யாழ் ரில்கோவில் இடம்பெற்ற இந்திய குடியரசு தின கொண்டாட்டங்கள்

AU7A0116
AU7A0116

இந்தியாவின் 71வது குடியரசு தினம் இன்று (26) காலை யாழ் இந்திய துணைத் தூதரகத்திலும் அதனையடுத்து முற்பகல் ரில்கோ விடுதியிலும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

முன்னதாக இந்தியத் துணைத் தூதுவர் பலாலியில் அமைந்துள்ள
இந்திய அமைதிப்படையின் தன்னுயிரை தியாகம் செய்தவர்களின் நினைவாலயத்தில் யாழ் கட்டளைத் தளபதி ருவான்
வணிக சூரியவுடன் இணைந்து மலர் அஞ்சலி செலுத்தினார்.

இதன் காலை நிகழ்வுகள் 9 மணிக்கு யாழ் இந்தியத் துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

இந்திய நாட்டுப்பண் பாடப்பட்டதைத் தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்ட குடியரசு நாள் வாழ்த்துச் செய்தி இந்திய துணைத் தூதுவரால் வாசிக்கப்பட்டது.

இதனையடுத்து வரவேற்பு நிகழ்வுகள் முற்பகல் 10 மணிக்கு ரில்கோ விடுதியிலும் ஆரம்பிக்கப்பட்டது.

நிகழ்வில் இந்திய துணைத் தூதுவரின் வரவேற்பு உரை இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து வருகை தந்த ஸ்ரீமதி யோகவந்தனா குழுவினரின் வீணை இசைக் கச்சேரியும் ஜெயஸ்ரீ குழுவினரின் கதக் நடனமும் அரங்கேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் பாசையூர் சென் அன்ரனிஸ் கலைக்கழகத்தினரின் வீரபாண்டிய கட்ட பொம்மன் நாட்டுக்கூத்தும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுனர் திருமதி சார்ள்ஸ், வடமாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே சிவஞானம், யாழ் மாநகரசபை முதல்வர் ஆர்னோல்ட், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர், முப்படைகளின் அதிகாரிகள், காவல் அதிகாரிகள், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள், இராஜதந்திர குழுக்களின் உறுப்பினர்கள், யாழ் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி, பல்கலைக்கழக பேராசிரியர்கள், அரசியல் தலைவர்கள், இந்திய குடிமக்கள், தூதரக அலுவலர்கள் மற்றும் இந்திய வம்சாவழியினர், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.