நாடாளுமன்ற கதிரைகளால் காப்பாற்றப்படும் கூட்டமைப்பின் ஒற்றுமை

Chinema
Chinema

மழைக்காலத்து தவளைச் சத்தம்போன்று, தேர்தல் என்றவுடன் ஒற்றுமை பற்றிய ஆரவாரங்களும் ஆரம்பித்துவிடும். திரும்பிய இடங்களிலெல்லாம் ஒரே தவளைச் சத்தம். ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபாயிவின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஒற்றுமைபற்றிய சத்தம் தொடங்கிவிட்டது. நாங்கள் எல்லோரும் ஒன்றாக நிற்கவேண்டும் – இந்தக் காலத்தில் மாற்றுத் தலைமை கூடாது என்றவாறான அரசியல் வகுப்புக்களும் தொடங்கிவிட்டன.

இது பற்றி முதலில் சுமந்திரன் பேசினார். பின்னர்சம்பந்தன் பேசினார். ஆனால் இதே நபர்கள்தான் கூட்டமைப்பிலிருந்து பலரும் வெளியேறுவதற்கு காரணமாக இருந்தவர்கள். ஓற்றுமைபற்றி பேசுவது தவறான ஒரு விடயமல்ல. அதுதமிழ் மக்களுக்கு அவசியமான ஒன்றுதான். ஆனால் ஒற்றுமைபற்றி பேசுபவர்கள் இதய சுத்தியுடன்தான் பேசுகின்றனரா?

இன்று கூட்டமைப்பிற்குள், எந்தக் கட்சிக்கு, எந்த இடத்தில், எத்தனை ஆசனங்கள் என்னும் பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றது. தங்களுக்கு சொந்தமான சொத்தை உறவினர்களுக்கிடையில் பிரித்துக் கொள்வதுபோன்று, தமிழரசு கட்சி பங்காளிக் கட்சிகளுக்கு ஆசனங்களை ஒதுக்கிக் கொண்டிருக்கின்றது. இதுவா தமிழ் மக்களுக்கான ஒற்றுமை? தமிழ்த் தேசிய அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கும் ஏனைய கட்சிகளுக்கும் இடையில் அடிப்படையிலேயே ஒரு வேறுபாடுண்டு. முக்கியமாக 2009இற்கு பின்னர் தமிழ் மக்களின் தலைமையை பொறுப்பேற்ற கூட்டமைப்பிற்கும் ஏனைய கட்சிகளுக்குமான வேறுபாடென்பது, மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வேறுபாடு போன்றது. அதாவது, கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களின் உரிமை அரசியலுக்கு தலைமை தாங்கும் ஒரு அரசியல் ஸ்தாபனம். அவ்வாறான ஒரு ஸ்தாபனம் ஆசனங்களுக்காக தங்களுக்குள் சண்டைபோட்டுக் கொள்வதா அவர்களின் ஒற்றுமை? கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது கூட்டமைப்பின் கதிரைச் சண்டை சந்திசிரித்தது.

யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியிலுள்ள மாவை சோனாதிராஜாவின் வீட்டுக்கு முன்னால், தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் சண்டைபோடும் காட்சிகள் ஊடகங்களில் பிரசுரமானது. இதுவா தமிழ் மக்களுக்கான ஒற்றுமை? மீண்டும் அதே விடயங்கள்தான் இடம்பெறப் போகின்றன. ஊடகங்கள் காட்சிகளுக்காக காத்திருக்கின்றன!


பல்லாயிரக் கணக்கானவர்களின் தியாகங்களால் உருப்பெற்ற தமிழ்த் தேசிய அரசியல் இயக்கமானது இன்று, அதன் சிதைவின் இறுதிக் கட்டத்தில் நிற்கின்றது. வெறும் பாராளுமன்ற ஆசனங்களுக்காக சண்டைபோடும் அரசியல்வாதிகளாக தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் மாறியிருக்கின்றனர். சிங்கள முஸ்லிம் கட்சிகள் இவ்வாறு ஆசனங்களுக்காக அடிபிடிப்படுவதான ஒரு செய்தியைக் கூடக் காணமுடியவில்லை. ஆனால் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடுவதாகவும் – போராடப் போவதாகவும் கூறிக்கொள்ளும் கட்சிகள்தான் கதிரைகளுக்காக அடிபடுகின்றன?

எப்படியாவது நாடாளுமன்றம் சென்றுவிடவேண்டும் என்பதைத் தவிர அரசியல் தொடர்பில் எந்தவொரு வேலைத்திட்டமும் இவர்களிடம் இல்லை. இலங்கையின் வரலாற்றில் இதற்கு முன்னர் எந்தவொரு ஜனாதிபதியும் கூறாத ஒரு விடயத்தை கோட்டபாய ராஜபக்ச கூறுகின்றார். அதாவது, பெரும்பான்மை மக்களின் ஆதரவின்றி எதனையும் தன்னால் செய்யமுடியாது – அரசியல் தீர்வு என்று கூறி மற்றைய அரசியல்வாதிகளைப்போல் நானும் ஏமாற்ற விரும்பவில்லை. எனவே பெரும்பான்மையினர் ஆதரித்தால்தான் இலங்கைத் தீவில் எதனையும் தமிழர்கள் பெறலாம் என்பதே புதிய ஆட்சியாளர்களின் உறுதியான நிலைப்பாடு. இந்த நிலையில் புதிய ஆட்சியாளர்களை எதிர்கொள்வதற்கு கூட்டமைப்பிடம் – தமிழ்த் தேசியவாதிகளிடம் என்ன வேலைத்திட்டம் இருக்கின்றது?

கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் 22 பேர் நாடாளுமன்றம் செல்வதன் மூலம் எவ்வாறு அரசியல் தீர்வைபெறலாம்? நாடாளுமன்றத்தின் மூலம் ஒரு அரசியல் தீர்வைபெற முடியுமாக இருந்தால் அதனை தந்தை செல்வநாயம் பெற்றிருப்பாரே –பின்னர் வந்த அமிர்தலிங்கத்தால் பெற்றிருக்கமுடியுமே! அதனையும் விடுவோம் கடந்த பத்துவருடங்களாக தமிழ் மக்களின் நாடாளுமன்ற பலமாக தங்களை காண்பித்துக்கொண்டிருந்த கூட்டமைப்பால் அதனைப் பெற்றிருக்கலாமே! ஏன் முடியவில்லை. இந்த நிலையில் மீண்டும் நாடாளுமன்றம் செல்வதன் ஊடாக எவ்வாறு ஜனாதிபதி கோட்டபாயவிடமிருந்து அரசியல் தீர்வைபெறமுடியும்?
உண்மையில் இன்று தமிழர் அரசியல் என்பது எங்கே செல்கின்றோம் என்னும் தெளிவில்லாமலேயே சென்று கொண்டிருக்கின்றது.

வெறுமனே நாடாளுமன்ற கதிரைகளை எப்படியாவது கைப்பற்றிவிடவேண்டும். அரசாங்கம் தருகின்ற அந்த வாகன அனுமதிப்பத்திரத்தை எப்படியாவது பெற்றுவிடவேண்டும். மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவிட்டால் முழுமையான ஓய்வூதியத்தை பெறுவிடலாம். ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஆகக் குறைந்தது மாதம் ஒன்றிற்கு 250000 ரூபாவிற்குமேல் அரசாங்க கொடுப்பனவுகள் உண்டு. ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ஆகக் குறைந்தது ஐந்து பிரத்தியேக ஊழியர்களை நியமிக்கமுடியும். ஆனால் எந்தவொரு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் இதற்காக பிரத்தியேக ஊழியர்களை நியமிப்பதில்லை. தங்களுடைய மனைவியின் பெயர் மகளின் பெயர் அல்லது உறவினரின் பெயரைக்கொடுத்து குறித்த தொகையை பெற்றுக் கொள்கின்றனர். இரா.சம்பந்தன் சுமார் 43 வருடமாக முழுநேர அரசியலில் இருக்கின்றார். அவரது தொழிலே அரசியல்தான். இந்தக் காலத்தில் ஒரு சில தடைவைகள் தோற்றுப் போயிருக்கின்றார். அதனை விடுத்துப் பார்த்தால், ஐந்து தடைவைகள் நாடாளுமன்ற உறுப்பனிராக இருந்திருக்கின்றார். இந்தக் காலத்தில் தன்னால் சம்பளம் வழங்கப்பட்ட பிரத்தியேக ஊழியர்களின் பெயர் விபரங்களை அவரால் வழங்கமுடியுமா? இதனை ஒரு பகிரங்க சவாலாகவே இந்தக் கட்டுரை முன்வைக்கின்றது? ஒருவேளை சம்பந்தன் அவ்வாறு முன்வைத்தால் அதில் நிச்சயம் அவரது மனைவியின் மகளின் மகனின் பெயர் இருக்கும்.

உண்மையில் கோட்டபாய திடீரென்று ஒரு அறிவிப்பை செய்தால் – அதாவது, அடுத்த நாடாளுமன்ற தேர்தலிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன அனுமதிப்பத்திரம் நீக்கப்படும். அதற்கு பதிலாக தங்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திலிருந்துதான் அனைத்தையும் அவர்கள் செய்யவேண்டும். அவ்வாறு நியமிக்கப்படும் ஊழியர்களும் அவர்களது உறவினர்களாக இருக்கக் கூடாது. இப்படி ஒரு அறிவிப்பை செய்வாராக இருந்தால், இன்று ஆசனத்துக்காக அடிபடும் பலர் அரசியலைவிட்டே ஒதுங்கிவிடுவார்கள். ஏனெனில் கூட்டமைப்பில் ஆசனத்துக்காக முன்வரிசையில் நிற்கும் எவருமே மக்களுக்காக வரவில்லை. இந்த சலுகைகளையையும் அந்தக் கதிரையால் கிடைக்கும் தொடர்புகளுக்காகவுமே அரசியலுக்குள் நுழைந்திருக்கின்றனர். இன்று கூட்டமைப்பிற்குள் இருக்கும் ஒரு சிலரைத் தவிர பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் தகுதி என்ன? அவர்களுக்கும் தமிழரசு கட்சிக்கும் ஏதாவது தொடர்பிருக்கின்றதா? அவர்களுக்கும் கடந்தகால போராட்டத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா? இப்படியானவர்கள் கூட்டமைப்புக்குள் வந்து பதவிகளை பெறுகின்றபோது, அவர்கள் எப்படி மக்களுக்கு உண்மையானவர்களாக இருப்பார்கள்?

கூட்டமைப்புக்குள் நிலவும் ஒற்றுமை என்பது நாடாளுமன்ற கதிரைகளுக்கான ஒற்றுமையே தவிர வேறொன்றுமில்லை. உண்மையில் இன்று கூட்டமைப்பு என்னும் ஒருஅமைப்பு இருப்பதே நாடாளுமன்ற கதிரைகளால்தான். ஒருவேளை அடுத்த தேர்தலில் சித்தார்த்தனோ அல்லது செல்வம் அடைக்கலநாதனோ தோல்வியடைந்தால் அதன் பின்னர் புளொட்டும் டெலோவும் கூட்டமைப்பிற்குள் இருக்காது. அப்படித்தான் சங்கரி வெளியேற்றப்பட்டார். அப்படித்தான் சுரேஸ் வெளியேற்றப்பட்டார். ஏனெனில் தமிழரசுக் கட்சி பேசும் ஒற்றுமை என்பது நாடாளுமன்ற கதிரைகளில் இருக்கும் வரைக்கும்தான் செல்லுபடியாகும்.

எனவே இது தமிழ் மக்களுக்கான அரசியல் ஒற்றுமையா அல்லது நாடாளுமன்ற கதிரைகளுக்கான ஒற்றுமையா? இப்போது இந்தக் கட்டுரையின் வாதம் உங்களுக்கு நன்றாக புரிந்திருக்கும். பெரும் விலை கொடுத்த மக்கள் கூட்டமொன்று, வெறும் பசப்பு வார்த்தைகளுக்குள் தங்களை தொலைத்துவிடக் கூடாது. சிந்திக்காத மக்கள் கூட்டமென்பது, எப்போதுமே வெறும் வாக்களிக்கும் இயந்திரம்தான் வாக்களிக்கும் இயந்திரங்களால் ஒருபோதும் வரலாற்றை படைக்கமுடியாது. அப்படியான மக்கள் அரசியல்வாதிகளின் அடிமைகளாக மட்டுமே இருப்பர்.

-கரிகாலன்-

( இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. -ஆசிரியர்பீடம் )