சற்று முன்
Home / தேசத்தின்குரல் / பார்வைகள் / சிறீதரனின் பதற்றம் எதற்கானது?

சிறீதரனின் பதற்றம் எதற்கானது?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலக்கு என்ன? அவர்களின் பயணம் எப்படிச் செல்லுகின்றது என்பது தொடர்பில் அந்தக் கட்சியில் இருக்கும் சிலரிடையே தெளிந்தவொரு நிலைப்பாடு இல்லாமல் இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு என்ன வாக்குறுதி அளித்தது? 2009இற்குப் பின்னரான கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதனைச் சாதித்தது? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பயணம் எந்தளவுக்கு சாத்தியமளித்தது? இவைகள் பற்றிய பொறுப்பின்றி தமது பதவி இருப்பு குறித்த பதற்றத்தில் உள்ளது கூட்டமைப்பு.

அண்மையில் கிளிநொச்சி பளையில் நடந்த நிகழ்வொன்றில் பேசிய, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், அண்மைக்காலத்தில் உருவாகி வரும் கூட்டணி என்பது இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். மிக மிக பிற்போக்குத் தனமான அரசியலாகவும், மாற்று அரசியலையும் அரசியல் விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ளாத, பகுத்தறிவும் சிந்தனையுமற்ற அவதூறு மற்றும் பொய்களை முதலீடாக கொண்ட அரசியலுமே தமது ஆயுதம் என்பதை சிறீதரன் அவர்கள் மீண்டும் உணர்த்த முற்படுகின்றார்.

உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியான வழியில் செல்கிறது என்றால், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சரியான வழியில் செல்கிறார் என்றால், ஏன் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியைக் கண்டு பதற்றம் கொள்ள வேண்டும். இலங்கை அரசுக்கும் சிங்களப் பேரினவாதிகளுக்கும் எதிராக கடுமையாக எதிர்வினையை ஆற்றுகின்ற ஒருவரை பார்த்து, இவர்களுக்கு ஏன் பதற்றம் ஏற்படுகின்றது? கடந்த கால அரசை மாத்திரமின்றி இன்றைய அரசையும் பாதுகாக்க கூட்டமைப்பினர் முயல்வதால்தான் இப்படி பதற்றம் எழுகிறதா?

கடந்த காலத்தில் இலங்கை அரசுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கியது. சர்வதேச ரீதியாக போர்க்குற்ற விசாரணைகளின்போதும்சரி, நாட்டில் அரசாங்கத்தை பாதுகாக்கும் அரசியலிலும்சரி, கூட்டமைப்பு முழு ஆதரவை வழங்கியது. 2015இற்கு முன்னர் ஒட்டுக்குழுக்கள் என குற்றச்சாட்டிய தரப்பைப் போலவே 2015இற்குப் பிறகு தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டது. அத்துடன் அரசில் பல முக்கிய பதவிகளையும் வகித்துக் கொண்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சிறீதரன்கூட கிளிநொச்சியில் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைப் பதவியை பெற்றார். அப் பதவி ஒரு மாவட்ட அமைச்சர் பதவியைப் போன்றது. அக் காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் திரு. சிறீதரன் அவர்களும் அரசுக்கு சார்பான ஒரு குழுவாகவே இயங்கி வந்தனர். இவர்கள் இவ்வாறு செயற்பட்டமையினால்தான் தமிழ் தேசிய சூழலில் மாற்றுத் தலைமைக்கான தேவையொன்று உணரப்பட்டது.  

வடக்கின் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள், அரசை மாத்திரமின்றி, இவர்கள்மீதும் விமர்சனங்களை முன் வைக்க வேண்டியெமையால்தான் மாற்றுத் தலைமையான தமிழ் மக்கள் பேரவையை உருவாக்க வேண்டியுமானது. சிவஞானம் சிறீதரன் அவர்கள், தாமும் தமது கட்சியும் கடந்த காலத்தில் செய்த சரி பிழைகளைப் பற்றி பேசி அரசியல் செய்ய வேண்டும். கடந்த பத்தாண்டுகளில் தம்மால் எதனை சாதிக்க முடிந்தது என்பதை சுய விமர்சனம் செய்ய வேண்டும்.

கடந்த பத்தாண்டுகளாக வெறுமனே பதவியை மாத்திரம் காப்பாற்றிக் கொண்டு, தமிழர்களின் அரசியலை பல பத்தாண்டுகளுக்கு பின் நோக்கி தள்ளினால், மாற்றுத் தலைமை ஒன்று உருவாகுவது கால நிர்பந்தம் ஆகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சிறீதரன்  போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் விட்ட தவறுகளினால்தான் தமிழ மக்கள் மத்தியில் புதிய தலைமை ஒன்று உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தம்மால் சாதிக்க முடியாது என்றால் புதிய தலைமைக்கு வழிவிட்டு, புதிய அரசியல் கலாசாரம் ஏற்பட இடமளிக்க வேண்டும். அதுவே ஜனநாயகம்.

அதைவிடுத்து, தமிழர்களுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை, தம்மால் எதற்குமே இயலாது என்ற பிறகும், பதவி மாத்திரம் எப்போதும் வேண்டும் என்பது பெரும் சுயநலமல்லவா? கடந்த காலத்தில் அரசுக்கு சார்பாக முழு உத்வேகத்துடன் இயங்கிவிட்டு, உருவாகிவரும் மாற்றத்தை ‘அரசின் பின்னணிக் குழு’ என்று கூறுவது அயோக்கியத்தனமான அரசியலாகும். உண்மையில், கடந்த பத்தாண்டுகள் பதவியில் இருந்த சிறீதரனுக்கு இன்னமும் அரசியலை கற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அவர் விலகி ஓய்வு பெறுவதே தமிழ் சமூகத்திற்கு அவராற்றும் உத்தம பணி.

தமிழ் மக்கள் மத்தியில் சிந்தனையும் அர்த்தபூர்வமானதும், முழுக்க முழுக்க மக்களுகாக தம்மை அர்ப்பணிக்கும் அரசியல் இயக்கத்திற்கான தேவை உணரப்பட்டு, அதற்கான சாத்தியங்கள் மலர்ந்திருக்கும் காலத்தில், இப்படியாக தொழில்சார் அரசியல்வாதிகளுக்கு பதற்றங்கள் ஏற்படுவது இயல்பானதுதான். எனினும் பல்வேறு நெருக்கடிகளை தாண்டி தமிழர் அரசியல் மாற்றங்களை காண்பது திண்ணம். அதுவே பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் சமூகத்தின் பெருத்த எதிர்பார்ப்புமாகும்.

– தமிழ்க்குரல் ஆசியர் பீடம்

24-02-2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

தலைமைப் பதவிக்காக சக உறுப்பினர்களை பலியாக்கும் சுமந்திரன்?

தலைமைப் பதவிக்காக கட்சி உறுப்பினர்களை பலியாக்கும், தம்மை அரசியலுக்கு அழைத்து வந்த தலைவர்களின் உணவிலே விசம் ...