மட்டு அரசாங்க அதிபர் ஓய்வு குறித்து அமைச்சரவைக்கு விண்ணப்பம்!

m.uthayakumar
m.uthayakumar

கட்டாய ஓய்வு தினத்திற்கு முன்னதாக தனது ஓய்வு குறித்து அமைச்சரவைக்கு விண்ணப்பித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த இரண்டு ஆண்டுகளாக மாவட்ட அரசாங்க அதிபராக கடமையினை சிறப்பாக செய்வதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. தற்போது தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒய்வு பெறவுள்ளேன்.

மாவட்ட நிருவாகத்தை கவனிப்பதற்காக அரச உள்நாட்டு மாகாண உள்ளுராட்சி அமைச்சால் இலங்கை நிருவாக சேவையில் அதியுயர் தரத்தைச் சேர்ந்த நேர்மை, திறமை படைத்தவர்கள் இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுகின்றார்கள்.

இந்தப் பதவிக்கான உத்தியோகத்தர்களைத் தெரிவு செய்வதற்கு அரசிடம் பேரம் பேசுவதாகவும், பதவியினை இராஜினாமா செய்யப்போவதாகவும், மிரட்டுவதனையும் அறிந்து வேதனையடைகின்றேன்.

நேற்றைய தினம் (24) அமைச்சரவையால் புதிதாக ஒரு மாவட்ட அரசாங்க அதிபர் நியமிக்கப்பட்டிருக்கிறார் என அறியமுடிகிறது. எனினும் இது தொடர்பாக உத்தியோகபூர்வ தகவல் ஏதும் அறிவிக்கப்படவில்லை. எவ்வாறாயினும் எனது சார்பாக நான் அன்புடன் வரவேற்கின்றேன்.

எவ்வாறாயினும் இலங்கை நிருவாக சேவையில் இருந்து ஒய்வு பெறுவதற்கு வெறுமனே 10 மாதப்பிகளும் 18 நாட்களுமே உள்ள நிலையில் எதுவித குற்றங்களும் இளைக்காமல், எதுவித விசாரணைகளுக்கு உட்படுத்தப்படாமல், கடந்த 21 வருடங்களுக்கு மேலாக இச் சேவையில் உள்ள என்னை, எதுவித விசாரணையோ முன்னறிவித்தலோ இன்றி இடமாற்றம் வழங்கப்படவுள்ளமையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே எனது கட்டாய ஒய்வு தினமான 21.12.2020 முன்னதாக சுய விருப்பிற்கான ஓய்விற்காக அமைச்சரவைக்கு விண்ணப்பித்துள்ளேன்” என தெரிவித்தார்.