மட்டக்களப்பில் 8 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்படவுள்ளது!

national school 2
national school 2

மட்டக்களப்பு மாவட்டத்தில் எட்டு பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தரமுயர்த்தப்படவுள்ள பாடசாலைகளை தெரிவுசெய்யும் வகையிலான விசேட கூட்டம் இன்று (29) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14பிரதேச செயலாளர் பிரிவுகள் இருக்கின்றன, குறிப்பாக முஸ்லிம் மாணவர்கள் கற்கும் பாடசாலைகளில் 6 தேசிய பாடசாலைகள் இருக்கின்றன, 75வீத தமிழ் மக்கள் வசிக்கின்ற மட்டக்களப்பில் தமிழ் மாணவர்கள் கற்கும் பாடசாலைகளில் 7தேசிய பாடசாலைகள்தான் இருக்கின்றன.

ஜனாதிபதி அவர்களின் நாட்டை மதியால் அழகுபடுத்துவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கையின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் குறைந்தது ஒரு தேசிய பாடசாலையாவது உருவாக்க வேண்டும் என்ற தொனிப்பொருளிற்கு அமைய நாட்டின் கல்வி அமைச்சர் டளஸ் அழகபெரும அவர்கள் எனக்கொரு கடிதத்தை கையளித்திருக்கின்றார்.

புதிய அரசாங்கத்திடம் வைத்த வேண்டுகோளிற்கு அமையவும் அரசாங்கத்தின் புதிய திட்டத்திற்கு அமையவும் எங்களின் வேண்டுகோளிற்கமையவும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 8 தேசிய பாடசாலைகள் கிடைத்திருக்கின்றன.

அந்த வகையில்

1.வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குள் கதிரவெளி மகாவித்தியாலயம்
2.கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குள் கிரான் மகாவித்தியாலயம்
3.ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குள் செங்கலடி மத்திய கல்லூரி
4.பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குள் ஒரு பாடசாலை
5.வவுனதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குள் ஒரு பாடசாலை
6.பட்டிருப்பு கல்வி வலயத்திற்குள் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குள் ஒரு பாடசாலை
7.மண்முனைப்பற்றில் ஆரையம்பதி மகா வித்தியாலயம்
8.வவுணதீவில் கன்னங்குடா மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் இந்த எண்ணக்கருவை நடைமுறைப்படுத்துவதற்கு வருகின்ற இரண்டாம் மாதம் 4ம் திகதிக்கு முன்னர் கல்வி அமைச்சிடம் இதனை நாங்கள் ஒப்படைக்க வேண்டும்.

இந்த எட்டு தேசிய பாடசாலைகளும் நூறு நாட்களுக்குள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து எதிர்வரும் காலங்களில் பிரதேச செயலகங்கள் தோறும் இரண்டு தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.