அனாதரவாக்கப்பட்ட 70 வயது முதியவர் – தமிழர் பிரதேசத்தில் தொடரும் அவலம்!

Untitled 8
Untitled 8

6 பிள்ளைகள் இருந்தும் விரக்தியால் வீட்டைவிட்டு வெளியேறிய 70 வயது முதியவர் ஒருவருக்கு இளம் யுவதி ஒருவர், அவருக்கு தகுந்த இடத்தில் அடைக்கலம் கொடுத்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று பரந்தனில் இடம்பெற்றுள்ளது.

முகநூல் வாசி ஒருவர் பதிவிட்ட சம்பவம் இது….

அன்று போல் இன்றும் விடிந்தது…. எனது முகநூல் நண்பர் ஒருவரின் பதிவின் ஊடாக, பரந்தன் பஸ்தரிப்பு நிலையத்தில் மூன்று நான்கு தினங்களாக ஒரு வயோதிபத் தந்தை ஒருவர் போகுமிடமற்று தவிப்பதை அறிந்து அவரை பார்ப்பதற்காக நேரில் சென்றேன்.

அவருடன் உரையாடி அவர் பற்றிய விபரங்களை கேட்டறிந்தேன். இதன்போது அவரது பெயர் வேலுப்பிள்ளை சத்திய மூர்த்தி என்றும், வயது 70, என்பதுடன் 6ம் வட்டாரம் குமுளமுனை மத்தியில் வசித்து வந்ததாகவும் அவர் கூறினார்.

அவர் வீட்டில் இருக்க மனமின்றி விரக்தியால் விட்டை விட்டு வெளியேறி வந்ததாகவும், தனக்கு 3 பெண் பிள்ளைகள், 3 ஆண் பிள்ளைகள் இருப்பதாகவும் கூறினார். அத்துடன்

மனைவி பிள்ளைகள் தன்னை பார்க்க முடியாது என சிறு கடிதமும் எழுதித் தந்ததாகவும் கூறினார். (கடிதம் பதிவில் சேர்த்துள்ளேன்)

இந்நிலையில் அவர் கோலம் இரக்கமும் மனித நேயமும் உள்ள மனிதனாக பிறந்த எவரையும் கலங்கச் செய்யும் வகையில் அமைந்திருந்தது. நீண்ட தாடியோடு நடக்க இயலாத நிலையில் இருந்தார்.

இந்நிலையில் எனது சிறிய கலந்துரையாடலின் பிறகு அவர் முதியோர் இல்லத்தில் சேர்வதற்கு பூரண சம்மதம் தெரிவித்ததை அடுத்து அவருக்கான எனது கடமைகள் சிலவற்றை செய்து கொடுத்து விட்டு தலைமுடி வெட்டி, புத்தாடை வாங்கி அணிவித்து, முதியோர் இல்லத்திலும் தொடர்பு கொண்டு அவர்களின் சம்மதம் பெற்று, எனது அண்ணா ஒருவரின் உதவியோடு கிளிநொச்சி மலையாளபுரத்தில் இருக்கின்ற SK முதியோர் இல்லத்தில் அவரை கொண்டு போய் சேர்த்தேன்.

என் தந்தைமேல் நான் எவ்வளவு பாசமோ அப்படியே அந்த முதியவரை நான் நோக்கினேன்.

அந்த முதியோர் இல்லத்தில் அவருக்கான சகல வசதிகளும் உண்டு. அதன்பின்னர் அவரிடம் நீங்கள் சந்தோசமாக இருங்கள் நான் உங்களை அடிக்கடி பார்க்க வருவேன் என்றும் நான் ஒரு பிள்ளையாய் உங்களுக்கு ஆறுதலாய் இருப்பேன் என்றும் அந்த தந்தையிடம் கூறி விட்டு வந்து விட்டேன்.

அங்கு அவர் விழிகளில் ஒளியது கண்டேன். ஆனால் என் விழிகள் குளமாகின. அது தனித்து, தவித்திருந்தவரை கரை சேர்த்த மன நிறைவா? அல்லது தவிக்க விட்டவர்கள் மீதான மன உறுத்தலா? புரியவில்லை. ஆனாலும் ஒரு மகளாய் என்னால் முடிந்ததை செய்திட்ட மன நிறைவு எனக்கு திருப்தியை தந்தது.

“மானிடராய் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும் என்பார்கள்”

அத்தகைய மனிதப்பிறவியை தந்த நம் தாய் தந்தையரை கவனிப்பாரற்று தெருவில் விடுவது மகாபாதாக செயல். இந்நிலையில் அன்பான உறவுகளிடம் ஒரு வேண்டுகோள்,

இவ்வாறான இடங்களில் இத்தகைய முதியோர்களை கண்டால் கண்டும் காணாதது போல் கடந்து சென்று விடாதீர்கள். அவ்வேளை உங்கள் தாய் தந்தையரை மனக்கண் முன் கொண்டு வாருங்கள். உங்களால் முடிந்த உதவியை அவர்களுக்கு செய்யுங்கள்.

நம்மை கைபிடித்து வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை ஒருபோதும் நடுத்தெருவுக்கு அனுப்பாதீர்கள். அது தமிழினத்திற்கு அழகு அல்ல..