தமிழ்த் தேசிய அரசியல் : தியாகமா? வியாபாரமா?

Chinema 3
Chinema 3

ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியினர் மீது ஈழத் தமிழ் மக்களுக்கு பெருத்த விமர்சனங்கள் உண்டு. ஆனாலும், சிங்கள மக்களுக்கான ஒரு கட்சியாக அவர்கள் பல்வேறு தியாகங்களை செய்கின்றனர். தேர்தலில் தம்மை மக்கள் கடுமையாக நிராகரித்தபோதும், தமது தியாகங்களை அவர்கள் ஒருபோதும் குறைத்துக்கொள்வதில்லை. ஆனால் இனத்திற்கான விடுதலைக்காக போராடுகிறோம் என்று சொல்லும் தமிழ்த் தேசியவாதிகள் உண்மையில் எதை தியாகம் செய்கின்றனர்?

ஜே.வி.பி கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் உள்ளவர்கள், அரசிடம் இருந்து சலுகையாகப் பெறும் தமது வாகன உரிமத்தை விற்று, அந்நிதியை மக்களுக்காக செலவிடுமாறு கட்சியிடம் கொடுக்கின்றனர். அக்கட்சி மீதான பல்வேறு விமர்சனங்களுக்கும் அப்பால், இந்த விடயம் ஒரு முன்னுதாரணமான விடயமாகும். வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மாத்திரம் பதினாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படும் வாகன உரிமம் ஒன்றின் பெறுமதி இரண்டு (2) கோடி எனப்படுகின்றது. அத்துடன் மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படும் வாகன உரிமத்தின் பெறுமதி சுமார் அறுபது (60) இலட்சங்கள். அப்படி பார்த்தால் கிட்டத்தட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகன உரிமத்தின் பெறுமதி முப்பத்திரண்டு (32) கோடி மற்றும் வட கிழக்கு மாகாண சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 41 மாகாண சபை உறுப்பினர்களின் வாகன உரிமங்களின் மொத்த மதிப்பு அண்ணளவாக இருபத்தைந்து (25) கோடிகள்.

2010 இல் நாடாளுமன்றத்திற்கு தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 14. அந்த நேர ஒரு வாகன அனுமதிப்பத்திரத்தின் பெறுமதியான ஒரு (1) கோடிப் படி, அதன் மொத்தத் தொகை பதினான்கு (14) கோடிகள். அப்படிப் பார்த்தால் 2010 இலிருந்து வாகன அனுமதிப்பத்திர சலுகைகளிலிருந்து மட்டும் எழுபத்து ஒரு (71) கோடிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமாகியுள்ளது. இவர்கள் தமக்கு வழங்கப்படும் இந்த வாகன உரிமங்களை உடனடியாக விற்பனை செய்து அப்பணத்தை என்ன செய்கின்றனர்? ஒவ்வொரு முறை தேர்தலிலும் வெல்லுகின்ற போதும், மீண்டும் மீண்டும் வாகன உரிமங்களை பெறும் இவர்கள் இந்த பணத்திற்காகவா அரசியலில் ஈடுபடுகின்றனர்?

நாளும் பொழுதும் மக்களுக்காகவும், மக்களின் இன உரிமைக்கும் விடுதலைக்குமாக என தொண்டை தண்ணீர் வற்ற பேசுகின்ற தமிழ்த் தேசியவாதிகள், இவற்றை வைத்து போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வாழ்வாதார திட்டங்களை உருவாக்கி மக்களுக்கு ஏன் கையளிக்க கூடாது? தமிழ்த் தேசிய அரசியலில் உள்ள, அல்லது வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவம் செய்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், எவராவது இந்த முன்னுதாரணமாக செயலை செய்யவில்லையே.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அடிப்படைச் சம்பளம் 54,285 ரூபாக்கள் அடங்கலாக மாதாந்தம் இரண்டு இலட்சத்து எழுபது ஆயிரம் (270,000) ரூபாய்கள் அரச கொடுப்பனவாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், ஐந்து உத்தியோகத்தர்களை நியமிக்க முடியும். மாகாண சபை உறுப்பினர் ஒருவர் இரண்டு உத்தியோகத்தர்களை நியமிக்க முடியும்? ஆனால் பெரும்பாலான உறுப்பினர்கள், தமது மனைவி, மகள்கள், மகன்களின் பெயர்களை நியமித்துவிட்டு அனைத்து ஊழியர்களின் கொடுப்பனவுகளையும் தாமே சுருட்டிக் கொள்கின்றனர். சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது சாரதிகளுக்கு அரசால் ஒதுக்கப்படும் ஊதியத்தில் அரைவாசியையே கொடுக்கின்றனர்.

இவர்களில் எவராவது போரினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு வேலை கொடுத்து அவர்களின் அடுப்பை எரியச் செய்கிறார்களா? அது மாத்திரமின்றி, சொந்தம், சாதி போன்ற வேறுபாடுகளைப் பார்த்தே தமது அலுவலகங்களின் ஆட்களை வேலைக்கு அமர்த்துகின்றனர். இப்போது இனம் விடுதலைக்காக தவிக்கையில், தமிழ் தேசிய அரசியல் என்பது செல்வம் கொழிக்கும் வியாபாரமாகிவிட்டது என்பதையே இத்தலையங்கம் அழுத்தமுற விமர்சிக்கின்றது.

எத்தகைய வாக்குறுதிகளையும் மக்களுக்கு அளிக்கலாம், அவற்றை நிறைவேற்றாமல் நழுவி அடுத்த தேர்தலிலும் மீண்டும் அதே வாக்குறுதிகளுடனும்கூட வந்து நிற்கலாம். எப்போதும் இன விடுதலை என்றும் உரிமை என்றும் போராளிகள் பற்றியும் தலைவர் பிரபாகரன் பற்றியும் பேசிக்கொண்டே, வியாபார அரசியல் செய்யலாம் என்பது, இனத்திற்கும் போராளிகளுக்கும் செய்யும் துரோகமே. எத்தனையோ தியாங்களின் மேல் ஈழத்தவர்களின் விடுதலைப் போராட்டம் கட்டி எழுப்பட்டது? இப்போது அப் போராட்டத்தின் மேல் தமிழ்த் தேசிய அரசியல் வியாபாரிகள் தமது வணிகத்தை கட்டி எழுப்புகின்றனர்.

அரசின் வாகன உரிமம் உள்ளிட்ட சலுகைகளை பெற்று தாமே அனுபவிக்கும் அரசியல்வாதிகள், அமைச்சுப் பதவிகளையும் பெறலாம் அல்லவா? அமைச்சுப் பதவிகளை பெற்று மக்களுக்கு சேவை ஆற்றினாலாவது அர்த்தமானது. அரசியல் தீர்வில்லாமல் அமைச்சு பதவிகளை ஏற்க மாட்டோம் என்று சொல்லிவிட்டு அத்தனை அரச சலுகைகளையும் பெறுவதும், ஐந்தாண்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவிட்டு வாழ்நாள் ஓய்வூதியம் பெறுவதெல்லாம் எந்த அடிப்படையில் நியாயமானது? தாய் பகை, குட்டி உறவென்ற நிலையல்லவா இது. அல்லது அமைச்சு பதவிகளை ஏற்கும் ஆளுமை அற்றவர்களா தமிழ்த் தேசியவாதிகள்? எதிர்கட்சித் தலைவர் பதவியை ஏற்பதும் கட்சிகளின் பிரதி தவிசாளர் பதவியையும் ஏற்பவர்கள் ஏன் அமைச்சு பதவியை ஏற்ககூடாது? இப்படி செய்வதெல்லாம் மக்களை முட்டாளாக்கி, தொடர்ந்து அரசியல் செய்யும் வணிக உத்தியாகும்.

இந்த விடயத்தில் மக்கள் இனியேனும் விழித்துக்கொள்ள வேண்டும். மேற்குறித்த கேள்விகளை மக்கள் தங்கள் பிரதிநிதிகளிடம் முன் வைக்க வேண்டும். அத்துடன், இனி தேர்தலில் போட்டியிடுகின்ற அனைவரும் அரசால் தமக்கு அளிக்கப்படும் வாகன உரிமமம் உள்ளிட்ட அனைத்துச் சலுகைகளையும் மக்களுக்கே வழங்குவோம் என வாக்குறுதி அளிக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி என அனைத்து தரப்பினரும் மக்கள் மத்தியில் பகிரங்கமாக இதனை அறிவிக்க வேண்டும்.

தமிழ்த் தேசிய அரசியல் என்பது வியாபாரமாக இருக்க முடியாது. அது தியாகத்தின்மீதே கட்டி எழுப்பப்படவேண்டும். இந்த விடயத்தில் மக்களின் எழுச்சிதான் வியாபாரிகளிடமிருந்து தமிழ்த் தேசிய அரசியலை மீட்டெடுத்து உண்மையான மக்கள் பிரதிநதிகளிடம் கையளிக்க துணைபுரியும்.

தமிழ்க்குரல் ஆசிரியர் பீடம்.

11.01.2020