அவதூறும் வர்க்கபேதமும்தான் உங்கள் ஆயுதங்களா? – சிறீதரனுக்கு மீண்டுமொரு மடல்

shritharan Ranil
shritharan Ranil

கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கு!

‘பிரதேசவாத சாதி அரசியலை நிறுத்துங்கள்!’ என்ற தலைப்பில் தமிழ்க் குரல் ஊடகம் அண்மையில் உங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தது.

கிளிநொச்சியில் இடம்பெற்ற இரணைமடு 100 பானை பொங்கல் நிகழ்வில் தாங்கள் கலந்துகொண்ட போது, தமிழ்க் குரல் ஊடகம் தனது கடிதத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரியிருந்த நிலையில் இம் மறுமடலை எழுதுகிறோம். அத்துடன் தமிழ்க் குரல் மீது நீங்கள் கொட்டிய வன்மத்திற்கும் பதிலளிக்கவேண்டிய கடப்பாடு எமக்கு  உள்ளது.

தமிழ்க் குரல் அறிமுக நிகழ்வின்போது தாங்கள் தொடுத்த அவதூறுத் தாக்குதல்களை, சேறுபூசல்களை நினைவு படுத்துகிறோம். கிழக்கு மாகாணத்திலிருந்து தமிழ்க் குரலின் அறிமுக நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்ள கிளிநொச்சி வந்த  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரை எமது நிகழ்வில் கலந்துகொள்ளவிடாமல் தடுத்தீர்கள். தங்களின் ஆணைக்கு இணங்க செயற்படும் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன் மூலமாக , தமிழ்க் குரலை கோட்டாபயவின் ஊடகம் என்று  சொல்ல வைத்தீர்கள். மற்றொருவரான பளை தவிசாளர் சுரேன் ஊடாக, சுமந்திரனை கொலை செய்ய முற்பட்டவர்களால் நடாத்தப்படும்  ஊடகம் என்று சொல்ல வைத்தீர்கள். அதையும் தாண்டி தங்களால் நடாத்தப்படும் ஒரு ஊடகத்தில் எம்மீது அவதூறுகளை அள்ளித் தெளித்தீர்கள். தற்போது தாங்கள் பகிரங்கமாக, அரச தலைவரின் ஊதுகுழல் ஊடகம் என்று அவதூறை கண்ணை மூடிக்கொண்டு அள்ளி வீசியுள்ளீர்கள்.

தமிழ்க் குரல் மீதான அவதூறுகளை நாம் பொருட்படுத்தப் போவதில்லை. ஏனெனில் அவதூறும் வர்க்க பேதமும்தான் உங்கள் அரசியலின் ஆயுதங்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறீர்கள். அத்துடன் இரணைமடு நிகழ்வில், சாதியும் பிரதேசவாதமும்தான் உங்கள் அரசியல் என பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளீர்கள். அதனை நிறுத்த வேண்டும் என்பதற்காக தமிழ்க் குரல் உங்களுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்த அதே மேடையில், மீண்டும் தாங்கள் பிரதேசவாத சாதி அரசியலை பேசியது மக்களுக்கு இன்னும் அதிர்ச்சியானது.  

‘நான் யாழ்ப்பாணத்தவன்’ என்றும் கிளிநொச்சியில் இருப்பவர்களில் 80 வீதமானவர்கள் யாழ்ப்பாணத்தவர்கள் ஏனையவர்கள்  கப்பலில் வந்து குடியேறியவர்கள் மற்றும் நேரடியாக இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்று மீண்டும் நீங்கள் வேறுபாடுகளை தூண்டி பேசியிருப்பதே உங்களின் ஒப்புதல் வாக்குமூலமாகும்.

அது மாத்திரமல்ல, நான் யாழ்ப்பாணத்தவன் என்று பகிரங்கமாக சொல்லியிருப்பதன் மூலம், கிளிநொச்சி மக்களால், உங்கள் சாதிய பிரதேசவாத குறுகிய அரசியல் காரணமாக கைவிடப்பட்ட தாங்கள்,  தற்போது அதே பிரதேசவாதத்தைப் பேசி, யாழ்ப்பாண மக்களையும் அதே வலைக்குள் வீழ்த்தி வாக்குகளை அள்ள முயல்வதும் தெளிவாகிற்று. 

தமிழர்கள் என்று ஒன்றுபட வேண்டிய நேரத்தில் யாழ்ப்பாணத்தான், கப்பலால் வந்தவன், இந்தியாவிலிருந்து வந்தவன் என்று பிரிவினைகளை விதைக்கும் விதமாக நீங்கள் பேசியது சரியா? இது  நமது இனத்தை சிதைக்கும் செயலல்லவா?

யாழ்ப்பாணத்தில் கிளிநொச்சியில் இருப்பவர்களில் 80 வீதமானவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களே, ஏனையவர்கள் கப்பலில் வந்து குடியேறினார்கள் என்ற புள்ளிவிபரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது? தமிழர்கள் ஒன்றுபட்டிருந்த மண்ணில், தொடர்ந்தும் ஒன்றுபட்டு பயணிக்க வேண்டிய நேரத்தில் இத்தகைய புள்ளிவிவரங்கள் அவசியம்தானா?

உங்களை நோக்கி விமர்சனங்களை முன் வைப்பவர்களையும் கேள்விகளை எழுப்புவர்களையும் கோட்டாபய  ராஜபக்சவின் கைக்கூலிகள் என்று கூறுகிறீர்கள். அவர்கள்தான் சாதிய பிரதேசவாத வேறுபாடுகளை தூண்டுவதாகவும் கூறுகிறீர்கள். அதே மேடையில் சாதியம் பிரதேசவாதம் பேசிய தாங்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நிகழ்ச்சி நிரலில் செயற்படுகிறீர்கள் என்று நாம் எடுத்துக்கொள்ளலாமா?

இம்மடலுக்கான பதில் விளக்கத்தை அளிக்கும் பட்சத்தில் அதனை வெளியிடவும் சித்தமாயுள்ளோம். அத்துடன் உங்களைப் போன்றவர்களின் அவதூறு தாக்குதல்கள் உள்ளிட்ட நெருக்கடிகளை, படிக்கற்களாக கொண்டு  தமிழ்க்குரல் மக்களின் குரலாகத் தொடர்ந்து ஒலிக்கும் என்பதையும் தங்களுக்கு நினைவுபடுத்தி இம்மடலை நிறைவு செய்கிறோம்.

நன்றி

தமிழ்க் குரல்.

23.01.2020