எழுக தமிழை ஏன் ஆதரிக்க வேண்டும் ?

Ezhuka vgg
Ezhuka vgg

எழுக தமிழை ஆதரித்து பல்வேறு ஈழ ஆதரவு சக்திகளும் ஒன்றுபட்டுவருகின்றன. இருப்பினும் ஆங்காங்கே சில முரண்பட்ட செய்திகளும் தகவல்களும் வெளிவராமலில்லை. எழுக தமிழ் நிகழ்வுகளின் வெற்றியை எவ்வாறாயினும் குழப்ப வேண்டும் என்பதுதான் அவ்வாறான செய்திகளதும் தகவல்களினதும் உள்நோக்கமாகும். இது ஒரு கட்சிக்கு சார்பானது, இதனால் விக்கினேஸ்வரன் பலமடைவார் என்றவாறான பிரச்சாரங்கள் அனைத்தும் மேற்படி உள்நோக்கத்தின் விளைவே! ஒரு மக்கள் இயக்கமான தமிழ் மக்கள் பேரவை, அதனுடன் கொள்கை அடிப்படையில் உடன்படக் கூடிய அரசியல் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு, மக்களுக்காக போராடும் போது, குறித்த அரசியல் கட்சிகள் இதனால் பயனடையும் என்று வாதிடுவதானது, அடிப்படையிலேயே தவறானதொரு புரிதலாகும்.

இவ்வாறு வாதிடுபவர்கள் எவரும் விபரம் அறியாமல் வாதிடவில்லை. அவ்வாறு வாதிடுபவர்களும் தங்களின் கட்சி நலன்களை முன்னிறுத்தியே மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர். எழுக தமிழ் தோல்வியடையும் போது, அதில் தங்களின் பங்களிப்பு இல்லாமையால்தான் அது தோல்வியடைந்தது என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதே அவ்வாறானவர்களது உண்மையான நோக்கமாகும். இதன் காரணமாகவே எழுக தமிழின் நோக்கம் தொடர்பில் அவ்வப்போது சில பிழையான அபிப்பிராயங்கள் வெளிவருகின்றன. தேர்தல் வெற்றியை மட்டும் இலக்கு வைக்கும் கட்சிகள் இவ்வாறு தங்களுக்குள் முரண்படுவது சாதாரணமான ஒன்றே ஆனால் கட்சி நலனையும் மக்கள் நலனையும் ஒன்றாக்கும் போதே இவர்கள் தவறு செய்யவிளைகின்றனர். மக்களுக்கு எதிராக சிந்திக்கின்றனர். இதில் மக்களுக்கே அதிக பொறுப்புண்டு. 

ஒரு விடயத்தை ஆதரிப்பதற்கு முன்னர் அதனை ஏன் ஆதரிக்க வேண்டும் என்னும் தெளிவு மக்கள் மத்தியில் இருக்க வேண்டியது அவசியம். மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாத போதுதான் போலியான பிரச்சாரங்கள் மக்களை வசியப்படுத்திவிடுகின்றன. எனவே முதலில் எழுக தமிழை ஆதரிப்பதற்கு முன்னர் ஏன் அதனை ஆதரிக்க வேண்டும் என்று பார்க்க வேண்டிய கட்டாயமான ஒன்றாகும். இந்தக் கேள்விக்கான பதிலை தேடுவதற்கு முன்னர் – எவ்வாறானதொரு காலகட்டத்தில் பேரவை எழுக தமிழுக்கான அழைப்பை விடுத்திருக்கின்றது என்பதற்கான பதிலை காண்போம்.

மகிந்த ராஜபக்ச சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்கின்றார் எனவே அந்த ஆட்சியை தோற்கடிக்க வேண்டும் என்னும் ஒரு புறச்சூழலில்தான், 2015இல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. அந்த ஆட்சி மாற்றம் தொடர்பில் அளவுக்கதிகமான நம்பிக்கைகள் விதைக்கப்பட்டன. இடைக்கால அறிக்கை, புதிய அரசியல் யாப்பு, சமஸ்டித் தீர்வு அதற்குள் மறைந்திருக்கிறது என்றெல்லாம் பேசப்பட்டுவந்தது. இறுதியில் அவற்றுக்கு என்ன நடந்தது? மீண்டும் தமிழ் மக்கள் மிக மோசமாக ஏமாற்றப்பட்டனர். தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற கூட்டமைப்பு, கடந்த நான்கு வருடங்காளக சிறிலங்கா அரசாங்கத்திற்கு முண்டுகொடுத்து வந்த நிலையில், அரசாங்கம் தங்களை ஏமாற்றிவிட்டதாக புலம்புகிறது. ஆட்சி மாற்றத்திற்கு பின்னரான அனுபவங்கள் தமிழர்களுக்கு ஒரு தெளிவான செய்தியை சொல்லியிருக்கிறது.

அதாவது, சிங்கள ஆட்சியாளர்கள் எந்தக் கட்சி நிறத்திலிருந்தாலும் கூட, அவர்களின் அடிப்படையான அரசியல் பண்பில் எந்தவொரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை. கடந்த நான்கு வருடகால அனுபவங்கள் இதனை தெட்டத்தெளிவாக நிரூபித்திருக்கின்றது. அதே வேளை வெறும் தேர்தல்வாத அரசியல் கட்சிகள் எவற்றாலும், தமிழர் தாயகப்பகுதியின் மீதான திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்களை எந்த வகையிலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆட்சி மாற்றம் எதையெல்லாம் தடுக்கும் என்று சொல்லப்பட்டதோ, அது எவற்றையுமே அது தடுக்கவில்லை. மாறாக, தமிழர் தாயகப்பகுதியான வட-கிழக்கில் பௌத்தமயமாக்கல் தொடர்ந்தது, திட்டமிட்ட குடியேற்றங்கள் மிகவும் நுட்பமாக தொடர்ந்தன. தொல்பொருளியல் ஆய்வு என்னும் அடிப்படையில் தமிழர்களின் பாரம்பாரியமான கலாசாரா – மத இடங்கள் கபளீகரம் செய்யப்பட்டது. இது எவற்றையும் அரசாங்கத்திற்கு முண்டுகொடுத்து வந்த, கூட்டமைப்பால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இது ஒரு தெளிவான செய்தியை சொல்லியது. அதாவது, தமிழ் மக்கள் வெறுமனே தேர்தலில் வாக்களித்து, தங்களின் பிரதிநிதிகளை சிறிலங்காவின் பாராளுமன்றத்திற்கு அனுப்புவதால் மட்டும் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. அது சாத்தியம் என்றால், கடந்த நான்கு வருடங்களில் கூட்டமைப்பால் பல்வேறு விடயங்களை சாதித்திருக்க முடியும் ஆனால் எதுவும் முடியவில்லை. எனவேதான் கட்சிகளை நம்பிக்கொண்டிருத்தல் என்பதற்கும் அப்பால் செயலாற்றவேண்டியிருக்கிறது. அதற்காக மக்கள் ஒரு இயக்கத்தின் கீழ் அணிதிரண்டு போராட வேண்டியிருக்கிறது. இவற்றின் மூலம்தான் தமிழ் மக்களின் தலையை நோக்கி வரும் ஆபத்தை ஆகக் குறைந்தது தோளோடாவது தடுத்து நிறுத்த முடியும். இவ்வாறானதொரு அரசியல் சூழலில்தான், தமிழ் மக்கள் பேரவை எழுக தமிழிற்கான அழைப்பை விடுத்திருக்கிறது. இப்போது இந்த எழுக தமிழை ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதற்கான பதிலை காண்பதில் சிரமமிருக்காது.

இதற்கு மேலும் எழுக தமிழ் தொடர்பில் ஒருவருக்கு தடுமாற்றமும் சந்தேகமும் இருப்பின், பேரவை, விக்கினேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் இதனுடன் கைகோர்த்திருக்கும் ஏனைய கட்சிகள் அனைத்தையும் விட்டுவிட்டு, எழுக தமிழுக்காக முன்வைக்கப்பட்டிருக்கும் கோரிக்கைகளை மட்டுமே கருத்தில் கொள்ளலாம் – செயற்படலாம். ஏனெனில் 2009இற்கு பின்னர் – தமிழ் மக்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆதிரிக்கக் கூடிய எந்தவொரு அரசியல் கட்சியோ, மக்கள் இயக்கங்களோ வடக்கு கிழக்கில் இல்லை என்பது உண்மையே! அவ்வாறு மக்கள் ஆதரிக்கக் கூடியளவிற்கான அர்ப்பணிப்போடும் தியாகசிந்தையோடும் எந்தவொரு தலைமையும் இல்லை என்பதும் உண்மையே!

இதுதான் யதார்த்தம் என்றாலும் கூட. நாம் எந்தவொரு நிகழ்வையும், அதற்கு தலைமை தாங்குவோரையும் குறிப்பிட்ட சூழலில் வைத்துத்தான், மதிப்பிட வேண்டும். அந்த வகையில் நோக்கினால் பேரவையின் எழுக தமிழுக்கு இன்றைய காலத்தில் ஒரு வரலாற்றுப் பாத்திரம் உண்டு. ஈழத் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி சிந்திக்கும் அனைவரும் கட்சி பேதங்களையும், கடந்தகால கசப்புக்களையும் மறந்து ஓரணியில் திரண்டு, எழுக தமிழை வெற்றிபெறச் செய்ய வேண்டிய ஒரு காலத்தேவையாகும். காலத்தை தவறவிட்;டால் பின்னர் கண்டவரெல்லாம் கதவைதட்டும் போது, தமிழ் மக்கள் வெறும் பார்வையாளராக மட்டுமே நிற்க நேரிடும்.

பேரவையின் எழுக தமிழுக்கான கோரிக்கைகள் முற்றிலும் சரியானவை – நியாயமானவை. அதாவது, சிங்கள, பௌத்த மயமாக்கலை உடனடியாக நிறுத்து, சர்வதேச போர்க்குற்ற விசாரணையை நடத்து, தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்து, வடக்கு – கிழக்கில் இராணுவ மயமாக்கலை நிறுத்து மற்றும் இடம்பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய இடங்களில் மீளக்குடியமர்த்து – ஈழத் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி சிந்திக்கும் ஒருவரால் இந்தக் கோரிக்கைகளை எவ்வாறு நிராகரிக்க முடியும் – எவ்வாறு எழுக தமிழை எதிர்க்க முடியும்?

-கரிகாலன்