தமிழர் பகுதிகளில் திருட்டில் ஈடுபட்டு வந்த மூன்று பெண்கள் கைது

thief
thief

வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மூன்று பெண்கள் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியிலுள்ள சதொச விற்பனை நிலையத்தில் நேற்று முன்தினம் மதியம் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக சென்ற பெண்கள் தாம் அணிந்திருந்த ஆடைக்குள் இன்னுமொரு ஆடை அணிந்து அவ் ஆடைக்குள் பொருட்களை திருடி சென்றுள்ளனர்.

இந்நிலையில் சந்தேகமடைந்த சதோச பணியாளர் சீ.சீ.ரி.வீ வீடியோவை பார்வையிட்ட போது குறித்த பெண்கள் பொருட்களை திருடிச்சென்றது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸில் முறைப்பாடு செய்ததற்கமைய சீ.சீ.ரி.வி உதவியுடன் மூன்று பெண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதானவர்கள் கொழும்பு, பாணந்துறையை சேர்ந்த 22,45,62 வயதுடையவர்களென்றும் திருடப்பட்டவை 35000 ரூபா பெறுமதியான பொருட்களெனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த பெண்கள் வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் முன்னர் திருடியுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் குறித்த பெண்களை வவுனியா நீீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.