சர்வதேசத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே ஈழத்தமிழர் தீர்வை பெற முடியும் – க.வி.விக்னேஸ்வரன்

1 ad 1
1 ad 1

இலங்கையில் போர்க்காலத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பில் சர்வதேசம் அறியாதுள்ளது. ஆகையினால் இது தொடர்பில் சர்வதேசத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே ஈழத்தமிழர்களிற்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்க்குரலின் அறிவாயுதம் நிகழ்ச்சிக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் பயங்கரவாதத்தை அழிப்பதாக நினைத்து 22 நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு இராணுவ உதவி வழங்கியிருந்தது. அவ் யுத்தத்தின் போது இலங்கையில் பயங்கரவாதத்தினை அழிப்பதாக நினைத்து மக்களது உரிமைகளை வழங்காது அவர்களை படுகொலை செய்திருந்தனர்.

சர்வதேசத்தினைப் பொறுத்த மட்டில் இலங்கையில் பயங்கரவாதத்தினை அழிப்பதாக மாத்திரமே தெரிந்திருந்தது. அரசாங்கமும் அவ்வாறான பிழையான விடயங்களையே சர்வதேச சமூகத்திற்கு தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றது.

அண்மையில் இந்தியாவிற்கு சென்றிருந்த போது அஹமதாபாத்தின் குஜராத் மாநிலத்தில் உள்ள சட்த்தரணிகளை சந்தித்திருந்த போது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவு போன்ற நாடுகளின் விவகாரங்கள் தொடர்பில் அறிந்திருந்த போதும் இலங்கையை பொறுத்த மட்டில் பயங்கரவாதத்தினை மாத்திரம் அழிப்பதாகவே  நினைத்திருந்தோம் என தெரிவித்திருந்தார்கள்.

இந்நிலையில் தான் இது குறித்து தெரியப்படுத்தியதனையடுத்தே இலங்கையில் இவ்வாறான பிரச்சினை தொடர்வதை தெரிந்துகொள்ள முடிவதாக தெரிவித்திருந்தார்கள்.

எனவே வட மாநிலங்களில் இலங்கையின் பிரச்சினை தொடர்பில் தெளிவுபடுத்தி ஏனைய மாநிலங்களில் உள்ள சட்டத்தரணிகள் அனைவரையும் இணைத்து விழிப்புணர்வினை ஏற்படுத்தி அதனை இந்திய நாடாளுமன்றிற்கு கொண்டு சென்று தீர்வினைப் பெற வழிவகை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

நான் பதவியில் இல்லாதவன் என்பதன் காரணமாக நாடாளுமன்றில் உள்ள வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் இது தொடர்பில் ஐ.நா இற்கு தெரியப்படுத்த வேண்டும்.

போர்க்குற்றங்களின் போது நடந்த உண்மை, வட மாகாண சபையில் இன அழிப்பு தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் தெரியப்படுத்த வேண்டும்.

எனவே எமது பிரச்சினை தொடர்பில் உலகம் அறியாதுள்ள நிலையில் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அரசாங்கத்திற்கு இரண்டு வருட கால அவகாசம் பெற்றுக்கொடுக்காது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு கொண்டு செல்வது தொடர்பில் வலியுறுத்துமாறு கேட்டுக்கொண்டார்.