இலத்திரனியல் சுகாதார அட்டை அறிமுகம்

batti hos
batti hos

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று (01) முதல் இலத்திரனியல் சுகாதார அட்டை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர்.திருமதி.க.கணேசலிங்கம் அவர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ் அட்டையை பெறுவதற்கு ஒவ்வொரு நோயாளியும் தங்களது விபரங்களை தேசிய அடையாள அட்டையில் உள்ளவாறு பெயர், பிறந்த திகதி, தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கம் என்பனவற்றை வழங்கி இவ் அட்டையினை பெற்றுக்கொள்ள முடியும்.

இவ் இலத்திரனியல் சுகாதார அட்டையானது Monochrome laser தொழில் நுட்பத்துடன் PVC அட்டையில் அழிவடையாதவாறு பதிவு செய்து வழங்கப்படும்.

இவ் இலத்திரனியல் அட்டை ஒவ்வொரு நோயாளர்களுக்கும் முதல் தடவை இலவசமாக போதனா வைத்தியசாலையால் வழங்கப்படும்.

இவ் அட்டையை தொலைக்கும் பட்சத்தில் அதற்குரிய பெறுமதியை செலுத்துவதுடன் தொலைத்ததற்குரிய ஆதாரங்களை சமர்பித்து வைத்தியசாலை நிருவாக பகுதியில் பெற்றுக்கொள் முடியும்.

அத்துடன் எதிர்வரும் காலங்களில் இவ் வைத்தியசாலை முழுமையான கணனி கட்டமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு நோயாளர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், வைத்திய பரிசோதனை அறிக்கைகள் போன்ற சகல விடயங்களும் ஒவ்வொரு நோயாளர்களுக்கும் உரிய தனிபட்ட சுகாதார இலக்கத்தின் கீழ் பாதுகாப்பான முறையில் உள்ளீர்க்கப்படும்.

இந் நிகழ்வில் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், மற்றும் வைத்தியர்கள், நிர்வாக பிரிவு உத்தியோகத்தர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், ஏனைய வைத்தியசாலை பிரிவு உத்தியோகத்தர்கள் அத்துடன் வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.