மொழி அழிந்தால் இனமும் அழியும்!

thamil
thamil

இன்று உலகத் தாய்மொழி தினமாகும். உலகிலுள்ள அத்தனை தாய்மொழிசார் சமூகங்களும் இன்றைய தினத்தை நினைவு கூர்கின்றனனர். தாய்மொழிக்காக பல்வேறு தியாகங்களை செய்து, குருதி சிந்திய ஈழத் தமிழினம் இன்றைய நாளை மிகவும் அர்த்தபூர்வமுடன் நினைவு கொள்வது அவசியமானது. மொழியின் இருப்பென்பது இனத்தின் இருப்புமாக அமைவதால் இதில் நம் பெரும் சிரக்தை அவசியமாகிறது.

ஈழத்தில் தமிழ் மக்கள் இன ரீதியாக ஒடுக்கப்பட்டதுடன் மொழி ரீதியாகவும் ஒடுக்குமுறைக்கு ஆளாகினர். ஈழத் தமிழ் இராஜியங்கள் சிலோனில் இணைக்கப்பட்டதன் பின்னர், தமிழும் ஈழத் தமிழர்களும் சிலோனில் மிகுந்த முக்கியத்துவம் பெற்று விளங்கின. அதற்கு ஈழத்தவர் மொழியும் அதன்பாற் கிடைத்த கல்வியும் முதன்மை காரணமாகும்.

சிலோனின் சுதந்திரத்திற்கு ஈழத் தமிழர்கள் ஆற்றிய பங்களிப்பு வரலாற்றில் அதிமுக்கிய பக்கங்களாகும். எனினும் சுதந்திரத்தின் பின்னர், ஈழமக்கள் மாத்திரமின்றி அவர்களது மொழியும் ஒடுக்கப்பட்டது. இதன் ஒரு வெளிப்பாடே 1956இல் தனிச்சிங்களச் சட்டம் திணிக்கப்பட்டது. தனிச்சிங்களச் சட்டம் என்பது, இலங்கை அரசின் மொழிக்கு எதிரான முதல் யுத்தம் எனக் கூறலாம்.

அதே காலகட்டத்தில் தமிழ் இன அழிப்புக்களும் தீவிரமடையத் தொடங்கின. இன அழிப்பும் மொழியழிப்பும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டது. ஒரே காலத்தில் துவங்கியது எனலாம். இதற்கு எதிராக சாத்வீக ரீதியில் போராடிய தமிழ் மக்கள் ஒரு கட்டத்தில் ஆயுதம் ஏந்தியும் இன மொழி உரிமைகளுக்காக குரல் கொடுத்தனர்.

தமிழ் மக்களின் உரிமைக்காக போராடிய ஈழத் தமிழ் போராளிகள், தமது நிழல் அரசின் காலத்தில் தமிழ் மொழித் தேசத்தை சாத்தியப்படுத்தினர். ஒரு சமஸ்டி மாநில அரசாக இந்தியாவின் தமிழகம் ஏற்படுத்தியிராத மாற்றங்களை ஈழத்தின் வடக்கு கிழக்கு உருவாக்கியது. முழுக்க முழுக்க தமிழ் நிர்வாகமும் நிலமுமாக ஈழம் மிளிர்ந்தது.

நிர்வாகங்களுக்கு தமிழ் பெயரைச் சூட்டுதல், பிள்ளைகளுக்கு தமிழ் பெயர்களைச் சூட்டுதல், புழங்கு பொருட்களுக்கு தமிழ் பெயர்களை சூட்டுதல் என பல்வேறு அதிரடி மாற்றங்கள் ஈழப் போராளிகளின் காலத்தில் சாத்தியப்பட்டன. செம்மொழியான தமிழ் மொழியின் நிறைந்த வளத்தை முழுமையாக மக்களை உணரச்செய்தனர் போராளிகள்.

போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நகரங்கள் இன்றும் இனிய தமிழ் பெயர்களுடன் விளங்குகின்றன. போராளிகளின் காலத்தில் பிறந்த பிள்ளைகள் இன்றைக்கு இனிய தமிழ் பெயர்களுடன் இந்த தேசத்தை அழகுபடுத்துகின்றனர். இன்று பரீட்சைகளில் வெற்றி பெறுகின்ற மாணவர்கள் இனிய தமிழ் பெயர்களாலும் இத் தீவில் அறியப்படுகின்றனர்.

போருக்குப் பிந்தைய இன்றைய கால கட்டத்தில், மீண்டும் மொழி அழிப்பு தொடங்கிவிட்டது. அரச நிறுவனங்களில் மிகுந்த பிழைகளுடன் தமிழ் பெயர் பலகைகள் காணப்படுகின்றன. பேருந்துகளிலும் பொது இடங்களிலும் தமிழ் கொலை செய்யப்படுகின்றது. மொழிக்காக ஒரு இனம் இத்தனை தியாகங்களை செய்து நெருக்கடிகளை சந்தித்த பின்னரும் இப்படியொரு நிலமை காணப்படுவது பெருத்த துயரமானது.

இவற்றை திருத்தவோ, சுட்டிக்காட்டவோ எமது அரசியல் தலைமைகளும் முயலவில்லை. ஏன் எமது அரசியல் தலைமைகளின் கட்டுப்பாட்டில் இருந்த அரச நிறுவனங்கள், உள்ளூராட்சி சபைகள்கூட இதில் அக்கறை கொள்ளவில்லை என்பதும் இங்கே கண்டிக்கதக்க விசயம். மொழி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்ட அன்றிருந்த போராளிக்கட்டமைப்பு இன்று இல்லை. இதன் ஆபத்து எம் தலைமைகளுக்கு புரியவும் இல்லை.

இப்போது வடமொழிகளில் பெயர் சூட்டும் கலாசாரம் எமது மக்கள் சிலரிடையே ஏற்படுகின்றது. அர்த்தமற்ற பெயர்களை சூட்டுகின்ற மோகம் எமது பண்பாட்டை அழிக்கக்கூடியது என்பதை உணர்வோம். அத்துடன் தாய் மொழியில் கையெழுத்திடுகின்ற பழக்கமும் அருகி வருகின்றது. இவைகளை குறித்து இன்றைய இளம் பிள்ளைகள் விழிப்படைய வேண்டும். ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

தமிழ், மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி. எல்லோரும் மொழி பேசுகின்றனர். நாமோ மொழிகளின் தாய்மொழியைப் பேசுகிறோம். தாய் மொழி தினத்தில் இது குறித்த சிந்தனையை நாம் ஒவ்வொருவரும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழ் இனமானது, தமிழ் வாழ்வை வாழ வேண்டும். எமது வாழ்வின் எல்லாப் பரப்பிலும் மொழி இரண்டறக்கலக்க வேண்டும். ஏனெனில் தாய் மொழி அழிந்தால் தாய் நாடும் அழியும்.

ஆசிரியர் பீடம்,
தமிழ்க்குரல்.
21.02.2020