தொல்லியல் திணைக்களங்களின் பிடியில் ;முல்லையில் 26 ஆயிரத்து 507 ஏக்கர் நிலம்!

1 we 2
1 we 2

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் , வனஜீவராசிகள் திணைக்களங்களம் , மகாவலி அதிகாரசபை மற்றும் தொல்லியல் திணைக்களங்களின் பிடியில் தற்போதும் 26 ஆயிரத்து 507 ஏக்கர் நிலம் உள்ளதாக உரிய திணைக்களங்களிடம் மாவட்டச் செயலாளரினால் தெரிவிக்கப்பட்டது.

வவுனியா , முல்லைத்தீவு , மன்னார் மாவட்டங்களில் நிலவும் வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகளிற்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று முன்தினம் வவுனியா மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் இரு திணைக்களங்களின் அமைச்சர் , பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளும் மாவட்டச் செயலாளர்கள் , பிரதேச செயலாளர்கள் ஆகியோருடன் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இவ்வாறு இடம்பெறும் கலந்துரையாடலில் போதே மேற்படி தகவல் மாவட்டத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன் பிரகாரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் மட்டும் 21 ஆயிரத்து 256.86 ஏக்கர் நிலம் மக்களின் வாழ்விடம் மற்றும் வாழ்வாதார நிலங்கள் உள்ளன.

இதேபோன்று வனவளத் திணைக்களத்திடம் 3 ஆயிரத்து 585.5 ஏக்கர் நிலம் உள்ளது. இவ்வாறு காணப்படும் குறித்த 3 ஆயிரத்து 582.5 ஏக்கர் நிலமும் ஆயிரத்து 517 பொது மக்களிற்கு சொந்தமான நிலம் எனவும் மாவட்டச் செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதேபோன்று மகாவலி அதிகார சபையிடம் 371 குடும்பங்களின் ஆயிரத்து 453 ஏக்கர் நிலம் உள்ளதாக காண் பிக்கப்பட்டுள்ளதோடு தொல்லியல் திணைக்களத்திடம் 28 குடும்பங்களிற்குச் சொந்தமான 313 ஏக்கர் நிலம் உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு மாவட்டச் செயலகம் உறுதி செய்த நிலத்தின் பிரகாரமே மாவட்டத்தின் 26 ஆயிரத்து 507 ஏக்கர் நிலம் நான்கு திணைக்களங்களின் பிடியில் உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.