இஸ்ரேலிய பாணியில் அபகரிக்கப்படும் நிலங்கள் – தமிழகத்தின் உதவியை நாடும் விக்கி!

IMG 20200111 WA0007
IMG 20200111 WA0007

‘இஸ்ரேலிய பாணியில் எமது  பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இதனை தடுத்து நிறுத்த மத்திய அரசின் ஊடாக நீங்கள் ஆவன செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன். இங்கு இருக்கக்கூடிய அரசியல் வேறுபாடுகளைப் புறந்தள்ளி ஒருங்கிணைந்து தமிழக அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது’ தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உலகத் தமிழர் திருநாள் விழா உலகத் தமிழ் வம்சாவளி ஒன்றுகூடல் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (11-01-2020) நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும்போதை தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘நீங்கள் எமக்காக செய்யக்கூடியவை என்று எனது மனத்தில் தோன்றும் சில விடயங்களைக் குறிப்பிட விரும்புகின்றேன்’ என ஆறு விடயங்களை வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் பட்டியலிட்டார்.

அவையாவன,

1.       எமது உண்மையான வரலாற்றை புகழ் பூத்த பல்கலைக்கழகங்களில் உள்ள வரலாற்று தமிழ் ஆய்வாளர்கள் ஆராய்ந்து எழுத முன்வரவேண்டும். எமது ஆய்வாளர்கள் இதனைச் செய்வதில் பல சவால்களும் பிரச்சினைகளும் இருக்கின்றன. சிங்கள ஆய்வாளர்கள் கூட உண்மையைக் கூறவிழைந்தால் அவர்கள் அவதிகளுக்கு உள்ளாகின்றார்கள்.

2. நாம் போரினால் பாதிக்கப்பட்டு மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ளோம். எம்மை அப்படியே வைத்திருக்கவே அரசாங்கம் விரும்புகின்றது. அதன் நோக்கம் எமது மக்களை உரிமைப் போராட்டத்திலிருந்து விலக்கி சலுகை அரசியலை நோக்கி  நிர்ப்பந்திப்பதாகும். இதனைத் தடுப்பதற்கு உலகெங்கும் பரந்துள்ள தமிழ் வர்த்தகர்கள் எம் பிராந்தியங்களில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வரவேண்டும். தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தவேண்டும். மீன்பிடி துறையில் முதலீடுகளை இந்திய வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் செய்து எமது மீனவர்களுக்கு படகுகளையும் ஆழ்கடல் மீன்பிடி பயிற்சிகளையும் வழங்குவதன் மூலம் நீங்களும் வளர்வதுடன் எம்மக்களுக்கும் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க முடியும். இதனைப்போலவே விவசாயத்துறை மற்றும் வணிகத்துறைகளிலும் நீங்கள் முதலீடுகளை எமது வட-கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன். குறிப்பாக எமது முன்னாள் போராளிகள் பலர் தொழில்வாய்ப்பு இல்லாமல் விரக்தியின் விளிம்பில் நிற்கின்றனர். அவர்களுக்குத் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி அவர்களின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைக்கும்படி வேண்டுகோள் விடுக்கின்றேன். உங்கள் முதலீடுகள் எமது பிரதேசங்களில் தொழில்வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றை மட்டுமன்றி எமது பூர்வீக நிலங்கள் பாதுகாக்கப்படுவதற்கும் வழிவகுக்கும்.  

3. இன அழிப்பில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு  சுயநிர்ணயத்துடன் கூடிய சமஷ்டிக் கட்டமைப்பு ஒன்றே பாதுகாப்பான தீர்வாக அமையும். இதை பெற்றுக்கொடுக்கும் பாரிய கடப்பாடு பாரத மக்களிடையே இருக்கின்றது.  ஒற்றையாட்சிக்குள் ஏற்படுத்தப்படும் எந்தத் தீர்வும் தீர்வாகாது என்பதற்கு இந்தியாவினால் கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச்சட்டமே சான்றாக அமைந்திருக்கின்றது. இலங்கை ஆட்சியாளர்கள் அன்று இந்தியாவைத் தீர்வு என்ற மாயைக்குள் சிக்கவைத்து இந்தியாவையும் எமது இளைஞர்களையும் மோதவைத்து பல கசப்பான சம்பவங்களை ஏற்படுத்தியதுடன் பின்னர் மிகவும் தந்திரமாக 13வது திருத்தத்தில் உள்ள மிகமுக்கிய சரத்துக்களையும் நீக்கிவிட்டு இன்று அதனை முற்று முழுதாக குப்பைக்குள் எறிவதற்கு தயாராகிவருகின்றனர். இலங்கையில் எந்தளவுக்கு தமிழ் மக்கள் ஒடுக்கப்படுகின்றார்களோ, எந்தளவுக்கு அவர்களின் பூர்வீக வடக்கு-கிழக்கு தாயகம் ஆக்கிரமிக்கப்படுகின்றதோ அந்தளவுக்கு அது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தானது என்பதை மறந்து விடாதீர்கள். அதாவது இந்தியாவின் பாதுகாப்பு இலங்கையில் தமிழ் மக்களைப் பாதுகாப்பதில் தங்கியுள்ளது. இதனை இந்திய கொள்கைவகுப்பாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும். எமது நாட்டின் சிங்களத் தலைவர்களிடையே இந்தியா மீது பற்றோ பரிவோ இல்லை என்பதை நீங்கள் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.

4.அடுத்து எமது தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் புத்திஜீவிகளைக் கொண்ட ஒரு மூலோபாய கட்டமைப்பை ஏற்படுத்தி  நீங்கள் செயற்படவேண்டும்.

5. தென் இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் எமது பிரச்சினைகள் தொடர்பில் ஏனைய மாநிலங்களின்  சட்ட மன்றங்களையும் ஒரு பொதுக் கொள்கையின் கீழே கொண்டுவந்து எமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக  மத்திய அரசினுடாக நீங்கள் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று தமிழ்நாட்டு சகோதர சகோதரிகளிடமே வேண்டிக்கொள்கின்றேன். இலங்கையில் தமிழ் மக்கள் எந்தளவுக்கு உச்ச அதிகாரத்துடன் இருக்கின்றார்களோ அந்தளவுக்கு இந்தியாவின் தென்கோடி பாதுகாப்பாக இருக்கும் என்று எடுத்துச் சொல்லுங்கள். எமக்கு கிடைக்கக்கூடிய உச்ச அதிகாரங்கள் எந்தவிதத்திலும் இந்தியாவின் மாநில சுயாட்சிக்கு அச்சுறுத்தலாக அமையாது. இந்தியாவில் ஜனநாயக கட்டமைப்புக்கான அடித்தளம் வலுவாக கட்டியெழுப்பப்பட்டுள்ளதுடன் நீதித்துறையின் சுயாதிபத்தியம் உச்சளவில் பேணப்படுகின்றது. வளமான, வலிமையான ஒன்றுபட்ட இந்தியாவே தமிழர்கள் உட்பட இந்தியாவின் தேசிய இனங்களின் இருப்புக்கும், வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் அவசியமானது என்பது தெளிவாக உணரப்பட்டுள்ளது.   பெரும்பான்மையான ஒரு இனம் இருக்கிறது என்றும் அந்த இனத்தின் விருப்பங்களுக்கு மாறாக ஏனைய இனங்களுக்கு எதனையும் வழங்கிவிடமுடியாது என்பதுமான நிலை பாரதத்தில் இல்லை. ஆனால், பெரும்பான்மை சிங்கள மக்களின் விருப்பத்துக்கு மாறாக தமிழ் மக்களுக்கு எதனையும் வழங்கிவிடமுடியாது என்று இலங்கையின் ஜனாதிபதியே கூறிவிட்டார். மகாவம்ச சிந்தனையின் கீழ் அரச  நிறுவனங்கள் கட்டியெழுப்பப்பட்டு எமக்கு எதிரான இன அழிப்பு அங்கே நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளது. நீதித்துறையின் சுயாதிபத்தியம் இதன் மூலம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இஸ்ரேலிய பாணியில் எமது  பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இதனை தடுத்து நிறுத்த மத்திய அரசின் ஊடாக நீங்கள் ஆவன செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன். இங்கு இருக்கக்கூடிய அரசியல் வேறுபாடுகளைப் புறந்தள்ளி ஒருங்கிணைந்து தமிழக அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

6. இறுதியாக,  2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கில் எமது மக்கள் உயிர்துறந்து  இனவழிப்புக்கான பரிகாரநீதி எனும் போராட்ட வலுவை எமக்கு ஏற்படுத்தியுள்ளனர். வடக்கு மாகாண சபையில் இது தொடர்பாக இன அழிப்பு தீர்மானம் ஒன்றையுங் கொண்டுவந்து நிறைவேற்றியிருக்கின்றோம். இதனை சர்வதேச அளவில் கொண்டு சென்று நீதியை வென்றெடுப்பதற்கு  இங்குள்ள தமிழ் உறவுகள் அனைவரும் உதவவேண்டும்.