கஜேந்திரகுமாரின் மக்கள் விரோத அரசியலை எவ்வாறு விளங்கிக் கொள்வது?

03 1
03 1

ஒரு சீனப் பழமொழியுண்டு – அதாவது, மரங்கள் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை. இதே போன்றுதான் நாமே, நமது குப்பைகளை கிளறுவதில் என்ன இருக்கின்றது, என்று நாம் அமைதியாக இருந்தாலும் கூட, சிலரது நடவடிக்கைகள் எல்லை மீறும் போது, அவர்கள் தொடர்பான உண்மைகளை தொடர்ந்தும் பேசாமல் இருக்க முடியவில்லை. தமிழ் மக்களுக்காக, சிலரது மக்கள் விரோத அரசியலை நாம் அம்பலப்படுத்தித்தான் ஆக வேண்டியிருக்கிறது.

அண்மையில் நடைபெற்ற எழுக தமிழ் தொடர்பிலான வாதப்பிரதிவாதங்கள் இன்னும் ஓயவில்லை. எழுக தமிழிற்கு எதிராக, முக்கியமாக பேரவையின் இணைத்தலைவராக இருக்கின்ற முன்னைநாள் வடக்கு மாகாண முதலமைச்சர், நீதியரசர் க.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிரான பிரச்சாரங்கள் இப்போதும் முற்றிலுமாக ஓய்ந்துவிடவில்லை. இவ்வாறான அவதூறுப் பிரச்சாரங்களை முன்னெடுத்தவர்கள் – இப்போதும் முன்னெடுத்துக் கொண்டிருப்பவர்கள் அனைவருமே, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களாகவே இருக்கின்றனர். இது தொடர்பில் பேரவையின் உறுப்பினர் ஒருவர் பேசுகின்ற போது, இலங்கையிலேயே அதிகம் ஒழுக்கம் குறைந்தவர்கள் இருக்கின்ற ஒரேயொரு கட்சி கஜேந்திரகுமாரின் கட்சியாகத்தான் இருக்கமுடியும் என்றார். ஏனெனில் அந்தளவிற்கு மற்றவர்களை மிகவும் கீழ்த்தரமாக பேசுகின்றவர்களாக அவர்களே, இருக்கின்றனர்.

அகில இலங்கை தமிழ் காங்கிரசின் கொள்கை பரப்புச் செயலாளர் சட்டத்தரணி சுகாஸ் என்பவர், எழுக தமிழில் பங்குபற்றிய பொது அமைப்புக்கள், இதற்கு பதிலாக விபச்சாரம் செய்திருக்கலாம் என்று தூற்றியிருப்பதாக அந்த உறுப்பினர் கவலையுடன் தெரிவித்தார். எழுக தமிழ் ஒரு விபச்சாரச் செயற்பாடென்றால் அதில், பங்குகொள்வதற்காக திரண்ட பல்லாயிரக்கணக்கான நமது மக்களையும் விபச்சாரம் செய்பவர்கள் என்றா சைக்கிள் அணியினர் கருதுகின்றனர்? ஒரு விடயத்துடன் அரசியல் ரீதியாக எவரும் முரண்படலாம். அதனை விமர்சிக்கலாம் – அதில் எவ்வித தவறுமில்லை ஆனால் நாம் ஒன்றுடன் உடன்படவில்லை என்பதற்காக, ஒன்றிற்கு எதிராக மிகவும் கீழ்தரமாக நடந்துகொள்வதானது, மிகவும் குரூர அரசியலாகும். இத்தனைக்கும் நன்கு படித்த, அறிவுள்ளவராக கருதப்படும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சி இப்படியாம் என்பது, இன்னும் அசிங்கமாக இருக்கிறது.

நாங்கள் இல்லாவிட்டால் எழுக தமிழில்லை என்றவாறு உறுமிக்கொண்டிருந்த கஜேந்திரகுமாரின் திமிரும், இறுமாப்பும் செல்லாக்காசாகிவிட்டது. இதனால் ஏற்பட்ட அவமானத்தை துடைப்பதற்காக எழுக தமிழில் பங்களித்தவர்களை அரசியல் விபச்சாரிகள் என்றும், துரோகிகள் என்றும் கஜனின் ஆட்கள் பிரச்சாரம் செய்துவருகின்றனர். நேற்றுவரை தங்களுக்கு தலைமை தாங்க வருமாறு அழைக்கப்பட்ட, விக்கினேஸ்வரன் தொடர்பில் நாளொரு கதை சொல்லிக் கொண்டிருக்கிறார் கஜன். அவை உண்மையென்றால் அதனை ஏன் ஆரம்பத்திலேயே கூறவில்லை? ஆரம்பத்தையும் விட்டுவிடுவோம், விக்கினேஸ்வரன் தனியான கட்சியை அறிவித்த பின்னரும் கூட, அவரை சைக்கிள் சின்னத்தின் கீழ் போட்டியிட வைப்பதற்கான முயற்சிகளில் கஜன் தொடர்ந்தும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதற்காக பலரை தூதுவிட்டிருந்தார்.

ஒரு மாகாண சபைத் தேர்தல் இடம்பெறக் கூடுமென்னும் நிலையிருந்ததை, தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் நோக்கில், சைக்கிள் சின்னத்தை ஒரு தற்காலிக ஏற்பாடாகக் கொள்ளலாம் என்னும் அடிப்படையிலும் விக்கினேஸ்வரனுடன் பேசிப் பார்த்தார். இதற்காக சில பத்தியாளர்கள் உட்பட, ஆரம்பத்தில் விக்கினேஸ்வரனுக்கு நெருக்கமாக இருந்த பொ.ஜங்கரநேசன் வரையில் பலரையும் தூதனுப்பினார். ஆனாலும் விக்கினேஸ்வரன் சைக்கிள் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதை ஒரு பேச்சுக் கூட பொருட்படுத்தவில்லை. இவ்வாறானதொரு சூழலில்தான் கஜேந்திரகுமார், பேரவையின் பிறிதொரு அங்கத்துவ கட்சியான, சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை இலக்கு வைத்து, தொடர்ச்சியாக விமர்சிக்கத் தொடங்கினார். சுரேஸ் ஒரு இந்திய உளவுத்துறையின் ஆள் என்றவாறு விசமத்தனமான பிரச்சாரங்களை முன்னெடுப்பதன் ஊடாக, விக்கினேஸ்வரனுக்கு உளவியல் ரீதியில் நெருக்கடிகளை கொடுக்க முற்பட்டார். கஜேந்திரகுமாரின் கணக்கு இதுதான்- அதாவது, விக்கினேஸ்வரன் வலிந்து, பதவியாசையின் காரணமாக, அரசியலுக்கு வந்த ஒருவரல்ல. மாறாக, பலரது வேண்டுகோளுக்கு ஏற்ப, – தமிழ் மக்களுக்கு தன்னால் முடிந்த பணிகளை செய்வதற்காக வந்த ஒருவர்.

அவ்வாறான ஒருவருக்கு தொடர்ச்சியான நெருக்கடிகளை கொடுத்தால் – ஒன்றில் அவர் தனது சைக்கிளின் வழிக்கு வருவார் அல்லது, அரசியலை விட்டுவிட்டு தன்பாட்டில் சென்றுவிடுவார். ஆனால் கஜனின் கணக்கு பலிக்கவில்லை. கஜனின் போலி பிரச்சாரங்கள் எவற்றாலும் விக்கினேஸ்வரனின் அரசியல் உறுதிப்பாட்டை சீர்குலைக்க முடியவில்லை. இந்தப் பின்னணியில்தான் தான் இல்லாத பேரவையின் ஊடாக, விக்கினேஸ்வரனும் சுரேஸ் பிரேமச்சந்திரனும் இணைந்து ஒரு எழுக தமிழை முன்னெடுப்பதை கஜேந்திரகுமாராலும், அவரது குழுவினராலும் சகித்துக்கொள்ள முடியவில்லை. வெறுப்பின் உச்சத்திற்கு சென்றனர். பேரவையின் உள்ளக கலந்துரையாடல்களின் போது விக்கினேஸ்வரன் முன்வைத்த கருத்துக்களை பொது வெளிக்கு கொண்டுவந்து, விக்கினேஸ்வரன் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான ஒருவர் என்று நிறுவ முற்பட்டனர்.

அண்மையில் கஜேந்திரகுமாரின் ஜ.பி.சி. நேர்காணலொன்று வெளியானது. பேரவையின் அரசியல் தீர்வாலோசனை நகல் தயாரிக்கப்பட்ட போது, அதில் ‘தேசம்’ என்னும் சொல்லை போட வேண்டாமென்று விக்கினேஸ்வரன் குறிப்பிட்டதாக ஒரு பிரதி காண்பிக்கப்பட்டது. இதனை ஏன் இவ்வளவு காலமும் கூறாமல் இப்போது கூறுகின்றார்? உண்மையில் அது உள்ளக கலந்துரையாடலின் போது விக்கினேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள். அதே போன்று தீர்வாலோசனைக் குழுவில் அங்கம்வகித்த பலரும் தங்களின் கருத்துக்களை முன்வைத்திருந்தனர். அவ்வாறு முன்வைக்கப்பட்ட அனைத்து கருத்துக்களினதும் அடிப்படையில்தான் பேரவையின் இறுதி தீர்வு நகல் முடிவானது. அதனைத்தான் கஜேந்திரகுமாரும் ஏற்றுக் கொண்டிருந்தார். அந்த தீர்வாலோசனை வெளிவந்த பின்னர்தான் விக்கினேஸ்வரன் ஜயாவே வருக – தலைமை தாங்குக – என்றவாறான பதாகை ஒன்றை, தூக்கிப்பிடித்தவாறு கஜன் வீதிகளில் நின்று கொண்டிருந்தார். ஆனால் அதே கஜேந்திரகுமார்தான் இன்று தனது தாளத்திற்கு விக்கினேஸ்வரன் ஆடவில்லை என்றவுடன், புதிய கதைகளை சொல்லுகின்றார். விக்கினேஸ்வரனுடன் கொள்கை முரண்பாடு இருந்திருந்தால், அதனை அப்போதே முன்வைத்துவிட்டு, கஜேந்திரகுமார் பேரவையிலிருந்து வெளியேறிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் அதில் ஒரு நேர்மை இருந்திருக்கும். ஆனால் விக்கினேஸ்வரனது செல்வாக்கை கொண்டு, தனது குடும்பக் கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸை புணரமைப்புச் செய்யும் முயற்சி முற்றிலுமாக, தோல்வியடைந்த பின்னணியில்தான், இன்று, என்ன பேசுவதென்று தெரியாமல் உளறிக் கொண்டிருக்கிறார்.

கஜேந்திரகுமார் இன்று செய்யும் அரசியலை ஒரு வரியில் குறிப்பிடுவதானால், அது ஒரு கீழ்தரமான அரசியல். ஒருவர் பிரத்தியேக கலந்துரையாடல்களுக்காக அனுப்பும் கருத்துக்களை, பொது வெளிக்கு கொண்டு வந்து, அவர்களை தவறானவர்களாக காண்பிக்க முற்படுவதானாது, மிகவும் கேவலமானதொரு அரசியலாகும். அதனைத்தான் இன்று கஜேந்திரகுமார் செய்து கொண்டிருக்கிறார். முன்னரும் விக்கினேஸ்வரனால், பிரத்தியேகமாக அனுப்பப்பட்ட கடிதமொன்றை, ஊடகங்களில் கசியவிட்டு, விக்கினேஸ்வரனுக்கு அவதூறு பரப்ப முற்பட்டார். அதன் பின்னர் தற்போது, பேரவையின் உள்ளக கலந்துரையாடல்களின் போது, முன்வைக்கப்பட்ட கருத்துக்களை பொதுவெளிக்கு கொண்டு விக்கினேஸ்வரனை தவறான ஒருவராக காண்பிக்க முற்படுகின்றார். இதன் மூலம் கஜேந்திரகுமார் சாதிக்க முற்படுவது என்ன? இதனால் தமிழ் மக்களுக்கு கிடைக்கப் போகும் நன்மைகள் என்ன? இதற்கெல்லாம் கஜனிடம் இருக்கும் பதில் – தாங்களே கொள்கை வழி செய்லபவர்கள். மற்றவர்கள் கொள்கையிலிருந்து விலகியவர்கள். அது உண்மைதானா? கஜனின் கொள்கை என்ன? கஜனிடம் இருப்பது கொள்கையா – அல்லது கொள்கை என்னும் பெயரில் தனது குடும்பக் கட்சியை பலப்படுத்தும் நரித்தந்திரமா?

2010இல், கூட்டமைப்பிலிருந்து வெளியேறி கஜன், தனது பாட்டன்வழி அகில இலங்கை தமிழ் காங்கிரஸை தனியானதொரு மாற்றுக் கட்சியாக கட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபட்டார். எனினும் அதில் இன்றுவரை வெற்றிபெற முடியவில்லை. இவ்வாறானதொரு சூழலில்தான் விக்கினேஸ்வரனுக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் கொள்கைகளை தீர்மானிக்கும் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. அது நாளடைவில் ஒரு பிளவாக உருமாறியது. அந்த பிளவை பயன்படுத்தி, விக்கினேஸ்வரனுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார் கஜன். தான் என்னதான் முயன்றாலும் பொன்னம்பலம் பரம்பரையின் கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை பெற முடியாதென்று கருதிய கஜன், ஜனவசியமுள்ள விக்கினேஸ்வரனை தன்பக்கமாக சாய்த்துக் கொண்டால், காங்கிரஸை மீளவும் இலகுவாக கட்டியெழுப்பலாம் என்று கணக்குப் போட்டார். ஏனெனில் 2010இல் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய போது, தாங்களே புலிகளின் தொடர்ச்சி என்றவாறே மக்கள் மத்தியில் காண்பித்துக் கொண்டனர். ஆனாலும் மக்கள் அதனை ஒரு போதுமே ஏற்றுக்கொள்ளவில்லை. கூட்டமைப்புடன் முரண்பட்டிருந்த புலம்பெயர் அமைப்புக்களும் கஜனுக்கு பணத்தை வாரிவழங்கின ஆனால் அனைத்துமே இறுதியில் விழலுக்கிறைத்த நீரானது.

கஜேந்திரகுமாரை பொறுத்தவரையில், மாற்று என்பது தனது பாட்டனாரின் கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஒன்றுதான். அதாவது வீட்டுக்கு மாற்று சைக்கிள்தான். இந்த திட்டத்திற்கு விக்கினேஸ்வரனை பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போனதன் விளைவுதான், கஜேந்திரகுமாரின் இன்றைய அனைத்து புலம்பல்களுமாகும். ஆனால் இதன் மூலம் கஜேந்திரகுமார் உண்மையில் எதை செய்து கொண்டிருக்கிறார்? இதுதான் மக்கள் சிந்திக்க வேண்டிய இடம். தனது குடும்ப கட்சியை பாதுகாத்து, தனது பாட்டனார் வழியான வரலாற்று கறையை கழுவிக் கொள்வதற்காக, தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வலுவான மாற்று தலைமை ஒன்று உருவாகுவதை திட்டமிட்டு தடுத்து வரும் ஒருவர்தான் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். அதற்காக அவர் கைக் கொண்டிருக்கும் மந்திர வார்த்தைதான் கொள்கை. ஆனால் அவரது உண்மையான கொள்கை, செல்வாக்கிழந்து வரலாற்றிலிருந்து அழிந்துபோன, தங்களது குடும்ப கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸை எப்படியாவது மீளவும் தூக்கிநிறுத்துவது ஒன்றுதான் கஜனின் இலக்கு. அந்த இலக்கிற்கு எவர் தடையாக வந்தாலும் அவர்கள் அனைவரும் கஜனின் பார்வையில் கொள்கையற்றவர்களாவர். இது அடிப்படையிலேயே ஒரு மக்கள் விரோத அரசியலாகும்.

– கரிகாலன்