இந்த ஆண்டில் 153 ஆயிரம் பேருக்கு அரச தொழில் வாய்ப்பு !

5 pan 1
5 pan 1

2020 ஆம் ஆண்டில் 1 இலட்சத்து 53 ஆயிரம் பேருக்கு அரச தொழில் வாய்ப்பை அரசாங்கம் வழங்கவுள்ளது.

இந்த வருடத்தில் தரம் எட்டில் சித்தி எய்திய 1 இலட்சம் பேரும், 53 ஆயிரம் பட்டதாரிகளும் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவிருப்பதாக தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

இவர்களுக்கு 6 மாத தலைமைத்துவ பயிற்சியுடன் தொழில்துறை பயிற்சியும் வழங்கப்படவுள்ளது என்று தெரிவித்தார்.

சமுத்தி நிவாரணங்களைப் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அல்லது வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்த தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளன.

தரம் எட்டில் சித்தி எய்தியவர்களுக்கு சுமார் 25,000 ரூபாவிற்கு மேற்பட்ட தொகை ஆரம்பகால கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது.

பட்டதாரிகளுக்கான ஆரம்ப கொடுப்பனவு குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

2018 ஆம் ஆண்டு புள்ளிவிபரத்துக்கு அமைவாக இலங்கை அரச சேவையில் 1.41 மில்லியன் பேர் பணியாற்றுகின்றனர்.

இந்த செய்தியாளர்களுடனான சந்திப்பில் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவெவவும் கலந்துகொண்டார்.