சற்று முன்
Home / தேசத்தின்குரல் / பார்வைகள் / குழாயடி சண்டைகளுக்காகத்தான் உள்ளூராட்சி சபைகளா?

குழாயடி சண்டைகளுக்காகத்தான் உள்ளூராட்சி சபைகளா?

இலங்கை அரசாங்கத்திடம், சுயாட்சி அதிகாரத்தைக் கோரி தமிழ் மக்கள் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறார்கள். இன உரிமைக்காக இரத்தம் சிந்தப்பட்டு ஒரு மகோன்னத போராட்டம் நடந்திருக்கிறது. எல்லா விதத்திலும் முன்னுதாரணமாய் இருக்க வேண்டியவர்கள் ஈழத்தமிழ் மக்கள். முன்னுதாரணமாக இருக்க வேண்டியது வடக்கு கிழக்கு. ஆனால் தமிழர்கள் வசமுள்ள சில உள்ளூராட்சி சபைகளில் குழாயடி சண்டைகள் நடப்பதுதான் அயர்ச்சியும் அதிர்ச்சியும் தருகின்ற செயல்கள்.

இதற்கு உதாரணமாக கசப்பான இரண்டு நிகழ்வுகளைக் குறிப்பிட முடியும். ஒன்று யாழ்ப்பாண மாநகர சபையில் நடந்த ஒரு விவாத்தின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புளொட் உறுப்பினர் தர்சானந்த் சாதி ரீதியாக ஒரு உறுப்பினரை தாழ்த்தி பேசியிருந்தார். இந்த விடயம் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியிருந்தது. தமிழ் அரசியல் தலைமைகளின் மத்தியில் சாதிய மேலாதிக்கம் நிலவுகின்றது என்ற விவாதங்கள் நடந்து கொண்டிருக்கையில், அதனை நிரூபிக்கின்ற விதமாக அக்கட்சியின் இளையவர் ஒருவர் இவ்வாறு சாதிய ரீதியான வெறுப்புணர்வை கொட்டியுள்ளார்.

அதிகமும் இனத்திற்காக கிளர்ந்தெழுகின்ற இளையவர்களை கொண்ட தமிழ் மண்ணில் ஒருவர் இவ்வாறு வெளிப்படையாக, அதுவும் ஒரு கௌரவ சபையில் சாதிய மேலாதிக்கத்துடன் பேசுவது சாதாரண விடயமல்ல. அது கட்சிகளின் மனங்களில் குடி கொண்டிருக்கும் சாதியத்தின் வெளிப்பாடே. இதைப் போன்றே கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபையிலும் அநாகரிக செயற்பாடு இடம்பெற்றிருக்கின்றது. இரண்டு உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதனால் ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கரைச்சிப் பிரதேச சபையின் உறுப்பினர்கள் சிலர், சபை கௌரவத்தை பாதிக்கின்ற சொற்களை பயன்படுத்தி ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசுகின்ற காட்சிகள் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு காலத்தில் கிளிநொச்சி என்றால் அந்தப் பெயருக்கு ஒரு அடையாளமும் தனித்துவமும் இருந்தது. இன்று இதுபோன்ற செயற்பாடுகளால் கிளிநொச்சி என்ற பெயருக்கே இழுக்கு. மாண்புடன் நடந்துகொள்ள வேண்டிய இடத்தில் தொடர்புபட்ட அனைத்து உறுப்பினர்களும் பொறுப்பற்றதனமாக நடந்துள்ளதாக மக்கள் விமர்சிக்கின்றனர்.

கரைச்சிப் பிரதேச சபையின் குழாயடிச் சண்டைக்கு, அதிக ஆதன வரி அறவிடப்பட்டமை தொடர்பான விவாதமே மூல காரணம். இப் பிரதேச சபை ஏனைய உள்ளூராட்சி சபைகளை காட்டிலும் அதிகமாக வரி அறவிடப்படுவதாக சொல்லப்படுகின்றது. போரால் பாதிக்கப்பட்ட ஒரு நகரத்தை சார்ந்த மக்கள்மீது, அதிலும் முழுக்க முழுக்க அரைக் கிராமங்களால் அமையப்பெற்ற நகரில் இவ்வாறு அதிகரித்த வரியை அறவிடுவது மிகவும் தவறான செயற்பாடு என்றும் சொல்லப்படுகின்றது.

கரைச்சிப் பிரதேச சபையினர், நகரத்தில் முன்னெடுக்க வேண்டிய அபிவிருத்திகளை மாத்திரமின்றி சிறுசிறு வேலைகளைக்கூட சரியாக முன்னெடுப்பதில்லை என்று சபையின் சில உறுப்பினர்களே கூறுகின்றனர். அத்துடன் கட்சி ஆள் பார்த்து வர்த்தக நிலையங்களை வழங்குதல், இலஞ்சம் பெற்று வர்த்தக நிலையங்களை வழங்குதல் போன்ற முறைகேடுகளும் இடம்பெறுவதாகவும் சொல்லப்படுகின்றது. அப்படிப் பார்க்கையில் இச்சபை ஆற்ற வேண்டிய, திருந்த வேண்டிய பல்வேறு விடயங்கள் இருக்கின்றன எனலாம்.

கரைச்சிப் பிரதேச சபை ஆட்சி அமைக்கப்பட்டபோது பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் அடைந்த மகிழ்ச்சியையும் அவர் கைவிரல் உயர்த்தி வெற்றி புழகாங்கிதம் அடைந்தததையும் யாரும் எளிதாக மறந்திருக்க மாட்டார்கள். இன்றைய இச் சீரழிவுகளுக்கும் முறைகேடுகளுக்கும் அவரும் பொறுப்பேற்க வேண்டும். நிர்வாகத் திறனும் ஒழுக்கமும் மிக்க நிர்வாக கட்டமைப்புக்களால் உலகத்தை ஈர்த்த ஒரு நகரின் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தியதை பொறுப்பெடுக்க வேண்டும்.

இந்த விடயங்கள் எமது மக்களையும் போராட்டத்தையும் பாதிக்கக்கூடியது. கௌரவமற்ற சபைகளும் முறைகேடு மிகுந்த நிர்வாகங்களும் அதிகாரத்திற்காக போராடுகின்ற மக்களை மாத்திரம் பாதிப்பதில்லை. கடந்த காலத்தில் அதற்காக செய்யப்பட்ட தியாகங்களுக்கும் கொடுத்த விலைமதிப்பற்ற உயிர்களுக்கும் இழுக்கை ஏற்படுத்தக்கூடியது. போராளிகள் பற்றியும் போராட்டம் பற்றியும் அதிகம் பேசி அரசியல் செய்யக்கூடியவர்களின் நடைமுறைச் செயல்கள், முற்றிலும் அதற்கு எதிராய் அமைந்திருக்கின்றன. இனியேனும் ஊள்ளூராட்சி சபைகளில் குழாயடிச் சண்டைகள் செய்வதை தவிர்த்து உறுப்பினர்கள், கௌரவ உறுப்பினர்களாக மனித மாண்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

-தமிழ்க் குரலுக்காக தாயகன்-

( இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. -ஆசிரியர்பீடம் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

‘ராஜதந்திரம் என்பது மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வருவதல்ல!’

“ராஜதந்திரம் என்பது மீண்டும் தொடங்கிய இடத்திற்கேவருவதல்ல” – என்பாராம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தத்துவ ஆசிரியராக ...