யாழ் தெருமூடிமடம் நாளை மக்கள் பாவனைக்கு கையளிப்பு!

therumoody madam
therumoody madam

யாழ்ப்பாணம் பருத்துத்துறையில் அமைந்துள்ள தெருமூடிமடம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு நாளைய தினம் (15) மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.

புராதான காலத்தில் மோட்டார் பாவனைக்கு வருவதற்கு முன்னர் மக்கள் கால் நடையாகவும், மாட்டுவண்டில்களிலும் பயணங்களை மேற்கொண்டு வந்தனர். இதன் காரணமாக மக்கள் இளைப்பாறுவற்கும், இரவில் தங்குவதற்கும் உதவும் நோக்கில் பிரதான வீதிகளின் கரையோரங்களில் பிரதேச நலன் விரும்பிகளால் மடங்கள் அமைக்கப்பட்டன.

இவ்வாறு அமைக்கப்பட்ட மடங்கள் அன்றைய காலகட்டத்தில் மக்கள் ஒன்று கூடும் இடமாகவும், இளைப்பாறும் மையங்களாகவும், காணப்பட்டன.
இலங்கையில் பல பாகங்களில் 16ஆம், 17ஆம் மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் இக் கட்டட அமைப்பு பரவல் அடைந்து காணப்பட்டன.

பருத்துத்துறையில் அமைந்துள்ள தெருமூடிமடம் இலங்கையின் தனித்துவமான கட்டிட வடிவமைப்பினை உடைய ஓரே ஓரு மடம் ஆகும். இது 35அடி நீளமும் 34அடி அகலமும் கொண்டதாக பொழிந்த சுண்ணாம்புக் கற்களினால் கட்டப்பட்டுள்ளது. 16 தூண்கள் இருபுறமுமாகவும் 4 கல் அடுக்குகளின் மேற்பகுதியில் பொருத்தப்பட்டு அவற்றின் சுவரின் மேல் கூரை அமைக்கப்பட்டுள்ளது.

தாங்கி நிற்கும் அனைத்து தூண்களிலும் இம்மடத்தினை
அமைக்க உதவியவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

1940ஆம் ஆண்டு 9ஆம் இலக்கம் தொல்லியல் சட்டத்தின் பிரகாரம் இம்மடம் தொல்லியல் மரபுரிமைச் சின்னமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் கூரை 2008ஆம் ஆண்டு விபத்தில் சேதம் அடைந்து தொல்லியல் திணைக்களத்தினால் 2019ஆம் ஆண்டு பருத்தி நகர் அபிவிருத்தி சங்கம் – சுவிஸ் நிதி உதவியுடன் மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.