன. பௌத்திற்கு முன்னுரிமை அளிப்பதை தமிழ் தலைவர்கள் வரவேற்ற காலத்தில்தான் இவை நடந்தன என்பதும் கவனிக்க தக்கது.

இந்த ஆண்டின் நிறைவுக் காலத்தில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இலங்கையின் புதிய அதிபராக கோட்டாபய ராஜபக்ச ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளார். அத்துடன் பிரதமராக முன்னாள் அதிபர் பதவியேற்றுள்ளார். தமிழர்கள் அடைந்த துயரங்களுக்கும் இன்றும் சுமக்கும் அவலங்களுக்கும் இவர்கள் வாய் திறந்து பொறுப்புகூறுவதும், நீதியையும் நியாயத்தையும் அர்த்தபூர்வமான செயலாக வழங்குவதும்தான் இந்த ஆண்டில் தமிழர்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் ஆகும்.

தமிழர்களின் துயரங்கள் நீங்கி, அவர்கள் நிம்மதியோடு வாழ்கின்ற வாழ்க்கை இந்த ஆண்டிலாவது துவங்க வேண்டும். நியமான அரசியல் தீர்வு கிட்டப்படுவதுடன்போர்க்கால மீறல்களுக்கு நீதியும் நியாயமும் கிடைத்து, தமிழ் மக்களின் காயங்கள் ஆற்றப்பட வேண்டும். எழுபது ஆண்டுகளாக போராடும், முப்பது ஆண்டுகளாகப் போரை சுமந்த ஈழத் தமிழ் இனத்தின் வாழ்வில் இந்த ஆண்டாவது விடியலை தர வேண்டும்.

தமிழ்குரல் ஆசிரியர் பீடம்,

01.01.2020