முதலாவது கொரோனா வைரஸ் நோயாளி அவுஸ்ரேலிய வைத்தியசாலையில் சேர்ப்பு!

corono virus
corono virus

அவுஸ்ரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதல் நபர் விக்டோரியாவில் இனங்காணப்பட்டுள்ளார்.

கடந்த 19ம் நாள் சீனாவின் வுகான் பகுதியிலிருந்து வந்த சீன நபர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை மருத்துவ பரிசோதனை மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக விக்டோரிய சுகாதார அமைச்சர் ஜென்னி மிக்காகோஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த நோயாளி தனிமைப்படுத்தப்பட்டு தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுவதாகவும் பொதுமக்கள் இந்நோய்த்தொற்று குறித்து அச்சமடையத் தேவையில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த நபர் பயணம் செய்த விமானத்தில் வந்த அனைத்துப் பயணிகளுக்கும் தத்தம் உடல்நலம் குறித்தும் நோய் அறிகுறிகள் குறித்தும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சில வருடங்களுக்கு முன் பெருமளவில் பரவி பாதிப்பை உண்டாக்கிய சார்ஸ் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த இந்த கொரோனா வைரஸ், சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்குப் பரவி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 41 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.