கடன்களை திருப்பிச் செலுத்துவதை – இடைநிறுத்த சாதகமான பதில்

4 g
4 g

இந்தியாவுக்கு இலங்கை தரவேண்டிய 120 மில்லியன் கடன்களை திருப்பிச் செலுத்துவதை இடைநிறுத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த கோரிக்கைக்கு சாதகமான பதில் இந்தியாவிடம் இருந்து கிடைக்கும் என ஆங்கில ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

4 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த வாரம் இந்தியா சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, டெல்லியில் இடம்பெற்ற நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போதே இக்கோரிக்கையினை விடுத்திருந்தார்.

இந்நிலையில் குறித்த கோரிக்கைக்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின்னரே இந்திய அரசாங்கம் பிரதமரின் கோரிக்கைக்கு பதிலளிக்க முடியும்.

இந்தியாவிற்கு இலங்கை திருப்பி செலுத்த வேண்டிய கடன் நிலுவை வட்டியுடன் 962 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். அத்தோடு இந்த ஆண்டு மட்டும் வட்டியுடன் 169.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை திருப்பி செலுத்த வேண்டும்.

அதன்பிரகாரம் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டுக்குள் 182 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் 2022 ஆம் ஆண்டில் 168 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அரசாங்கம் உள்ளது.

இதேவேளை சீனாவில் இருந்தும் மிகப்பெரிய அளவில் அதாவது 5.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை கடனாக பெற்றுள்ளது. அதில் இந்த ஆண்டு மட்டும் 674.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் மீள செலுத்த வேண்டும்.

இருப்பினும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்காக 400 மில்லியன் டொலர்களை இந்தியா கடனாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.