சேவைக்கு பொருத்தமற்ற புகையிரத இயந்திரங்கள் இறக்குமதி !

64
64

கடந்த ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரயில் இயந்திரங்கள் சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலையில் காணப்படுவதாக இலங்கையின் ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் புகையிரத வழித்தடங்களில் இந்த இயந்திரங்களை சேவையில் ஈடுபடுத்துவதில் பல சிக்கல்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப் படுகிறது.

கடன் சலுகையின் கீழ் M 11 ரக 10 ரயில் இயந்திரங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு அதில் 8 இயந்திரங்கள் இதுவரையில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

இலங்கையின் பொறியியலாளர்கள் சாரதிகள் உள்ளிட்ட குழுவொன்றை இந்தியாவிற்கு அனுப்பி, பரிசீலனை செய்து, விசேட பயிற்சிகளை பெற்றுக் கொண்டதன் பின்னரே இந்த 8 இயந்திரங்களும் ஒன்றன் பின் ஒன்றாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன.

இந்த இயந்திரங்களில் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட ஒருஇயந்திரம் அண்மையில் தெமட்டகொட ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டு ரயிலுக்கும் ரயில் மார்க்கத்திற்கும் பெரும் சேதம் ஏற்பட்டது.

ஏனையவற்றில் 4 இயந்திரங்கள் மட்டுமே பாதுகாப்பான வழித்தடங்களில் சேவையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாகவும் மூன்று இயந்திரங்களுக்கு ஏற்ற வழித் தடங்கள் இல்லாத நிலையில் தரித்து நிற்பதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ரயில்வே பொது முகாமையாளர் தொழில்நுட்ப ஆய்வுக்குழுவினால் ஆய்விற்கு உட்படுத்தி, அவர்களின் சிபாரிசுகளை ஆராய்ந்து, அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றதன் பின்னரே இவ்வாறான பாரிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் படுகின்றன எனவும் தெரிவித்தார் .

கடந்த அரசின் இந்த இறக்குமதியில் இதுபோன்ற சரியான நடை முறைகள் பின்பற்ற பட்டதா…? என்கின்ற கேள்வி தொழிற் சங்க வட்டாரங்களினால் எழுப்பப் படுகின்றன.