காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை மூடுமாறு கோரி மட்டக்களப்பில் போராட்டம்!

omp2
omp2

மட்டக்களப்பில் திறக்கப்பட்டுள்ள காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தினை மூடுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் நேற்று (22) முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ முன்பாக காலை ஆரம்பமாகிய பேரணி, மட்டக்களப்பு நகர் ஊடாக சென்று மட்டக்களப்பில் திறக்கப்பட்டுள்ள காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை சென்றடைந்தது. அங்கு கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் மாநாடு ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கு கண்துடைப்பாகவே இந்த அலுவலகம் இரகசியமான முறையில் திறக்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.

யாருக்கும் அறிவிக்கப்படாமல், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்திற்கு அறிவிக்கப்படாமல், ஊடகங்களுக்கு அறிவிக்கப்படாமல் குறித்த அலுவலகம் இரகசியமான முறையில் திறக்கப்பட்டுள்ளமையானது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் இதன்போது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் குற்றஞ்சாட்டினர்.

இந்த போராட்டத்தில் வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பின் தலைவி யோகராஜா கனகரஞ்சினி, செயலாளர் லீலாதேவி அனந்தராஜா, மட்டக்களப்பு மாவட்ட தலைவி திருமதி அமலதாஸ் அமலநாயகி உட்பட பலர் கலந்துகொண்டனர்.