யார் தியாகி? யார் துரோகி?

samakaala paarvai 1
samakaala paarvai 1

2009இற்குப் பின்னரான காலப் பகுதியில் தமிழ்த் தேசிய அரசியலில் யார் தியாகி? யார் துரோகி? என்று அடையாளம் காண்பது மிகவும் சிக்கலாகிவிட்டது. அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தாலும் தலைவர் பிரபாகரனாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இன்றுவரை கொள்கைவழியில் பயணிப்பவர்களை, இப்போது அரசியலுக்கு வந்தவர்களும் அரசியல் ‘கத்துக்குட்டிகளும்’ துரோகிகள் என குற்றம் சுமத்தி அரசியல் செய்கின்ற நிலமைகளும் காணப்படுகின்றன.

அண்மையில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் தலைமையில் புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் இணைய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மறுப்புத் தெரிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டில் எழுக தமிழை நடாத்தியபோது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ‘சுரேஷ் அண்ணா’ என அழைத்தபடி ஈழப் புரட்சிகர முன்னணியினருடன் இணைந்திருந்தார்.. அது மாத்திரமின்றி விக்னேஸ்வரன் அவர்களை மாற்று அரசியலுக்கு தலமை ஏற்க வருமாறும் அழைத்தவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான விமர்சனங்கள் ஒருபுறம் இருந்த நிலையில், மக்களின் அமோக வாக்குகளினால் தேர்வு செய்யப்பட்ட அன்றைய முதல்வர் விக்னேஸ்வரன், அமைச்சர் அனந்தி சசிதரன், மக்களின் ஆதரவை பலமுறை பெற்றிருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றவர்களுடன் திரு கஜேந்திரகுமார் அணியும் இணைந்தமை காரணமாக, இந்த மாற்றுத் தலமையின் பின், மக்கள் அலையாக திரண்டனர்.

எழுக தமிழுக்கு மக்கள் திரண்டமையை தமக்கான ஆதரவு அலையாக திரு கஜேந்திரகுமார் அணியினர் ‘எடை’ போட்டுக் கொண்டனர். அத்துடன் அதற்குப் பிந்தைய சில தேர்தல்களின்போதும், விக்கி உள்ளிட்டோரின் கூட்டை தமது அரசியல் மற்றும் தேர்தல் வெற்றிகளுக்காகவும் பயன்படுத்திக் கொண்டதுடன், அது அகில இலங்கை காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு என்று மொழிபெயர்த்து கற்பனை செய்தது கஜேந்திரகுமார் தரப்பு.

அன்றைய காலத்தில் இணைந்திருப்பதற்கு எந்த மறுப்புமற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தற்போது சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் ஈழப் புரட்சிகர முன்னணியினரை நீக்கினால் கூட்டணியில் இணைவோம் என்று கூறுகின்றார். அன்று ‘சுரேஷ் அண்ணாவாக’ இருந்தவர் இன்று ‘துரோகியாக’ மாறியதன் காரணம்தான் பலருக்கும் புரியாதுள்ளது. வேலைக் கள்ளிக்கு பிள்ளைச் சாட்டு என்பது போல இருக்கிறது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இந்த சாக்குப் போக்கு.

இந்த இடத்தில் சில கேள்விகள் எழுகின்றன. 2005 காலப் பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஜனநாயக கட்டமைப்பை புலிகள் இயக்கம் உருவாக்கியபோது சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைவர் பிரபாகரனால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கட்சியில் போட்டியிட அனுமதிக்கப்பட்டவர். தலைவர் பிரபாகரனால் ஏற்றுக்கொள்ளப்பட்டும் இன்றும் கொள்கைவழி பயணிக்கும் ஒருவரை துரோகி என்று அழைத்து ஒதுக்க திரு கஜேந்திரகுமாருக்கு என்ன தகைமை உண்டு?

மக்கள் ஆதரவும், புலிகளுக்காகவும், போராட்டத்திற்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கும் ஒருவரை ஒதுக்கி வைக்க முற்படுவது மக்களுக்கு எதிரானதல்லவா? அது யாருக்கு ஆதாயமானது? திரு. சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைவர் பிரபாகரனை நேரடியாக தனிமனிதராக சந்திக்க அனுமதிக்கப்பட்ட நபர். ஆனால் திரு கஜேந்திரகுமாரோ, தனது குடும்பத்தின் சார்பில், குமார் பொன்னம்பலத்திற்கான கௌரவத்தை பெறுவதற்காக சந்தித்தவர்.

இலங்கை தமிழர்களுக்கு எதிராக அன்றைய காலத்தில் நகர்வுகளை மேற்கொண்ட அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியை காப்பாற்றுவதில் இருக்கும் அக்கறையை திரு கஜேந்திரகுமார், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை பதிவு செய்வதில் செலவிட்டாரா? ஆனால் தமிழ் தேசிய சூழலில் மாற்று அரசியல் கூட்டு ஒன்றை உருவாக்குவதற்காக சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது பழமையான கட்சியை, அடையாளத்தை விட்டுக்கொடுத்து அதற்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி எனப் பெயரை மாற்றியுள்ளார். இன்றைய காலத்தில் சிறந்த விட்டுக்கொடுப்பு இது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஏன் பதிவு செய்யவில்லை என்ற கேள்வியை கேட்டால், தமிழீழ விடுதலைப் புலிகள் பதிவு செய்யப்பட்ட கட்சியா என கேட்கும் அறிவிலித்தனத்தை என்னவென்பது? தமிழ் தேசிய சூழலில் மாற்று அரசியல் ஒன்றை உருவாக்க இன்று தடையாக இருப்பது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரே. கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையின் ஆதரவும் தமக்கு இருப்பதாகக் காட்டிக்கொள்ள, தமிழ்த் தேசியப் பேரவை என முகமூடி அணிந்து தேர்தலில் போட்டியிட்டார்கள் கஜேந்திரகுமார் அணியினர்.

அன்று முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகளில் முக்கியமானது தேர்தலுக்குப் பின்பு தமிழ்த் தேசியப் பேரவை பதிவு செய்யப்படும் என்பது. ஆனால் தேர்தல் முடிந்து இரண்டு வருடங்களாகியும் அதைப்பற்றி மூச்சே விடுவதில்லை. சாதாரணமாக தங்களால் நிறைவேற்றக் கூடிய வாக்குறுதிகளையே காற்றில் பறக்கவிடும் தரப்பு, பூகோள அரசியல்மூலம் புதுயுகம் படைக்கப் போவதாக ‘புலுடா’ விடுகிறார்கள். கூரையேறி கோழிபிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம். முன்னாள் முதலமைச்சர் உட்பட மக்கள் ஆதரவு பெற்ற சிலரின் பெயரைக் காட்டி கடந்த காலத்தில் பெற்ற வாக்குகளை இனி இவர்களால் பெற்றுக்கொள்ள முடியாது.

எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் தக்க பதிலடிகளை வழங்குவார்கள். தமிழ்த் தேசிய சூழலில் மெய்யான மாற்றுத் தலைமை உருவாகும். ஏமாற்றுபவர்களுக்கும் நடிப்பவர்களுக்கும் இடையிலான கள்ள உறவுகளை புரிந்துகொண்டு உண்மையான தலைமைத்துவத்தை மக்கள் உருவாக்குவார்கள். அதுவே ஈழத் தமிழ் இனத்தின் எதிர்கால விடியலை உருவாக்கும் முதல் படியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

தமிழ்க் குரலுக்காக தாயகன்

( இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம் )