கோட்டாவிடம் தீர்வைப் பெற எம்மால் முடியும்! – விக்னேஸ்வரன்

viki
viki

தமிழ் மக்களுக்கான உரிமைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து பெற்றுத் தர எம்மால் முடியும் எனத் தெரிவித்திருக்கிறார் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த செவ்வியலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதையும் தர மாட்டேன் என்கிறார்.

இந்நிலையில் தமிழ் மக்களுக்கான உரிமைகளை எப்படிப் பெற்றுக் கொடுப்பீர்கள் எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில், சாப்பிடமாட்டேன் என்று குழந்தை அடம்பிடித்தால் சரி போ என்று விட்டுவிடுவீர்களா?

எத்தி, அதட்டி குழந்தையை சாப்பிடப் பண்ண வேண்டும். ஒரு தாயால் அது முடியும். எம்முள் அன்பும் உண்மையும் கொண்டிருந்தால் நாமும் தாயைப் போன்றவர்கள்தான். எம்மால் முடியும் எனக் கூறியுள்ளார்.

மேலும், தமிழ் மக்களின் உரிமைகளையும் அவர்களின் யதார்த்த நிலைகளையும் பிரதிபலிப்பதாகப் பேசுபவர்கள் தமிழ் இனவாதிகள் என்றால் நான் ஒரு தமிழ் இனவாதிதான். ஆனால், இனவாதிக்கும் மனிதநேயவாதிக்கும் இடையில் ஒரு பாரிய வேற்றுமை உண்டு.

தன் இனம் மட்டுமே உயர்ந்தது மற்றவை தாழ்ந்தவை என்று கூறுவோரைத்தான் உலகம் இனவாதி என்று சொல்கிறது எனத் தன் மீது சிங்கள – பௌத்த பேரினவாதிகள் குத்தும் இனவாத முத்திரைக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

அத்துடன், பேராசிரியர் திஸ்ஸ விதாரண தன்னை மாட்டி விடும் நோக்கிலேயே வல்லரசுகளின் மத்தியஸ்தம் பற்றிக் கேள்வியை எழுப்பியிருந்தார் என்றும் அதனாலேயே தான் அவரின் கேள்விக்குப் பதிலளிக்காமல் மௌனம் காத்தேன் என்றும் கூறியிருக்கிறார்.

அத்துடன் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் இன்றைய நிலையை இந்தியா புரிந்து கொண்டால், நிச்சயமாக அதனைப் பரிசீலிக்காது என்றும் அந்த நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.