தமிழரசுக் கட்சியை ஆட்டிப்படைக்கும் கனடாக் கிளை!

Ilankai Tamil Arasu Kadchi
Ilankai Tamil Arasu Kadchi

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்து செயற்பாடுகளையும் கட்டுப்படுத்தும் ரிமோட்கொண்ட்ரோலாக செயற்படுவது கனடாக் கிளைதான்.

இவர்களின் கட்டுப்பாட்டிலேயே ஒட்டுமொத்த தமிழரசுக் கட்சியும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உள்ளது.

காரணம் பெரிதாக ஒன்றுமில்லை எல்லாம் பாடாய்ப்படுத்தும் பணமும் – அதிகாரமும்தான்.

அரசியலில் சிலர் களமிறங்குவதே தங்களிடம் கொட்டிக்கிடக்கும் பணத்தைப் பாதுகாக்கத்தான்.

ஆனால், அவர்கள் கூட தேர்தலில் தங்களுக்காப் பணத்தைச் செலவு செய்யக் கொஞ்சம் கஞ்சத்தனம் காட்டியே ஆவார்கள்.

காரணம் பெருந்தொகைப் பணத்தை வெற்றிக்காகக் கொட்டிக் கொடுக்க வேண்டிய தேவை உண்டு.

இதனால், அவர்களுக்குப் பதிலாக வேறு ஒருவர் பணம் செலவழிக்க மாட்டார்களா எனத் திரிவார்கள்.

பதவி – அதிகாரம் கிடைத்ததும் அவ்வாறு பணம் செலவழிப்பவர்களுக்கு என்ன சகாயம் தேவையோ அவற்றையெல்லாம் நிறைவேற்றிக் கொடுப்பார்கள் அரசியல்வாதிகள்.

இது நம் நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் கூட இதுதான் எழுதப்படாத – வெளித்தெரியாத நியதி.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெரும் பணத்தேவையை நிறைவேற்றுவது அதன் கனடாக் கிளைதான்.

இதற்காகப் பல கோடி ரூபாய்களை அக்கிளை கொட்டிக் கொடுக்கிறது.

இதனால், தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் அனைத்தையும் அவர்களே கட்டுப்படுத்தி வருகிறார்கள்.

இன்று மக்களாலும் – கட்சியினராலும் பெரிதும் விமர்சிக்கப்படும் சுமந்திரன் எம்.பியின் காய் நகர்த்தல்கள் எல்லாமே இவர்களின் வழியிலேயே இருக்கிறது.

இதனால்தான் கட்சியினரால் அவரை எதுவுமே செய்ய முடியவில்லை.

அண்மையில்கூட திருகோணமலை நகர மண்டபத்தில் கனடா கிளையினர் நடத்திய பொங்கல் திருவிழாவில் யாழ்ப்பாண மாநகர மேயர் கலந்து கொண்டிருந்தார்.

இதற்குப் பின்னணியாக அமைந்தவர் சுமந்திரன் எம்.பி., ஆர்னோல்ட் இந்தப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டதற்குப் பிரதான காரணம் கனடாக் கிளையின் ஆசியைப் பெறுவதுதான்.

அவர்களின் ஆசியைப் பெற்றால்தான் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் குதிக்க அவர்களின் சம்மதம் கிடைக்கும் என்பதுதான் காரணம்.

கனடாக் கிளையின் கடைக்கண் பார்வை கிடைத்தாலே போதும், அனைத்தும் சுபமே முடிந்து விடும்.

இதனால்தான் அவரின் சொந்தக் கட்சியினர் அதேநாளில், யாழ். மாநகர எல்லைக்குள் நடத்திய பொங்கல் விழாவைப் புறக்கணித்து திருகோணமலைப் பொங்கலில் பங்கேற்கக் காரணம்.

இந்நிலையில், மாவை சேனாதிராஜாவின் தீவிர ஆதரவாளர் அகிலனின் நிதிப் பங்களிப்பில் நடத்தப்பட்டு வந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான புதிய சுதந்திரன் பத்திரிகையில் களையெடுப்பையும் கனடாக் கிளையினர் செய்துள்ளார்கள். இதன் ஆசிரியராக செயற்பட்டவர், வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் ஹரிகரன் என்பவர். இவர் மாவை. சேனாதிராஜா மற்றும் சுமந்திரனின் ஆதரவாளர்.

இந்நிலையில் இவரைப் பத்திரிகையில் இருந்து விடுவித்து, சுமந்திரனின் தீவிர ஆதரவாளர்களும் யாழ். மாநகரசபை உறுப்பினர்களுமான அருட்குமரன், லோகதயாளன் ஆகியோரை முக்கிய பொறுப்பில் அமர வைத்துள்ளது.  இவர்கள் இருவருமே சுமந்திரன் மற்றும் அவரின் ஆதரவாளரான சீ.வீ.கே. சிவஞானத்தின் ஆதரவில் அரசியலுக்குள் நுழைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவை. சேனாதிராஜாவின் ஆதரவாளரான அகிலனிடம் இருந்து பத்திரிகையைக் கைப்பற்றிய கனடாக் கிளை மாதாந்தம் சில இலட்ச ரூபாய்களை அனுப்பி வருகிறது.

இதனால், தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையும் முழுமையாக கனடாக் கிளையினரின் – சுமந்திரனின் ஆதரவுத் தளத்துக்குள் முழுமையாக வந்து விட்டது. இந்நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரனின் பலத்தை மேலும் அதிகரிக்கக் கனடாக் கிளையினர் கடைக்கண் காட்டியுள்ளனர்.

இதனால், அவர் தலைமையிலான அணியினரைக் கட்சிக்குள் வளர்ப்பதற்குப் பல கோடிகளைக் கொட்டிக் கொடுத்து வருகின்றது.  

இப்போது, அவர்களுக்கு சிக்கல் கனடாக் கிளையின் நிதியை மட்டுமே நம்பியிருக்காத சரவணபவன் எம்.பி. போன்றவர்கள்தான்.

தன்னிடம் கொட்டிக் கிடக்கும் செல்வத்தை காப்பாற்ற அரசியலுக்குள் நுழைந்தவர் சரவணபவன் எம்.பி. அவரிடம் கொட்டிக்கிடக்கும் பணம் – ஊடக பலம் என்பவற்றைப் பார்த்து அஞ்சிய கனடாக் கிளை இப்போது துணிந்து காரியங்களில் இறங்கிவிட்டது.

இதற்குப் பிரதான காரணம் அவரது ஊடக பலம் வடக்கில் மக்கள் செல்வாக்கை இழந்ததும், கொழும்பில் இருந்த ஊடக பலம் முற்றாக உடைக்கப்பட்டதும்தான்.

இதனால்தான் இப்போது காய்களை நகர்த்தி சரவணபவன் எம்.பியை அகற்றி விட்டுத் தங்களுக்குத் தேவையானவரை – வேண்டியவரை பதவிக்கு வரவைக்கும் தந்திரத்தை செய்து வருகிறார்கள்.

இவர்களின் தந்திரம் பலிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.