சிறுபான்மைக் கட்சிகளை பாதிக்கும் ஐ.தே.க வின் பலவீனம்!

download 20
download 20

ஐக்கிய தேசியக் கட்சியானது  இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் மிகப் பழைய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும்.  தற்போது ஆட்சி அமைக்கக்கூடிய நிலையிலுள்ள இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்று என்பதும் இந்தக் கட்சியின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாகும்.

பிரித்தானியாவிடமிருந்து 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் முதலாவது அரசை அமைத்ததும் இந்த ஐக்கிய தேசியக் கட்சியே ஆகும். மட்டுமல்லாது,  தற்போது வரையுள்ள வரலாற்றில் பல தடவைகள் ஐ.தே.க. ஆளும் கட்சியாக இருந்து நாட்டை நிருவகித்துள்ளது.

இக்கட்சியின் ஸ்தாபக தலைவராகவும், இலங்கையின் முதலாவது சுதந்திர அரசாங்கத்தின் பிரதமராகவும்  இருந்து வழிகாட்டிய டி. எஸ். சேனாநாயக்காவின் வழியில் உருவாகிய கட்சி என்பது இதன் தொன்மை வரலாற்றை எடுத்துக் காட்டுகின்றது.

கட்சியின் தற்போதைய தலைவராக  ரணில் விக்கிரமசிங்க காணப்படுகின்றார். இவரின் தலைமையின் கீழ் இக்கட்சி 2001 டிசம்பர் 9 ஆம் திகதி முதல் 06 ஏப்ரல் 2004 ஆம் ஆண்டு வரையில் ஒர் அரசாங்கத்தை வழிநடாத்தியது. இவர் அதில் பிரதமராக செயற்பட்டார்.

அதேபோன்று, கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதியும் இவரின் தலைமையில், ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் கூட்டணி அரசாங்கம் ஆட்சியமைத்தது. கடந்த 2019 நவம்பர் 9 ஆம் திகதி வரையில் இந்த அரசாங்கம் நாட்டை நிருவகித்தது.

ஐக்கிய தேசியக் கட்சியானது இந்நாட்டின் வரலாற்றில், ஆட்சியில் இல்லாத போது எதிர்க் கட்சியை அலங்கரித்த ஒரு கட்சியாகும். பலமான ஒரு எதிர்க் கட்சியாக இருந்து இந்த நாட்டின் அரசாங்கங்களின் தவறுகளை சுட்டிக்காட்டிய ஒரு கட்சியாகவும் இக்கட்சி காணப்பட்டது.

இவ்வாறு இந்த நாட்டின் அரசியலில் பெரும் செல்வாக்குச் செலுத்திய இக்கட்சிக்கு தற்பொழுது என்ன நடந்திருக்கின்றது என்பது எல்லோரிடத்திலும் எழுந்துள்ள ஒரு கேள்வியாகும்.

குறிப்பாக, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இக்கட்சி தலைமையிலான வேட்பாளருக்கு வாக்களித்த 55 லட்சத்து 64 ஆயிரத்து 239  வாக்காளர்கள் விடை தேடித் தவிக்கும் கேள்வியாகவும் இது காணப்படுகின்றது என்றால் அது மிகையாகாது.

கடந்த தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பதில் ஏற்பட்ட இழுபறி நிலைமையே தேர்தல் தோல்விக்கு காரணம் என தேர்தலின் பின்னர் அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்தனர். இந்த தோல்வியிலிருந்து படிப்பினைபெற இன்னும் தாமதிப்பதாகவே கட்சியின் நடைமுறை நிகழ்வுகள் காணப்படுகின்றன.

பொதுத் தேர்தலை இன்னும் ஓரிரு மாதங்களில் எதிர் நோக்கியுள்ள நிலையில், கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் தலைமைத்துவச் சண்டையானது, கட்சி குறித்த மக்களின் மனோ நிலையை மோசமானதாக மாற்றிக் கொண்டிருக்கின்றது.

ஜனாதிபதித் தேர்தல் தோல்வியை அடுத்து, கட்சிக்குள் தோல்வியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடக்கம் இன்று வரை பிரச்சினைக்குரிய ஒரு அரசியல் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி மாறிச் சென்று கொண்டிருக்கின்றது என்பது அதன் ஆதரவாளர்களை கவலைகொள்ளச் செய்துள்ளது.

இந்நிலை இவ்வாறு தொடர்ந்தால், அரசியல் களத்திலுள்ள ஒரு சிறிய கட்சியின் நிலைக்கு இக்கட்சி சென்றுவிடுமோ என்றும் சிந்திக்க களநிலைமை மக்களைத் தூண்டிக் கொண்டிருக்கின்றது.

‘‘எங்களுக்குள் சிறிய பிரச்சினைகள் தான் இருக்கின்றன. அது கட்சியை பலவீனப்படுத்தாது’’ என்று ஊடகங்களில் தோன்றும் கட்சியின் பின்னாசன பாராளுமன்ற உறுப்பினர்களும், அக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களும் கூறும் வார்த்தைகள், வெளிரங்கமாக காணும் கட்சியின் காட்சிகளின் முன்னால் காற்றோடு காற்றாக பறந்துவிடுகின்றது.

சஜித் பிரேமதாசவுக்கு தலைமைத்துவத்தை வழங்காதிருக்க தற்போதைய கட்சியின் தலைமை உட்பட சில சிரேஸ்ட உறுப்பினர்கள் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது என்ற செய்தியை ஒர் அரசியல் ஆய்வாளரால் கூறப்படாமலேயே  பொதுமகன் ஒவ்வொருவரும் விளக்கத்துக்கு எடுத்து முடிந்துவிட்டனர்.

இறுதியாக வெளியாகியுள்ள கட்சி வட்டார தகவல்களின்படி, ஐக்கிய தேசியக் கட்சியை தன்னிடம் வைத்துள்ள நிருவாகத்துக்கு பலமில்லாத  ஒரு நிலைமையையே எடுத்துக் காட்டுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்குமாறு தெரிவித்து அக்கட்சியின் 52 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது விருப்பத்தை கடந்த 16 ஆம் திகதி நடைபெற்ற ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தெரிவித்திருந்தனர்.

அன்றைய தினம் கூட்டத்துக்கு சமூகமளித்திருந்த 65 பாராளுமன்ற உறுப்பினர்களில் 52 பேர் சஜித்துக்கு தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என்ற கருத்தை எழுத்து மூலம் தெரிவித்திருந்ததாக சிரேஸ்ட உறுப்பினர் ரஞ்ஜித் மத்தும பண்டார ஊடகங்களிடம் கூறியிருந்தார்.

கட்சியிலுள்ள பெரும்பான்மையினரின் கருத்துக்கு மதிப்பளித்து, தேவையான நடவடிக்கைகளை கட்சியின் சட்டத்தின்படி மேற்கொள்ள மத்திய செயற்குழுவையும், கட்சி மாநாட்டையும் கூட்டுமாறும் மத்தும பண்டார எம்.பி. ஏனைய பாராளுமன்ற உறுபினர்கள் சார்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.

எனவே, கட்சியில் தற்போதுள்ள தலைமைக்கு அக்கட்சியிலுள்ள பெரும்பாலான எம்.பி.க்கள் தமது அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். இந்த தீர்மானத்தை மூடி மறைப்பதற்கும், இந்த தீர்மானத்திலிருந்து தப்புவதற்கும், பல்வேறு யோசனைகளை ஐக்கிய தேசியக் கட்சி நிருவாக பீடம் முன்வைத்தது.

இருப்பினும், அவற்றில் எந்தவொன்றும் செல்வாக்குப் பெறவில்லை. இறுதியாக வந்த தலைமைத்துவ சபை யோசனையும், கூட்டுத் தலைமைத்துவ சிந்தனையும் கூட தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது. கட்சியின் தலைமையை சஜித்துக்கு வழங்க வேண்டும் என்ற கோசமே உயர்ந்துள்ளது.

இதற்கு செவிசாய்க்காது, கட்சியின் தலைமைத்துவ பகிர்வை இன்னும் தாமதப்படுத்துவதானது எதிர்வரும் பொதுத் தேர்தல் களத்திலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பது மாத்திரம் தெளிவான ஒன்றாகும்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அஸ்கிரிய மகாநாயக்க தேரரைச் சந்தித்த போது, பாராளுமன்றத்தில் ஒரு பலமான எதிர்க் கட்சியாக செயற்பட வேண்டும் என்ற உபதேசத்தை கூறியிருந்தார்.

அடுத்த பொதுத் தேர்தலில் இப்போதுள்ள அரசாங்கத்துக்கு இலகுவாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெரும் விதத்திலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் உள்வீட்டுப் பிரச்சினை சென்றுகொண்டிருக்கின்றது.

தற்பொழுது பாராளுமன்றத்தில் பலமான எதிர்க் கட்சியாக  இருக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கூட்டணிக்கு மக்களின் பிரச்சினைகளை சரியாக அரசாங்கத்துக்கு எடுத்துக் கூற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

பொருட்களின் விலையேற்றம், மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து எதிர்க் கட்சியினால் எந்தவொரு பங்களிப்பையும் மக்கள் திருப்தியடையும் விதத்தில் வெளிப்படுத்த முடியாமல் போயுள்ளது என்றே கூறவேண்டும். அரசியல் கைதுகள் தொடர்பில் எதிர்க் கட்சி வெளிப்படுத்தும் அக்கரை, மக்களின் வாழ்க்கைப் பிரச்சினை விடயத்தில் போதியளவு காணப்படாதுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முகம்கொடுத்த தோல்வியிலிருந்து மீள்வதற்கு எடுத்த, எத்தனங்களை ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை எடுக்கத் தவறியுள்ளது என்பதே அரசியல் அவதானிகளின் கருத்தாகும்.

முன்னாள் ஜனாதிபதி தேர்தல் தோல்வியுடன் மக்கள் அலையை தன்பக்கம் தொடர்ந்தும் வைத்திருப்பதற்கான வேலைத்திட்டத்தை சிறந்த முறையில் முன்னெடுத்ததன் விளைவையே தற்பொழுது நடைமுறையில் காண்கின்றோம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவ்வாறானதொரு கடுமையான முயற்சியை விடாமல் முன்னெடுத்த போதும், அவரால் அரசாங்கத்தைக் கைப்பற்றுவதற்கு ஐந்து வருட அவகாசம் தேவைப்பட்டது. இதுதான் யதார்த்தம் என்பதை மக்கள் இலகுவில் புரிந்துகொள்வார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் தனது தலைமைத்துவப் பிரச்சினையை இழுத்தடிக்குமாக இருந்தால், அக்கட்சியின் பின்னால் வெளிச் சக்தியொன்று இருப்பதை உணர வெகு நேரம் எடுக்காது. ஒரு ஜனநாயக நாட்டின் லட்சணமாக பலமான எதிர்க் கட்சி கூறப்படுகின்றது. இதனால், எமது நாட்டின் அரசியல் எதிர்காலம் குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இரு குழுக்கள் இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பகிரங்கமாக பிரித்துப் பேசி வருகின்றார். எதிர்க் கட்சியைப் பலவீனப்படுத்துவது ஆளும் கட்சியின் வெற்றி என்பது அரசியல் யதார்த்தமாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை சஜித் பிரேமதாச சந்தித்து தனது பக்கம் ஆதவை பலப்படுத்தி வருகின்றார். இதேவேளை, சபாநாயகர் கரு ஜயசூரியவும், ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து கூட்டணி கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர்.

அடுத்த வாரத்துக்குள் தலைமைத்துவப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் 26 ஆம் திகதி எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் தேசிய மாநாடொன்றை நடாத்தவுள்ளதாக சஜித் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ கருத்து வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலிருந்து ரணில் விக்ரமசிங்க வெளியேற தயாராகவுள்ளதாகவும், அவரை வெளியேற விடாமல் சில உறுப்பினர்கள் தடையாக இருப்பதாகவும் அக்கட்சியின் பின்னாசன உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவம் தொடர்பில் 2022 ஆம் ஆண்டின் பின்னர் கருத்தில் கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் தெரிவித்ததாக ஹர்ச டி சில்வா எம்.பி. கடந்த 17 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

2025 இன் பின்னர் தான் தேர்தலில் போட்டியிடுவதில்லையெனவும் அவர் அறிவித்திருந்ததாகவும் ஹர்ச டி சில்வா மேலும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலைப்பாட்டில் தொடர்ந்தும் கட்சித் தலைமை பிடிவாதம் காட்டுமாக இருந்தால், அக்கட்சிக்குள் இரண்டாம் நிலைக் குழுவொன்று பகிரங்கமாக உருவாவதைத் தடுக்க முடியாது.

நாட்டின் பெரும் சக்தியாக வரலாறு நெடுகிலும் பிரகாசித்த ஐக்கிய தேசியக் கட்சி மூன்றாம் நிலைக்குத் தள்ளப்படும் என்ற அச்சம் பெரும்பான்மை கட்சி ஆதரவாளர்களிடையே மட்டுமல்ல, சிறுபான்மையினரிடையேயும் மேலெழுந்துள்ளது என்பது பகிரங்க இரகசியமாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கி பலவீனப்படுவது, ஆட்சியமைப்பதில் சிறுபான்மைக் கட்சிகளின் தேவையைப் பலவீனப்படுத்தும் என்பது  நடைமுறை அரசியலை சானக்கியத்துடன் நோக்கும் ஒருவரின் பார்வை என்றால் அது மிகையாகாது.

கஹட்டோவிட்ட முஹிடீன் M.A. (Cey)