விமலின் இனவாதச் செயற்பாடு – தமிழ் மக்கள் கூட்டணி கண்டனம்

arunthavapalan
arunthavapalan

அமைச்சர் விமல் வீரவன்சவின் பணிப்புக்கமைய, மன்னாரில் கைத்தொழிற்சாலை ஒன்றில் தமிழுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகை அகற்றப்பட்டு சிங்களத்திற்கு முன்னுரிமை அளித்த பெயர்ப்பலகை பொருத்தப்பட்டமையை தமிழ் மக்கள் கூட்டணி கண்டித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை பரப்புச் செயலாளர் க.அருந்தவபாலன் தெரிவித்ததாவது,

“அண்மையில் மன்னாரில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் அங்கே பெயர்ப்பலகை தமிழில் இருந்து சிங்களத்திற்கு மாற்றப்பட்டதை நாங்கள் அவதானிக்கின்றோம். பொதுவாகவே வடக்கு பிரதேசத்தில் அல்லது தமிழ்ப் பகுதிகளில் தமிழிற்கே முன்னுரிமை கொடுக்கின்ற ஒரு செயற்பாடே இருந்து வந்தது.

அவ்வாறான ஒரு நிலையில் தான் அந்தப் பெயர்ப்பலகை உருவாக்கப்பட்டிருந்தது. அதைச் சகிக்க முடியாத விமல் வீரவன்ச உடனடியாகவே அதை மாற்றுமாறு பணித்து அடுத்த நாளே அது சிங்களமாக மாற்றப்பட்டது. உண்மையில் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் வருத்தமளிக்கின்ற நிகழ்வாகவே உள்ளது.

குறிப்பாக இங்கே பெயர்ப்பலகை அல்ல முக்கியம். ஆனால் உண்மையில் பெயர்ப்பலகையில் கூட தமிழிற்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாத இனவாத ஆட்சி இங்கே இருக்கின்றது என்பது தான் இதனூடான வெளிப்பாடாக இருக்கின்றது.

இந்த சிறிய விடயம் எங்களுடைய எல்லா விடயங்களுக்கும் ஒரு எடுத்தக்காட்டாக இருப்பதை நாங்கள் பார்க்கின்றோம். எனவே இத்தகைய செயற்பாடுகளை எங்களுடைய கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது. இந்த இடத்தில் எமது கட்சி தனது எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கின்றது.” என்றார்.