நல்லூர் செங்குந்தா சந்தையினை சீர்செய்யுமாறு கோரிக்கை – சீ.வீ.கே

cvk
cvk

நல்லூர் செங்குந்தா சந்தை கடந்த 2020.01.02 ம் திகதி திறந்து வைக்கப்பட்ட நிலையில் அங்கு நிலவி வருகின்ற குறைபாடுகள் தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த சந்தையில் நிலவுகின்ற குறைபாடுகள் தொடர்பிலும் உடனடியாக சீர்செய்ய வேண்டிய குறைபாடுகள் தொடர்பிலும் வட மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனையடுத்து இது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானம் அவர்களினால் யாழ் மாநகர சபை முதல்வரிற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இக்கடிதத்தில் இங்கு சீர்செய்ய வேண்டிய குறைபாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

  1. மீன்சந்தை மிகவும் நெருக்கமானதாகவும் இடவசதியற்றதாகவும், மக்கள் போக்குவரத்துச் செய்யமுடியாதவாறும், கழிவுநீர் தேங்கி நிற்பதாகவும் காணப்படுகின்றது. 2020.01.12 ம் திகதி மீன்சந்தையின் கழிவுநீர் தேங்கியமையால் ஒரு பெண்மணி வழுக்கி விழுந்த காலில் காயம் அடைந்தமை பற்றி தெரிவிக்கப்பட்டது.
  2. மீன்சந்தைக்கு கிழக்குப்பக்கமாக உள்வருகை அமைவதால் பாரிய வாகன நெரிசல் ஏற்படுகின்றது.
  3. மரக்கறிச் சந்தைக்கு வடக்குப் புறமாக உட்செல்வதற்கு இருந்த நுழைவுப்பகுதி முழுமையாகத் திறந்து விடப்படவில்லை.
  4. பருத்தித்துறை வீதியிலிருந்து சந்தைக்கு உட்செல்வதற்கான மேற்குப் புறப்பாதை மிகக் குறுகியதாக உள்ளது. இது முன்னரே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
  5. பாதுகாப்பு எல்லைகள் முறையாக அமைக்கப்படவில்லை. இரவு வேளைகளில் இவை துர்நடத்தைகளுக்கு இடமளிப்பதாக உள்ளது.
  6. மலசலகூடம் முறையாக பராமரிக்கப்படுவதில்லை.
  7. நிர்ணயிக்கப்பட்ட விகிதத்துக்கு அதிகமாக குத்தகை அறவிடப்படுதல்.

மாநகரப் பகுதியில் போதிய வருமானத்தை ஈட்டித்தரும் இச் சந்தையின் குறைபாடுகள் தாமதமின்றி நிவர்த்தி செய்யப்படுதல் வேண்டும் எனக் கருதப்படுகின்னது. மேலும் இச்சந்தை மீன் விற்பனைக்கே அதிகம் பிரபல்யம் வாய்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பின்வரும் சீர்செய் நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு கோரப்படுகின்றது.

  1. பருத்தித்துறை வீதியிலிருந்து உட்செல்லும் மேற்குப்புறப் பாதையிலுள்ள படியினை கட்டிடத்துக்கு பாதிப்பில்லாத வகையில் அகற்றி விஸ்தரிக்க வேண்டும்.
  2. வடக்குப்புற உள்நுழைவுப்பகுதி முழுமையாகத் திறந்து விடப்படல் வேண்டும்.
  3. சந்தையின் தென்கிழக்குப் பகுதிக்கு சுற்றுமதில் அல்லது சுற்றுவேலி அமைத்தல் வேண்டும். இவற்றின் மூலம் சந்தையின் உள்நுழைவு தெற்கு, மேற்கு மற்றும் வடக்குப் புறமாக இருக்கும். இரவு வேளைகளில் இந்த வாயில் கதவுகள் பூட்டப்படல் வேண்டும்.
  4. மீன்சந்தையின் கிழக்குப்புறமுள்ள உள்நுழைவுப்பாதை மூடப்படல் வேண்டும்.
  5. மீன்சந்தையின் மேற்குப்பக்கச்சுவரின் கீழ்பகுதி இரண்டு இடத்தில் அகற்றப்பட்டு திறந்து விடப்படல் வேண்டும்.
  6. மரக்கறிச் சந்தைக்கும், மீன்சந்தைக்கும் இடையிலுள்ள பகுதியை மீன்சந்தையின் திறந்தவெளிப்பகுதியாக விஸ்தரிக்க வேண்டும். இங்கு பாரம்பரிய முறையில் மீன் விற்பனை செய்யப்படலாம்.
  7. இச் சந்தையின் மரக்கறி வியாபாரிகள் திருநெல்வேலிச் சந்தையிலிருந்தே தமது பொருட்களைக் கொள்வனவு செய்பவர்கள். அதனால் அவர்களது கொள்விலையில் ஏற்கனவே ஒரு சந்தைக் கட்டணம் உள்ளடக்கப்படும் நிலையில், இந்தச் சந்தையில் அதிகரித்த கட்டணத்தை செலுத்த முடியாத நிலையிலேயே உள்ளனர் என்பது கவனத்திற் கொள்ள வேண்டும்.
  8. மீன்சந்தை மற்றும் மலசலகூடத் துப்புரவு பேணலுக்கு மாநகரசபையின் செயற்பாடும், மேற்பார்வையும் இறுக்கமாக மேம்படுத்தப்படல் வேண்டும்.
  9. இவற்றுக்கு நிதிவசதி இல்லை என்று கூறாமல் மாநகரபையின் நிதி வசதியிலேயே இவற்றைப் பூர்த்திசெய்ய முடியுமென்றே கருதப்படுகின்றது.

இது தொடர்பிலாக கடிதத்தின் பிரதிகள் யாழ் மாநகர சபை ஆணையாளர் ரீ.ஜெயசீலன் அவர்களுக்கும், 5ஆம் வட்டார உறுப்பினர் பி.மதிவதனி அவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.