பதவிக்கு ஆசைப்பட்டு தனிக்கட்சியை உருவாக்கியுள்ள விக்கி – ஸ்ரீநேசன் குற்றச்சாட்டு

2 n 1
2 n 1

வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமைத்துவ பதவிக்கு ஆசைப்பட்டு ஒரு தனிக்கட்சியை உருவாக்கி, வாக்குகளைச் சிதறடிக்கின்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் குற்றம்சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “மாற்றுத் தலைமை என்கின்ற விடயத்தினை மையப்படுத்தி தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பினை வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் உருவாக்கியுள்ளதாக அறிந்துள்ளோம்.

அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு அதிகமான வாக்குகளைப் பெற்றுக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்.

அதன் பின்னர் அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவிக்கு வர வேண்டும் என்று ஆசை கொண்டவர். கடந்த கலங்களில்கூட மாற்றுத் தலைமை என்கின்ற விடயத்தினைக் கையில் எடுத்து பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வந்தார். இதன் ஊடாக அவர் ஒரு தலைவராக வர வேண்டும் என்பதில் குறியாக இருந்து வருகின்றார் என்பது தெளிவாகின்றது.

தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட வேண்டும், தமிழ் மக்கள் பலமான சக்தியாக இருக்கக்கூடாது, ஒரே குரலில் அவர்களின் கருத்துகள் இருக்கக் கூடாது, தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்குள் அடிபட்டுக்கொண்டிருக்க வேண்டும் என நினைத்து செயற்படுபவர்கள் தென்னிலங்கையில் உள்ள பேரினவாதிகள். இவ்வாறான பேரினவாதிகளின் விருப்பத்தை நிறைவேற்றுகின்ற செயற்பாடகவே இது அமைந்துள்ளது” என மேலும் தெரிவித்துள்ளார்.