தங்கள் வலியை மறந்து சில நிமிடங்களுக்குக் கை கொட்டி சிரிப்பார்கள்!!

8 n
8 n

அன்று காசு கொடுத்து யாரையாவது அடிக்கச் சொன்னால், இரக்கமே இல்லாமல் அடித்துத் துவைத்து எடுத்த கூலிப்படை சஜிகுமார், இன்று ஏழைப் புற்று நோயாளிகளை காசில்லாமல் அழைத்துப் போகிறார் ஆட்டோவில்!

கேரளாவின் தலைநகரம் திருவனந்தபுரம். பத்மநாபஸ்வாமி கோயில் போல இந்த நகரத்தின் இன்னுமொரு அடையாளமாக இருக்கிறது மண்டல புற்றுநோய் மையம். நகரின் மையப்பகுதியில் இருக்கிறது இது. இங்கிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது திருவனந்தபுரம் புகைவண்டி நிலையம். இந்த இரு இடங்களுக்கும் இடையே நில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கிறது சஜிகுமாரின் ஆட்டோ.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பல பகுதிகளிலிருந்தும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்தும் மிக அதிகமான நோயாளிகள் இந்தப் புற்றுநோய் மையத்துக்கு சிகிச்சைக்காக தினசரி வருகிறார்கள். இவர்களில் மிகப் பெரும்பாலானோர் வறியவர்கள். இவர்களிடம் எந்தக் காசையும் பெறாமல் முற்றிலும் இலவசமாகக் கொண்டு விடுவதைத் தன் கடமையாகச் செய்து வருகிறார் சஜிகுமார்…

நம்ம ஊர் ஆட்டோக்களில் பெரும்பாலும் ‘பிரசவத்துக்கு இலவசம்’ என்று எழுதி இருப்பதைக் காணலாம். சஜிகுமாரின் ஆட்டோவிலோ ‘புற்றுநோயாளிகளுக்கு இலவசம்’ என்று எழுதப்பட்டுள்ளது. இவரது ஆட்டோ தெருவில் சென்றாலே எல்லோரும் ஒரு வினாடி திரும்பிப் பார்த்துவிடுவார்கள். ஆட்டோவின் முன் பகுதியில் மீன் தொட்டி, சின்னஞ்சிறு குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொம்மைகள் என அலங்கரித்துத் தொங்க விட்டிருக்கிறார்…

புற்றுநோயாளிகளின் வேதனையை உணர்ந்து அவர்களுக்கு உதவி வரும் இந்த சஜிகுமார், ஒரு காலத்தில் கூலிப்படையில் ஒருவராக இருந்து அடிதடியில் ஈடுபட்டு வந்தவர் என்றால் இப்போது நம்புவதற்குக் கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். ஒரு நிலையில் மனம் மாறி, சமூக சேவை யோடு கூடிய இந்த வாழ்வை அப்போது செய்த பாவங்களுக்கு புண்ணியமாக இப்போது தொடர்ந்து வருகிறார்..

சஜிகுமாரின் தந்தை கூலித்தொழிலாளி.
அண்ணன், தங்கை மற்றும் சஜிகுமார் என மூன்று பேர் கொண்ட அழகிய குடும்பம் அது. சொந்தமாக இருந்தது ஒரே ஒரு வீடு. அதுவும் தங்கை திருமணத்தின்போது விற்கப்பட்டுவிட, ஏழ்மையின் பிடியில் சிக்கிக்கொண்டு தவித்தார்கள் அண்ணன் தம்பி இருவரும்.சஜிகுமாரை கூலிப்படைக்குக் கொண்டுபோய் சேர்த்தது வாழ்க்கை.
கூலிப்படை என்றால் யாரையும் கொல்வது கிடையாது. காசு கொடுத்து யாரையாவது அடிக்கச் சொன்னால், இரக்கமே இல்லாமல் அடித்துத் துவைத்து எடுப்பார் சஜிகுமார்.

வயிறு முட்ட கள் குடிப்பது, வீண் சண்டைக்குப் போவது இப்படியாகத்தான் சஜிகுமார் வாழ்க்கை அர்த்தமில்லாமல் போய்க்கொண்டிருந்தது. மூன்றுக்கும் மேற்பட்ட முறை காவலர்களால் பிடிக்கப்பட்டு, மாதக்கணக்கில் சிறையில் இருந்திருக்கிறார் சஜிகுமார்.
சிறை தந்த மாற்றம், சஜிகுமாரை அடிதடித் தொழிலிருந்து வெளியே வரவைத்தது.

வயிறு இருக்கிறதே, வாழ வேண்டுமே என்ற நிலையில் தென்னை மரம் ஏற கற்றுக்கொண்டார் சஜிகுமார். கூப்பிட்ட வீடுகளுக்குச் சென்று, தென்னை மரங்களில் ஏறி, தேங்காய்கள் பறித்துக் கொடுத்து அதில் கிடைத்த சொற்பக் காசுகளில் காலத்தை ஓட்டி வந்தார் சஜிகுமார்‌.

திருவனந்தபுரத்தில் வசிக்கும் டாக்டர் சத்தியசீலன் வீட்டுக்கு அப்படித்தான் தேங்காய் பறித்துப் போடப் போனார் சஜிகுமார்.சஜிகுமார் கதையைக் கேட்ட டாக்டர், “பழைய தொழிலை விட்டுவிட்டு முன்னேறும் வழியைப் பார்” என்று சொல்லி தன் வீட்டுக்கு முன்னுள்ள தோட்டத்தைப் பராமரிக்கும் வேலையைக் கொடுத்தார். தினசரி டாக்டர் சஜிகுமாரிடம் பேசிப்பேசி அவரை முழுதாக நல்வழிக்குக் கொண்டு வந்தார். ஒரு கட்டத்தில் சஜிகுமாருக்கு தொழில் செய்வதற்கு ஆட்டோ வாங்குவதற்கும் உதவி செய்தார்.

திருவனந்தபுரம் புற்றுநோய் மையத்துக்கு எதிரில் தான் நிற்கிறது இந்த ஆட்டோ. இங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பும் நோயாளிகளை திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இலவசமாகக் கொண்டு விடுவதும், அங்கிருந்து ரயிலில் வந்து இறங்கும் ஏழைப் புற்று நோயாளிகளை இலவசமாக மருத்துவமனைக்குக் கொண்டு வருவதுமாக ஓய்வின்றி பயணித்துக் கொண்டே இருக்கிறார் சஜிகுமார்.

நோயாளிகளுக்கு உதவிக்கு ஆட்கள் இல்லாவிட்டால் கூடவே இருந்து கவனித்துக் கொள்வதையும் ஒரு கடமையாகச் செய்கிறார் சஜிகுமார். இவர் தங்குவதும் தூங்குவதும் கூட இந்த ஆட்டோவில் தான். புற்றுநோய் மையத்தின் பின்பகுதியில் இருக்கும் குளத்தில் குளித்துவிட்டு நோயாளிகளுக்குச் சேவை செய்ய ஓடிவந்து விடுகிறார். மையத்தின் அருகேயே சாலையில் பயணிப்பவர்களுக்குப் பயன்படும் வகைகள் தண்ணீர்பந்தல் ஒன்றையும் அமைத்துக் கொடுத்திருக்கிறார். சவாரிக்கு நடுநடுவே தினசரி அதையும் பராமரித்து வருகிறார் சஜிகுமார்.

“மீன் தொட்டி, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொம்மைகள் ஆட்டோவின் முன்புறம் இருக்கிறதே அவையெல்லாம் எதற்காக?”என்று கேட்டால் சசிகுமார் கண்கள் கலங்கச் சொல்கிறார்…
“இருப்பதிலேயே கொடூரமான நோய் இந்தப் புற்றுநோய் தான். அதிலும் குழந்தைகளைப் புற்றுநோயாளியாகப் பார்க்கும்போது என் மனசு படும்பாடு இருக்கிறதே அதைச் சொல்லில் வடித்துவிட முடியாது‌. முழுக்க மொட்டைத் தலையோடு ஆட்டோவுக்குள் இருக்கும் அந்தக் குட்டிக் குழந்தைகள் வலியில் துடியாகத் துடிப்பார்கள். நான் இரண்டு குழந்தைகளுக்கு அப்பா. ஒரு தகப்பன் நிலையில் அந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது மனசு சுக்குநூறாக நொறுங்கிப் போய் விடும். ஏதோ என்னால் முடிந்த அளவுக்கு ஆட்டோவின் முன்புறம் விமானம்,கார்,ஹெலிகாப்டர் என்று நிறைய விளையாட்டுப் பொருட்களைக் கட்டித் தொங்க விட்டிருக்கிறேன். அதைப் பார்க்கும்போது குழந்தைகள் தங்கள் வலியை மறந்து சில நிமிடங்களுக்குக் கை கொட்டி சிரிப்பார்கள்… அது போதும்… எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத மகிழ்ச்சி அது”

குற்றவாளியாக இருந்தபோது ஒரு கொடுங்கோலனாக சஜிகுமாரைப் பார்த்த சமூகம், இப்போது அன்பும் கருணையும் மிக்க ஒரு மனிதனாக பார்க்கத் துவங்கி இருக்கிறது. எப்படியாவது யாருக்காவது உதவி செய்து சமுதாயத்தில் ஒரு அடையாளத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஆட்டோவில் சலிக்காமல் பயணித்துக் கொண்டே இருக்கிறார் சஜிகுமார். இவர் செய்கிற சேவையை கவனிக்கிற பணம் படைத்தவர்கள், சவாரி வரும்போது சவாரித் தொகையோடு 10,20,50,100 என்று பணம் சேர்த்துத் தருகிறார்கள். அதனால் பெரிய கைப் பிடித்தம் இல்லாமல் காலத்தை ஓட்டுகிறார் சஜிகுமார்.

ஒரு காலத்தில் துரத்தித் துரத்திப் பலரை அடித்திருக்கிறார் சஜிகுமார். அதற்குச் சமமாகத் திரும்ப அடியையும் வாங்கியிருக்கிறார். அதெல்லாம் சிறுசிறு வலிகள் தான். ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் துடிக்கிற வலியைப் பார்த்துவிட்டு அதெல்லாம் ஒரு வலியே இல்லை என்று இப்போது தோன்றி இருக்கிறது சஜிகுமாருக்கு.”மற்றவர்களோட வலியை உணர்ந்து அவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் எல்லோருமே உதவ வேண்டும்” என்று சொல்கிறார் சஜிகுமார்.

கடந்த காலங்களில் கசப்பான மனிதர்களாக நாமும் பலருக்கு இருந்திருப்போம்; ஆனால் நிகழ்காலத்தில் ஏதேனும் ஒரு வகையில் யாருக்காவது ஒரு சிறு உதவியாவது செய்து இனிப்பான மனிதர்களாக வாழப் பழகுவோம்!

பாண்டியன் சுந்தரம்